இந்திர விழா! - 2016

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி'

- திருக்குறள்

வேளாண்மை இருபெரும் பிரிவுகளாகவே பன்னெடுங்காலமாய் மருத நிலத்தில் இருந்து வந்தது. ஒன்று உழுவித்த வேளாளர், மற்றொன்று உழுதுண்ட வேளாளர். ஆதி நிலமான குறிஞ்சியிலிருந்து முல்லையும், முல்லையிலிருந்து ஒரே காலக்கட்டத்தில் ஒருபுறம் நெய்தலும், மறுபுறம் மருதமும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னாலே தான் மனிதனின் வளர்ச்சியே உருவெடுத்தது. அப்படிப்பட்ட பெருந்திணைகளில் ஒன்றான மருதத்தின் கடவுளாக போற்றக்கூடிய இந்திரனை, உழுவித்த வேளாளர்களான அகமுடையார் போன்ற சமூகத்தினரும் போற்றி வணங்கி இருந்திருக்க கூடும். ஏனெனில் '...கணத்ததோர் அகமுடையார், மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினரே!' - பழங்நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் இந்த மொழியாடலில் கூட கணம் என்பது காவலையும், வேள் என்ற பதத்தையும் தான் குறிப்பதாக இலக்கிய சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த வேள், கணம் என்ற ஆய்வே அகமுடையார்களின் வேளாண் - காவல் போன்ற துறைகளை பற்றி மிக நீண்ட வரலாற்றை மீட்க உதவுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை முழுநிலவு திருநாளில் சோழாநாடான (எங்கள் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார் என்ற) காவிரிபூம்பட்டிணத்தில், 'இந்திர விழா' வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அது பலகாலம் விடுபட்டு, இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
ஏழாம் ஆண்டாக இம்முறை பூம்புகார் - சாயவனம் பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திர விழாவில், அடியேனும் இன்று கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டோடு, கோவிலெங்குமுள்ள இறையுருவ சிலைகளுக்கெல்லாம் அகல் விளக்கேற்றி சிவன் - முருகனுக்கு அர்ச்சனையும் செய்து, இந்திரனையும் வழிபட்டு வந்த இந்நாள் எனக்கு மற்றுமொரு சிறப்பான நாளாகவே அமைந்தது. விவசாயம் சார்ந்த குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்தேன் என்ற பெருமையையே, இதுபோன்ற பெருவிழாக்களே எனக்கு உணர்த்துகிறது.

உழுதுண்ட - உழுவித்த வெள்ளாளர்களான அனைத்து விவசாய பெருங்குடியினருக்கும், 'இனிய இந்திர விழா பெருநாள் வாழ்த்துகள்!'

- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment