24 டிசம்பர் 2015

பீப் பாடலுக்கெதிரான போராளிகள்!

தாய்மையின் அடையாளத்தையே பாடலின் வரிகளில் சேர்த்த சிம்பு கண்டனத்து உரியவர் தான். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக கைது - சிறை என்ற நிலையெல்லாம் தேவையேயில்லை. அந்த பீப் பாடலில் சம்பந்தப்பட்ட அனிருத் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த பீப் பாடலை உருவாக்கியதில் பாதி பங்கு, இசையமைத்த அனிருத்துக்கும் உண்டு. ஆனால் அவரை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

மாதர் சங்கம் போன்ற பெண்ணுரிமை போராளி சங்கங்களெல்லாம் பீப் பாடலுக்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவத்தை பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் வாரமொருமுறை பாலியல் வன்புணர்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதையெல்லாம் செய்திதாள்களின் ஏதோவொரு மூலையில் போடப்பட்டுள்ளதை எளிதாக கடந்து விட்டு ஒரு நடிகனிடம் ஏன் இவ்வளவு மல்லுக்கட்டுகிறீர்கள்?

தான் செய்ததது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்ட சிம்பு மற்றும் அவரது சார்பாக சிம்புவின் பெற்றோர்களும் ஊடகங்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிய பின்னும், போராளிகள் சங்கங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதும் புரியவில்லை. விஜய் டிவியின் நீயா நானாவில் இதை ஒரு விவாத பொருளாக எடுக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் என தெரிகிறது.
தன்னுடைய தவறை ஒப்பு கொண்டு பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட பின்பே அந்த தவறின் வீரியத்தை சிம்பு உணர்ந்திருப்பார். இனி ஒருபோதும் அவர் இதுபோன்ற தவறை செய்ய மாட்டார் என உறுதியாக நம்பலாம். தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட பின்னும் தனிப்படைகள் அமைத்து கைது செய்வேனென மனரீதியான தாக்குதல்களை மதரீதியாகவும் சிலர் செய்கிறார்கள். அன்பும் கருணையும் தான் அனைத்து மதங்களின் அடிப்படை. எனவே, சிம்பு என்ற நபரை மன்னித்து விடுங்கள் மனிதர்களே!

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக