29 மே 2021

தன் மீதான பாலியல் சர்ச்சைகளுக்கு முடிவுரை எழுத விருப்பமில்லாத வைரமுத்து!



    "கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி
அளிக்கிறேன். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்" என வைரமுத்து சொல்லிருப்பதை ஏற்க முடியவில்லை. அதென்ன காழ்ப்புணர்ச்சி? எத்தனை காலத்திற்கு தான், தன் மீதான காழ்ப்புணர்ச்சியென காரணத்தை சொல்லி தமிழர்களிடம் அனுதாபம் தேடி, வைரமுத்து ஒளிந்து கொள்ள முடியும்?

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எப்பொழுது தான் வைரமுத்து முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்பது பெரும் குழப்பமாகவே நீடித்து வருகிறது. இத்தனை ஆண்டுகாலம் எழுத்துலகில் இயங்கி கொண்டிருக்கும் வைரமுத்துவிற்கு மிகப்பெரும் கறையாக அமைந்து விட்ட, சின்மயி உள்ளிட்டோரின் இந்த #metoo சர்ச்சைகளை முடிவில்லா தொடர்கதை போல மாற்ற நினைக்கும் அவரின் போக்கு, ஒரு தவறான முன்னுதாரணம்.
 
    கேரளாவையும், மலையாளத்தையும் நன்கறிந்த எழுத்தாளர் ஜெயமோகனே, இந்த ஓ.என்.வேலு க்ரூப் என்பவரை அரைகுறை எழுத்தாளராகவே தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். இளையராஜா போன்றோரின் மெட்டுகளுக்கு பாடல் எழுத முடியாமல் திணறியவரான, ஓ.என்.வி பெயரில் வழங்கப்படும் விருதும், அவரது எழுத்துகளை போலவே ஒரு சுமாரான விருது தான் என ஜெ.மோ பகிரங்கப்படுத்துகிறார். அப்படியான சுமார் ரக விருதுக்கு மலையாளி அல்லாத ஒருவரான வைரமுத்து முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதில் ஒரு சின்னஞ்சிறு மகிழ்ச்சி இங்கே நிலவியது. அதை கூட வாங்க தகுதி வைரமுத்துவுக்கு இல்லையென, பாலியல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு பார்வதி நாயர் உள்ளிட்டோர் எழுப்பிய எதிர்க்குரல்களால் ஓ.என்.வி. கலாச்சார மையம், இந்த விருது விசயத்தில் பின்வாங்கிருக்கிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வைரமுத்து வெளிப்படையாக வாய் திறக்காத வரை, அவரை உத்தமர் என்ற அளவீட்டிற்குள் அடைக்க யாரும் முன்வரப் போவதில்லை. வாய்ப்புகள் கிடைக்காத வரை அனைவருமே இங்கே யோக்கியர்கள் தான். போக்சோ சட்டத்தில் கைதானவர்களின் மனசாட்சியை எழுத்தாளர் எஸ்.ரா. சொன்னது போல தட்டியெழுப்பி தீர விசாரித்தால் ஏதோவொரு சின்ன சபலத்தால், வேறொரு பாதைக்குள் சிக்கிக்கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை நம்மால் உணர முடியும்.

    ஒரு விருதை, யோக்கியனுக்கு கொடுக்க வேண்டுமா? திறமையாளனுக்கு கொடுக்க வேண்டுமா? என்பதே அவ்விருதுக்கான அளவீடாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சின்மயி போன்றோர் கிளப்பிய பாலியல் புகார்களால், இதுவரை வைரமுத்துவுக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருதுகள் உள்பட அனைத்து விருதுகளையும் மறுபரிசீலனை செய்து திரும்பி வாங்கிக்கொள்ள அந்தெந்த அமைப்புகள் நினைத்தால் அது முடியுமா? அது சரியா?

    சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பாலியல் குற்றவாளிகள் இன்று பெரும்பான்மை மக்களால் புனிதராக்கப்பட்டு விட்டனர். பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவராத வரை சினிமாவில் இயங்கும் 99% பேர் உத்தமர்களே. விதிவிலக்காக 1% பேர் இருக்கலாம். அவர்களை பேசி பலனில்லை. இன்றைய சினிமாவிலும், அரசியலிலும், யாரும் மகாத்மாக்கள் இல்லை. எல்லாருமே ஒருவகையில் திருடர்களே. கொள்கை, கதை, கற்பு என அவரவர் தகுதிக்கேற்ப களவாடிக் கொள்கின்றனர். அவர்களுக்குள்ளான வித்தியாசமும் இவ்வளவு தான்.

    உப்பு சப்பில்லாத ஒரு விருதை கூட வாங்க விடாமல் செய்யும் நபர்களின் மூக்குகளை உடைக்கவாவது வைரமுத்து வாய் திறக்க வேண்டுமென்பதே பலரது விருப்பம். தவறை செய்வது கூட எளிது தான். ஆனால், பொதுவெளியில் அதை ஒத்துக்கொள்ளத் தான் மனவலிமை அதிகம் தேவை. சரியோ? தவறோ? வைரமுத்து இனியாவது இச்சர்ச்சைகளுக்கு ஒரு முடிவுரை எழுத வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக