27 மே 2021

தமிழ்நாட்டரசு நடவடிக்கை எடுக்குமா?

        அனைத்து கடைகளையும் அடைக்க சொல்லி, ஊரடங்கை நீட்டிக்கவும் ஆலோசனை செய்கிறது தமிழ்நாடு அரசு. 100க்கு 95% வணிகர்களின் கடைகள், வாடகைக்கு தான் செயல்படுகின்றன. கடையை, திறந்தாலும், திறக்காவிட்டாலும் வாடகையை வசூலிக்கும் வணிக வளாக உரிமையாளர்களிடம் எப்படி வாடகையை கொடுப்பது? நாள் தவணைக்கு கடன் வாங்கி கடை நடத்தும் வணிகர்களுக்கு என்ன மாதிரியான நிவாரணத்தை தமிழ்நாட்டரசு வைத்திருக்கிறது?
 
        பத்திரிகையாளர்கள் எல்லாம் எந்த வகையில் முன்கள பணியாளர்கள் ஆக்கப்பட்டார்களென தெரியவில்லை. கூடவே, அவர்களுக்கு நிவாரணத் தொகையையும் உயர்த்தி கொடுத்திருக்கிறது தமிழ்நாட்டரசு. ஆனால், அவர்களை விட, மாத சம்பளம் கூட வாங்க முடியாத பல்வேறு துறைகளை சார்ந்த தகுதியான பலதரப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை ஒதுக்கப்படாமல், தவித்து கிடக்கின்றனர் என்பது வேறு கதை.

        அண்டை மாநிலங்களிலெல்லாம் மின் கட்டணத்தை ரத்து செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டிலோ, இந்த ஊரடங்கு காலதிலும் மாதாமாதம் கட்டணம் செலுத்த சொல்கிறது தமிழ்நாட்டரசு. பெருந்தொற்று காலமென்பதால், இந்த மாத மின் கட்டணத்தொகைக்கு பதிலாக, சென்றாண்டு இதே மாதத்தில் அளவிடப்பட்ட மின் கட்டணத்தையே செலுத்தலாமென சொல்லிருக்கிறது மின்வாரியம்.

        எடுத்துக்காட்டாக சென்றாண்டில், ஏ.சி. பயன்படுத்தி கொண்டிருந்த ஒரு வீட்டிற்கு மூவாயிரம் மின்கட்டணம் வந்திருக்கிறது என எடுத்து கொள்வோம். ஆனால், இந்தாண்டு அந்த ஏ.சி. பழுதான காரணத்தினாலோ வேறுசில காரணங்களிலோ அதை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது, அதே மூவாயிரம் ரூபாயை மின் கட்டணமாக இப்பொழுதும் அவர்களை செலுத்த சொல்வது சரியா? இதே சூழ்நிலையில் வாடகை வீட்டில் வசிப்போரின் நிலைமை இன்னும் மோசம். சென்றாண்டு அதே வீட்டில் குடியிருந்தோரின் மின் கட்டணமும் இவர்களது கட்டணமும் ஒரே அளவீட்டில் இருக்கவும் வாய்ப்பில்லை. இந்த மாதிரியான பல குழப்பங்களை தவிர்க்க, பெருந்தொற்று காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்ய தமிழ்நாட்டரசு முன்வர வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக