கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவர் கருணாஸ் அவர்களை தேவரே இல்லையென மற்ற முக்குலத்தோர் அமைப்புகளெல்லாம் அவர் அகமுடையார் என்ற ஒற்றை காரணத்தால் பொய் பரப்புரை செய்தார்கள். இன்றைய நிலையில் தெருவுக்கு தெரு முக்குலத்தோர் கட்சிகள் நாளுக்கொன்றாக உருவாகிகொண்டே தான் இருக்கிறது. அதை தவிர அ.இ.பா.பி., மூ.மு.க., அ.இ.மூ.மு.க., அ.இ.மு.பா., ப.தே.க., என பல அமைப்புகள் எப்படியும் ஆளுக்கொரு சீட் ஜெயலலிதாவிடம் கிடைக்குமென வருட கணக்கில் நம்பிக்கொண்டிருக்க, அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்த கருணாஸ், திருவாடானை தொகுதியை தனதாக்கி கொண்டுள்ளார்.

கருணாஸ் வெற்றி பெறுகிறாரோ, தோல்வியடைகிறாரோ, அதைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்யவே தேவையில்லை. ஆனால், இத்தனை வருடங்களாக ’வேலுநாச்சியாரின் மறுபிறப்பே’யென ஜெயலலிதாவிற்கு துதிபாடி அம்மா அம்மாவென ஒரு தொகுதியாவது கிடைக்குமென ஆசை ஆசையாய் இருந்த அக்டோபர் மாத தலைவர்களின் கனவில் கல்லெறிந்து, தான் யாரென நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.
இப்போது கூட கருணாசை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கான காரணம் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் என்பதாலும், சிறந்த பேச்சாளர் என்பதாலும் தான். அதன் பிறகுதான் கருணாசின் சாதிய பின்புலம்.

சென்றமுறை நடிகர் சங்க தலைவராக இருந்த, சரத்குமாரின் இடத்தை தான் கருணாஸ் சமன் செய்ய போகிறார். கருணாஸ் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அவரது சாதி மக்களுக்கு பெரியளவிலான எந்த பயனும் இருக்கபோவதில்லை என்றாலும் கூட, இத்தனை வருடங்களாக மல்லுக்கட்டி அதிமுகவிற்கு முட்டு கொடுத்து கொண்டிருந்த முக்குலத்தோர் தலைவர்களின் இடத்தை தனதாக்கி கொண்ட கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment