கி.பி. 910ம் ஆண்டு சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து, கோட்டையாண்ட அரசியான செம்பியன்மாதேவியார், 'பெரிய பிராட்டி' என்றும் அழைக்கப்பட்டார். இவரின் கணவர் தான் கண்டாரதித்தன்.
மிக முக்கியமாக ஆதித்த கரிகாலன், ராஜராஜசோழன், குந்தவை நாச்சியார் உள்ளிட்ட தனது பெயர குழந்தைகளை சிறுவயது முதலே வளர்த்தெடுத்து, தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டச்சொல்லி அறிவுறுத்தி, மேலும் அனைத்து சிவன் கோவில்களையும் கற்றளியாக மாற்றச்சொல்லி தன் பெயரனுக்கு ஆன்மீக - அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் வாழ்ந்து ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

இவர் கட்டிய சிவன் கோவில் இன்றளவும் நாகை மாவட்டம் - கீழ்வேளூர் வட்டம் - செம்பியன் மகாதேவி என்ற அவரது பெயரிலேயே அமைக்கப்பட்ட ஊரில் பெரியகோவில் அமையப்பெற்றுள்ளது. அங்கே இவருக்கு தனிச்சிலையும் உண்டு. இவர் பிறந்த நாளான சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர நாளில், ஊர்மக்கள் சீர்வரிசை எடுக்கும் பெருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

செம்பியன்மாதேவியார் பிறந்த அதே கேட்டை நட்சத்திரத்தில் தான் அடியேனும் பிறந்தேன் என்பதிலும், அவரது கணவர் பெயரின் பின்பாதி தான் என் பெயரும் என்பதிலும், அவரது பெயர் கொண்ட 'செம்பியன்மகாதேவி' என்ற ஊருக்கு அருகிலேயே தான் நானும் படித்து வளர்ந்தேன் என்பதிலும் கூட எனக்கு பெருமையே.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment