28 மே 2021

திரை விமர்சனம்: The Boy Who Harnessed the Wind



            'The Boy Who Harnessed the Wind' என்ற மிகச்சிறப்பான ஒரு திரைப்படத்தை இன்று பார்த்தேன். Parthiban SP என்பவருடைய நேற்றைய முகநூல் பதிவின் வாயிலாக இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்பதால் வெறும் டாக்குமெண்டரி போலில்லாமல் மனதிற்கு நெருக்கானதாகவே இப்படம் எனக்கு அமைந்திருந்தது. William Kamkwamba என்ற எளிய சிறுவனின் கனவும், பள்ளிக்கூடம் கூட முழுமையாக செல்ல முடியாதளவுக்கு வறுமையின் பிடியில் இருந்த 14 வயது சிறுவனுக்குள் இருந்த அறிவியல் ஆர்வமும், அவன் வாழ்ந்த சூழலும் கதைக்கு மிகப்பெரிய பலம். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தான் கதைக்களமென்றாலும் கூட, பல காட்சியமைப்புகள் தமிழ் மண்ணோடும் ஒத்து போனதாகவே உணர்ந்தேன்.

           William Kamkwambaவாக நடித்திருந்த Maxwell Simbaவின் நடிப்பும், அவனது தந்தையாக நடித்திருந்த Chiwetel Ejiofor தான் இப்படத்தின் இயக்குனர் என்பதால் அவரின் நடிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. இவர்களை தவிர படம் முழுக்க அனைத்துமே நிஜமாக நடப்பது போன்றே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படத்தில் வருகின்ற அனைவருமே அந்தெந்த பாத்திரமறிந்து ஊர்க்காரர்களாகவே வாழ்ந்திருந்தனர். காட்சியமைக்களும், கதைச் சூழலும், கதையில் வந்த மாந்தர்களும் மிக கச்சிதமாக பொருந்தி இருந்ததால், படம் முழுக்க அவ்வளவு எதார்த்தம் இருந்தது.

        இப்படத்தில் மிகப்பெரிய கதையெல்லாம் இல்லையென்றாலும் கூட அக்கா, தம்பி, அம்மா, அப்பா, மற்றுமொரு கைக்குழந்தையுடன் கூடிய ஒரு எளிய விவசாய குடும்பம், ஊர் பெரியவர், நண்பர்கள், வானம் பார்த்த பூமி, வறுமை சூழ்ந்த ஊர், ஏழைக் காதலுக்குள்ளும் இருக்கின்ற குடும்ப எதிர்ப்பு, ஏமாற்றும் அரசியல்வாதி, வறட்சியான சூழலில் வாழும் மக்கள், எப்படியாவது வாழ்ந்து விட வேண்டுமென்ற கனவுடன் ஓடும் மக்கள், சிறுவன் கூடவே ஓடி வரும் நாயும், வறுமையும் என எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட சூழல்கள் தான்.

        அக்காவை காதலிக்கும் வகுப்பு ஆசிரியர். அதை காரணமாக வைத்து தன் அறிவியல் அறிவிற்கு வலு சேர்க்கும் சிறுவன். பள்ளி நூலகத்தில் படித்த 'Using Energy' என்ற நூலை முதன்மையாக கொண்டு, வறுமையான தன் கிராமத்திற்கும், தன் குடும்பத்திற்கும் ஒரு சிறிய காற்றாலை உருவாக்கி அதன் மூலம் மின்சாரத்தை கொண்டு விளைச்சலையும், புது வெளிச்சத்தையும் கொண்டு வந்த உயரிய நோக்கம். இந்த மாதிரியான பாசிடிவ்வான அம்சங்களுக்காகவே இப்படத்தை அதிகம் ரசித்தேன்.

        மிக மோசமான சூழலில் வாழ்க்கையை தொடங்கினாலும் தன்னுடைய 14 வயதில் தன் கனவுகளை அறுவடை செய்து, சாதித்தக்காட்டிய அச்சிறுவனுக்கு இன்றைய வயது 33 என நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.
ஓர் உண்மை சம்பவத்தை திரைப்படமாக்குவது என்பது மிக சவாலான வேலை. இதற்கு முன், 2016ல் வெளிவந்த எம்.எஸ்.தோனி பற்றிய திரைப்படமான 'M.S. Dhoni: The Untold Story' என்னை கவர்ந்த ஒன்று. அதுபோல இது இல்லையென்றாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. 2019ல் வெளிவந்த இந்த 'The Boy Who Harnessed the Wind' என்ற திரைப்படமும் என் மனதிற்கு நெருக்கான ஒன்றாக அமைந்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக