ரஜினியெனும் மாபெரும் நடிகன்!


ஓரளவுக்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகமில்லாத தன்னுடைய படங்கள் வெளிவரும் போதெல்லாம், ”அரசியலுக்கு வருவேன்!” யென கீழ்த்தரமான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி, படத்தை பாமர ரசிகனுக்கு கொண்டு செல்லும் ஈனத்தனமான புத்தியை இந்த ரஜினி என்னைக்கு தான் விட்டு தொலைக்கப்போறாரோ தெரியவில்லை. கோடி கோடியாய் சம்பாரித்த பிறகும் ”வசூல் நாயகன்” என்ற புகழ் போதைக்காக ஆண்டவனை ஊறுகாய் போல தொட்டுக்கொள்ளும் ரஜினி, திராணி இருந்தால் அரசியலுக்குள் வந்து பார்க்கட்டுமே. இந்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை எத்தனை நாள் தான் தன்னந்தனி ஆளாக சுமந்து கொண்டிருப்பார்? பாவம்.

“எதுவாக இருந்தாலும் சரி அதை கடவுள் தான் முடிவு செய்வார். அது என்னவென்று எனக்கு தெரியாது. எதுவாக இருப்பினும் மக்களுக்கு நல்லதையே செய்வேன்!” இப்படி பேசியுள்ள ரஜினி, தன்னுடைய கதைகளில் உருவான வள்ளி - பாபா போன்ற படங்கள் ஓடாதென்று அவருக்கு கடவுள் சொல்லவில்லையா? ஏற்கனவே வெளிவந்த மாற்று மொழி திரைப்படத்தை ரிமேக் செய்து வடிவேலுவையும் - ஜோதிகாவையும் நம்பி சந்திரமுகியால் ரீ எண்ட்ரி கொடுத்த போதும் கூட, ”இனி படம் நடிப்பதை நீ நிறுத்திக்கொள்” என கடவுள் ஏதும் சொல்லவில்லையா? சரி அது போகட்டும். ஏதோ மக்களுக்கு நல்லது செய்வாதாக கூறியுள்ள ரஜினி, இது வரையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்ன செய்தார் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இதுவரையில் அப்படி எந்தவொரு ஆணியையும் அவர் பிடுங்கவில்லை, இனியும் பிடுங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஒருவேளை தன்னுடைய இரு மகளுக்காக நல்லது செய்திருக்கலாமே ஒழிய, மக்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்பது தான் நிதர்சனம்.

”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது” யென்று சொன்ன ரஜினியை, அந்த ஆண்டவன் எப்படி காப்பாத்துவார்? ஏனென்றால் அவர் இப்படி ஆண்டவனை அடிக்கடி சொல்லும் போதெல்லாம் அது தோல்வியில் தானே முடிந்திருக்கிறது என்று அந்த ஆண்டவனுக்கு தெரியாதா? தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாதுன்னு ரஜினி சொன்ன பிறகும் ஜெயலலிதா இரு முறை முதலமைச்சர் ஆனார் என்பதும், அதே ஜெயலலிதா சமீபத்தில் ஆட்சியிலிருக்கும் போது கைதாகி ஜாமீனில் வந்த போது, இதே ரஜினி வாழ்த்துகள் சொல்லி கடிதம் எழுதிய போதும், அந்த கடவுளுக்கே ரஜினியின் கோமாளித்தனங்கள் கோபத்தை ஏற்படுத்திருக்காதா?

அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு என்பது ஒரு மனிதனின் வாழ்வியல் படிநிலை. அப்படி பார்த்தால், சராசரி மனிதனின் கடைநிலை என்பதுஆன்மீகமே. அந்த கடைநிலையில் இருக்கும் ரஜினி, ஆண்டுக்கொரு முறை இமயமலை பக்கம் போனால் மட்டும் இறைவனாகவா ஆகிவிட போகிறார்? எந்த இறை அவதாரம், தன் படம் வரும் போதெல்லாம் புகழ் போதைக்காக அரசியலுக்கு வருவேனென ஊரை ஏமாற்றி இருக்கிறது? ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் தான் நிற்க்கும் ஒரு எம்.எல்.ஏ தொகுதியை வெற்றி பெறுவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிருக்கும் என்பது தான் எதார்த்தம்.

தன்னுடைய படங்கள் வரும்போதெல்லாம் தன் ரசிகர்களை உசுப்பேற்றி கேவலமானதொரு அரசியலை அரங்கேற்றும் இந்த ரஜினிக்கு, திரையில் நடிக்க வருகிறதோ இல்லையோ நிச்சயமாக திரைக்கு வெளியே நன்றாகவே நடிக்க வருகின்றது. அரசியலுக்கும் இந்த நடிப்பு தான் தேவையென்பதால் கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏனென்றால் தமிழர்கள் ஏமாற காத்து கொண்டிருக்கின்றார்கள். எது எப்படியோ, எம்பெருமான் திருமுருகா! இந்த லிங்கா படம் ப்ளாப் ஆக வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment