22 மே 2021

மெரினாவும், அரசு இல்லமும் - ஓர் அரசியல் மோதல்!

        எம்.எல்.ஏ. ஒருவர் இறந்தாரெனில் அவரது உடலை புதைக்க மெரினாவில் இடம் கொடுக்க வேண்டுமென்பது எந்த சட்டத்திலும், இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் தகுதியுடைய பதவி. அமைச்சர்களுக்கு இணையான பதவி. அப்படியான எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவருக்கு அரசு இல்லத்தில் குடியிருக்க அனுமதி உண்டு. இது சட்டத்திற்கு உட்பட்ட மரபு.
 
        இந்த இரண்டையும் குழப்பிக்கொண்டு, என்னென்னமோ எழுதி கொண்டிருக்கின்றனர் மு.க.நூல் மு.க. ரைட்டப் வெறியர்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தல்...' என திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ்ப்பாடங்களும், 'ஆறடி மண் மூன்றடி மண்' என கணித பாடங்களும், 'பெருந்தன்மை, மேன்மக்கள், பாரம்பரியம்' என வரலாற்று பாடங்களும், 'வெட்கமே இல்லாமல் அந்த வீட்டில் எடப்பாடி இருக்கிறார்' என உளவியல் பாடங்களும், இணையமெங்கும் ஆன்லைன் கிளாஸ் போல மு.க. ஊடகவியலாளர்கள் பாடம் எடுத்து கொண்டிருக்கின்றனர்.

        கடந்த கால் நூற்றாண்டு கால அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களில் எடப்பாடி பழனிசாமியை தவிர மற்ற அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், அரசு ஒதுக்கும் வீடு அவர்களுக்கு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக, சென்னையை இருப்பிடமாக கொண்டிருக்காத ஒருவருக்கு அரசு மரபின் படி, ஒதுக்கப்பட்டிருக்கும் அரசு இல்லத்தில் தங்கினால், அவருக்கு சூடு சுரணை, வெட்கம், மானமெல்லாம் இருக்காது என எழுதும் மனம்பிறழ்ந்த ஆட்களின் பதிவுகளை பார்க்கும் பொழுது தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதவும் தோன்றுகிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம் எழுத்துகளில் கூட இல்லாதவர்கள் எப்படி திமுக காரர் என மார்த்தட்டி கொள்ள முடிகிறது?

        திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினே கடந்த கால கசப்புகளையெல்லாம் மறந்து இனி நாகரீகமான அரசியலை தமிழ்நாட்டில் செய்யலாமென முன்னெடுத்தால் கூட, இந்த மாதிரியான கட்சி ஆட்கள் விடுவதாக தெரியவில்லை.



பின்னிணைப்பு:


        எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் உள்ள ஒருவருக்கு அரசு இல்லம் ஒதுக்குவது அரசாங்க மரபு. அதற்கு பிச்சை என சொல்லுமளவுக்கு இறங்கி பேச ஆரம்பிக்கின்றனர். மு.கருணாநிதியோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட முடியாது தான். ஆனால், அப்படியான ஒப்பீட்டைத்தான் அவர்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி இல்லையெனில், எடப்பாடி பழனிசாமியோடு தான் மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டு கொண்டிருக்கின்றனர் என பொருள் கொள்ள வேண்டும்.

        மெரினா விசயத்தில் ஜெயலலிதாவின் மரணம் வரை திரும்ப தோண்டி எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஒருவேளை ஜெயலலிதா இறந்த பொழுது, அதிமுக ஆட்சியில் இல்லாமல், திமுக ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் நீதிமன்றம் வரை சென்று தான் மெரினாவில் இடம் வாங்கிருப்பார்கள் அதிமுகவினர். உண்மையாகவே இதுதான் நடந்திருக்கும். ஏ1 குற்றவாளிக்கு எப்படி மெரினாவில் இடம் கொடுக்கலாமென அனைத்து சேனல்களும் நேரலை விவாத நிகழ்ச்சிகளை நடத்திருக்கும்.

        இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஒன்று புரிகிறது. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறதென வெகுநாட்களாக கட்டமைக்கப்பட்ட போலி பிம்பமானது, ஸ்டாலினாலும், எடப்பாடி பழனிசாமியாலும் உடைபட்டு இருக்கிறது என்பதும் உண்மையாகிருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக