கடம்பூர் தரிசனம்!

கந்தா கடம்பா கதிர்வேலா என்ற சொற்தொடரிலுள்ள கடம்பா என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடப்போய், நிறைய புதுப்புது தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் நீட்சியாக, கடம்பூர் என்ற ஊரை பற்றியும் தேடி, அங்குள்ள இரு (மேலக்கடம்பூர் - கீழக்கடம்பூர்) சிவாலயங்களை இன்று மாலை சென்று வழிபட்டும் வரமுடிந்தது. இந்த இரு கோவில்களும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் வரக்கூடிய முக்கிய இடமாகும். இங்கே தான் வந்தியதேவன் ஒரு முக்கிய நபரை சிறை வைத்தாராம். மேலும், இராஜராஜசோழனும் இங்கு வந்து இரகசிய முகாம் அமைத்து முக்கிய பேச்சுவார்த்தைகளும் நடத்திருக்காராம். அருகருகே உள இந்த இரு ஊர் கோவில்களிலும் சுரங்கம் இருப்பதும், அது தஞ்சாவூருக்கும் - கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும். மேலும், கரக்கோவில் எனும் வகைப்படுத்தப்பட்ட கோவில்களில், இந்த மேலக்கடம்பூர் கோவில் மட்டும் உலகில் உள்ளது என்பது பெருமைக்குரிய விசயமாகும். தேர்வடிவ கோவில் இது. இங்கே எமனும் இருக்கிறார். பிரம்மா - விஷ்ணு - வலம்புரி விநாயகரோடு எம்பெருமான் முருகனும் இருக்கிறார். வேல் மட்டுமல்ல, தவமிருந்து வில்லும் - அம்பும் கொண்டு வேலோடு என் வேலவன் வீற்றிருக்கும் தலமிது. சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் மேலகடம்பூர் இருக்கிறது. சென்ற வாரம் தான், பொன்னியின் செல்வனை எழுதிய கல்கியின் மகனும்/பேரனும் இந்த கோவில்களுக்கு வந்து படமெடுத்து, தகவல்களை சேகரித்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment