ஜோதிடமும் - நீயா? நானா? கருத்துகளமும்!

நேற்றைய நீயா? நானா?வில், 2014ம் ஆண்டின் 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்களை பற்றி விவாதம் செய்யப்பட்டது. அந்த விவாதத்தில், நம்ம ராசி விருச்சிகத்தை பற்றியும் நல்லாத்தான் சொன்னாய்ங்க. ஆனால், ஜோதிடர்களாக பங்கேற்ற ஒருதரப்பினர்களுக்கு இடையேயுள்ள கருத்து மோதல்கள், பலருக்கு குழப்பத்தைத்தான் ஏற்படுத்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒருராசிக்கு ஒருத்தர் இந்த வருசம் நல்லாருக்கும்ன்னு சொல்றதை, இன்னொருவர் அந்த ராசிக்கு இந்த வருசம் நல்லாவே இருக்காதுன்னு சொல்றாரு. இப்படி நேரெதிர் கணிப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும் சிலர், ஜோதிடர்கள் தொலைக்காட்சி / நாளிதழ் / மாத இதழ் / வார இதழ் போன்ற ஊடகங்களில் செய்யும் சிலவற்றை சுட்டிக்காட்டி அது தவறென்று மிக வெளிப்படையாக பதிவு செய்தனர்.

இந்த பொதுப்பலன்கள் என்பது எல்லா ராசிக்காரகளுக்கும் அப்படியே பொருந்துமா என்று கேட்டால், கண்டிப்பாக 90% பொருந்தப்போவதில்லை. வேண்டுமென்றால், நமக்கு விருப்பமான செய்திகளை மட்டும் நம்மோடு பொருத்தி, சந்தோசமும் - ஆறுதலும் அடையலாம். ஆனால், அது உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் ஏழரை கோடி மக்கள் தொகையில், ஏறத்தாழ ஒரே ராசிக்காரர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருக்க வாய்ப்புகளுண்டு. அப்படி அந்த ஐம்பது லட்சம் பேருக்கும் ஒரேவிதமான பலன்கள் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதானே எதார்த்தம். அதனால்தான் இந்த பொதுபலன்கள் எப்போதுமே, அனைத்து தரப்பினருக்கும் ஒத்துபோவதில்லை. குறிப்பாக, ஒரே வீட்டில் இரட்டையர்களாக பிறக்கும் இரு குழந்தைகளுக்கே, ஒரே மாதிரியான பலன்கள் அமைவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

ஜோதிடத்தின் மீதும் - ஜாதகத்தின் மீதும் பெரும்பாலோனோருக்கு விருப்பம் உண்டு. ஆனால் சிலர் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. எப்போதுமே, எதிர்காலத்தை தெரிஞ்சிக்கிறதுல எல்லோருக்கும் ஓர் ஆர்வம் இருக்கு. ஜாதகம் என்பதே நமக்கு சாதகமானவற்றை தெரிந்து கொள்ளத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், பரிகாரம் என்ற பெயரில் அதை ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள்.


பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கணிதம். மேலும் அது அற்புதமான கலையும் கூட. அந்த கலையை அரைகுறையாக கற்றுக்கொண்டவர்கள் தங்களை. மிக தேர்ந்த ஜோதிடர் போல விளம்பரப்படுத்தி கொண்டு, தவறான கணிப்புகளை சொல்லி வியாபார நோக்கில் கொண்டு சென்றதாலேயே, ஜோதிடம் என்பது கேலிப்பொருளாகவும் - கேளிக்கை பொருளாகவும் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது உண்மையே. அதை தவறான பாதையில் பணம் சம்பாரிக்கும் நோக்கோடு செயல்படும் ஜோதிடர்கள் வேண்டுமென்றால் போலியாகவும் - பொய்யர்களாகவும் இருக்கலாம். ஒருபோதும் ஜோதிடம் பொய்யாக போவதில்லை. அதை வைத்து பரிகாரம் என்ற பெயரில் பிழைப்பு நடத்தி, வயிறு வளர்க்கும் சில கோமாளிகளால் தான், மிகச்சிறந்த கலையான ஜோதிடமும் இன்று விவாதப் பொருளாக்கப்பட்டு விட்டது என்பதை நினைக்கையில் கோபமும் - சிரிப்பும் கலந்தே வருகிறது.

ஆனிப்போய் ஆடி வந்தா டாப்பா வருவேன்னு பட்டிக்காட்டு ஜோசியரு யாரும் எனக்கு சொல்லல. ஆனால், சித்திரை மாசம் முதல் டாப்பா இருக்கும்ன்னு பட்டினத்து ஜோசியரு என்கிட்ட சொல்லிருக்காரு. ;)

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment