ராஜராஜசோழன் பற்றி தி தமிழ் ஹிந்து!

ராஜராஜ சோழனை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது பெரும் தவறு.
- தி தமிழ் இந்து.

ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நாளைத் தஞ்சையில் ஆண்டுதோறும் தமிழக அரசே நடத்திவருகிறது. அவ்விழாவில் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளர்களாக இருக்கும் தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவிதை பாடி, பட்டிமன்றம் நடத்தி, பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால், சில வருடங்களாக ராஜராஜ சோழன் அரசின் ஆதரவை மட்டுமின்றி மக்களின் ஆதரவையும் பெற ஆரம்பித்திருக்கிறார்.

மாநகரின் சுவர்களில் மட்டுமல்லாது, பிரதான சாலைகளிலிருந்து விலகிக் கிடக்கும் கிராமங்களிலும்கூட ராஜராஜனின் பிறந்த நாளைக் கொண்டாட அழைப்பு விடுத்து விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விளம்பரப் பணிகள் ஒரு மாத காலத்துக்கு முன்ன தாகவே தொடங்கிவிட்டன. அவ்வாறு அழைப்பு விடுப்ப வர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி சாதிய அடிப்படையில் இயங்கும் அமைப்புகள்தான்.

விபரீத நோக்கம்

இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடிச் சூழலில் வறுமைக்கோட்டைத் தொட்டும் தாண்டியும் சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் இடைநிலைச் சாதிகள், தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள வரலாற்று ஆளுமைகளைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்திருக் கின்றன. தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மன்னர்களின் பெயர்களைச் சொல்லி விடுதலை உணர்வு ஊட்டப்பட்டது. ஆனால், இன்று ஒவ்வொரு சாதியும் சரித்திரத்தில் தமது கொடிவழியில் ஒரு மன்னனைத் தேடிக்கொண்டிருப்பது விடுதலை உணர்வால் மட்டுமல்ல, அதில் விபரீதமான நோக்கமும் கலந்திருக்கிறது. சாதிய அடிப்படையில் மக்களை ஒருங்கிணைத்து அரசியல் பேரங்களில் லாபம் ஈட்ட விரும்புவோரே இந்த வரலாற்று நாயகர்களை உரிமை கொண்டாட வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கையுடன் இணைந்து செயல்பட முன்வரும் சாதிகளுக்கான வரலாற்றுப் பெருமைகளை ஆராய்ச்சியாளர்கள் என்ற பெயரில் இயங்கும் இந்துத்துவவாதிகளே உருவாக்கியும் கொடுக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர் கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டு, அது தடை செய்யப் படும் நிலைவரைக்கும் வந்தது. அதற்கு மாற்றாக, பாண்டி யர்களை மற்ற சாதிகளோடு இணைத்து அடையாளம் காட்டும் ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணமே உள்ளன. அரசாண்ட வம்சங்களின் அடிமுடி தேடும் வரிசையில் இப்போது சோழர்களின் முறை வந்திருக்கிறது.

ராஜராஜ சோழன் எந்த இனக் குழு?

ராஜராஜ சோழன் வரலாற்று உணர்வு நிரம்பப் பெற்றவன். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி செய்த ஆண்டு களையும் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போர்களையும் கால வரிசைப்படி கல்வெட்டுகளில் குறித்துவைக்கும் வழக்கம் ராஜராஜனின் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.
மேலும், பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துப் பாணியைத் தவிர்த்துவிட்டுப் புதிய தமிழ் வடிவத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டதும் அவன் காலத்தில்தான். கல்வெட்டுகளின் மெய்ப்புகழில் போர்களைக் குறித்த ராஜராஜன், தாம் எந்த இனக் குழுவைச் சேர்ந்தவன் என்று குறிக்கவில்லை.
ராஜராஜனுக்கு மிகத் தெளிவான சமய அடையாளம் உண்டு. அவன் சைவ சமயத்தினன். எனினும், அவன் பிற சமயத்தாரையும் ஆதரித்தான். ஆனால், அவனுக்கு சாதி அடையாளம் வெளிப்படையாக இல்லை. ராஜராஜனின் பெயருக்கு முன்னால் உடையார் என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது.

பெயருக்குப் பின்னால் தேவர் என்ற பட்டப் பெயர் இருக்கிறது. இவை மட்டு மல்லாது, சோழ அரசர்கள் மண உறவு கொண்ட சிற்றரசர்களின் பெயர்களும் ஏதாவது ஒரு இனக் குழுவோடு தொடர்புடையதாய் இருக்கிறது. ராஜராஜனின் மனைவியர் எத்தனை பேர் என்பதும் தெளிவில்லை. கல்வெட்டுகளில் மட்டுமே 15 பெயர்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவர்கள் அனைவரும் நிச்சயமாக ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று துணிந்து ஒரு முடிவுக்கு வரலாம்.

சோழர்கள் தனித்த இனக் குழுவாகத் தம்மைச் சுருக்கிக்கொள்ளாமல், தமக்கு அருகில் இருந்த பிறரோடும் மண உறவு பூண்டு தம்மை வலுப்படுத்திக்கொண்டதாலேயே தென்னிந்தியாவில் பேரரசை உருவாக்கிக் கட்டிக் காக்க முடிந்தது. இந்த மண உறவு முறை ராஜராஜனுக்குப் பல தலைமுறைகள் முன்பே வழக்கத்துக்கு வந்துவிட்டது.

ஆதித்த சோழனின் மனைவியான சோழ மாதேவியின் அன்னை அதாவது அவனது மாமியார் காடுபட்டிகள் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. முதல் பராந்தகச் சோழனின் மகளான அநுபமா என்பவர் கொடும்பாளூர் முத்தரையரை மணந்தார். அதே கொடும்பாளூர் அரச குடும்பத்தில் பிறந்த பூதி ஆதிச்ச பிடாரி என்பவரை முதல் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி மணந்தார். அதாவது, இரண்டு குடும்பத்தாரும் பெண் கொடுத்துப் பெண் எடுத்திருக்கிறார்கள். பராந்தகன் இப்படிப் பல்லவர்களோடும் முத்தரையர்களோடும் சேரர் களோடும் கொண்ட மண உறவின் காரணமாகவே பாண்டிய மன்னனை வெற்றி கண்டு இலங்கைக்குத் துரத்தினான் என்பது வரலாறு.

சோழர்களின் வழக்கம்

தாம் வென்ற பகுதிகளில் அங்கு ஏற்கெனவே ஆண்டவர்களை அதிகாரிகளாக நியமிக்கும் வழக்கமும் சோழர்களிடம் இருந்தது. சிற்றரசுகளின் வலுவான கூட்டாட்சியாகவே சோழப் பேரரசு விளங்கியது. சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் பெற்றிருந்த செல்வாக்கும் மதிப்பும் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படிக்கிற ஆரம்பநிலை வாசகர்களுக்கே தெளிவாகப் புரியும். சோழ நாட்டு எல்லைக்குள்ளேயே தனக்கென்று தனிக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்த பழுவேட்ட ரையர்கள் அரச குடும்பத்தோடு மண உறவு கொள்ளும் அளவுக்கு முன்னுரிமை பெற்றிருந்தனர். மேலும், சோழ நாட்டின் வட எல்லையை ஆண்ட சாளுக்கியர்களோடும் சோழர்கள் மண உறவு பூண்டனர். சாளுக்கியர்களுடன் கொண்ட உறவின் காரணமாகவே சோழப் பேரரசு அதன் இறுதிக் காலத்தில் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
வரலாற்றில் யார், எங்கு, எப்போது என்பதெல்லாம் மிகவும் மேலோட்டமான விவரங்கள். அரிச்சுவடிப் பாடம். அவற்றால் யாருக்கும் ஒருபோதும் எந்தப் பயனுமே இல்லை. ஏன் என்ற கேள்வி எழும்போதுதான் வரலாற்றுத் துறை நமக்கு மேலான பாடங்களை வழங்குகிறது. சோழர்கள் யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சோழர்களால் 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஒரு பேரரசை எப்படிக் கட்டியெழுப்ப முடிந்தது?

எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறோமே, அதே வழிமுறையைப் பின்பற்றி தமது அரசாட்சி எல்லைக்குள் வாழ்ந்த அனைத்து இனக் குழுக்களோடும் ஒருங்கி ணைப்பை உண்டாக்கித்தான் இடைக்கால சோழர்களின் சாம்ராஜ்யம் எழுந்தது. அந்த வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றியதால்தான் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கவும் முடிந்தது.

பல்லவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட கோயில் கட்டிடக் கலையை மேலும் செம்மைப்படுத்தியது, சைவத் திருமுறைகளைத் தொகுத்தது, கோயில் நிர்வாகத்தை அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்தியது, நெடுங்கடலில் கலம் செலுத்தும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது, அதன் துணைகொண்டு வணிகத்தை மேற்கொண்டது என்ற வரலாற்றுப் பெருமைகள் எல்லாம் பல்வேறு இனக் குழுக்களின் கூட்டுறவின் அடிப்படையில் மலர்ந்ததுதான். இந்த வரலாற்றுப் பாடத்தைப் புறந்தள்ளி, ராஜராஜனின் வெற்றியை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரால் அடையாளப்படுத்துவது தவறு.

செல்வ புவியரசன், வழக்கறிஞர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment