06 நவம்பர் 2017

கார்ட்டூன் மட்டுமல்ல; கந்து வட்டியும் கூட வன்மம் தான்!






இந்த ஒரேவொரு கார்ட்டூனுக்காக பாலா கைது செய்யப்பட்டிருக்கிறார்; இப்போது இதை ஓராயிரம் பேர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது எத்தனை பேரை கைது செய்ய போகிறது இந்த பினாமி அரசு? நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கார்ட்டூனிஸ்ட் பாலாவின் பக்கம் நிற்கிறேன். இந்த கார்ட்டூனை வெளியிட்டதே கேவலமான மனநிலையென்றால், ஒரு குடும்பத்தையே கொலையிட வைத்தவர்களின் மனநிலையும் கேவலமான, அருவருப்புதான் என்ற எதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாகரீகம் அநாகரீகம் என்பது அவரவர் பார்வையை பொறுத்தது; சிலருக்கு லெக்கின்ஸ் நாகரீகமாகவும், பலருக்கும் அநாகரீகமாகவும் தெரியும். அது போலத்தான் இந்த குறைபாடும். கார்ட்டூன் என்பதே சொல்ல வருகின்ற கருத்தை பொட்டில் அறைந்தாற் போல் சொல்வதற்காக தான். இங்கே மயிலிறகோடு தேனை தடவியெல்லாம் சொல்ல முடியாது. அந்த படத்தில் சொல்லப்பட்டது தாழ்ந்த போனதாக தெரியும் பலருக்கு , ஒரு படத்திற்காக தேடிப்போய் கைது செய்திருக்கும் தாழ்வானது தான் என்பது புரியவில்லை என்பதும் ஆச்சர்யம் தான். இங்கே லெக்கின்ஸ் என்பது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. கலச்சாரம் வரை செல்லவேண்டியதில்லை; ஏனெனில் அன்று, ஆண்களுக்கு மேல் சட்டை அணியாத கோமணமும் கலச்சாரமாக தான் இருந்திருக்கிறது. அன்றைய பெண்களுக்கு மாரப்பு மட்டுமே கலச்சாரம். இதை இதோடு தொடர்பு படுத்தி வேண்டிய அவசியமில்லை. எது நாகரீகம்? எது அநாகரீகம் என்பதை பற்றிய அளவீடு காலத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் மாறிக்கொண்டே போகும். எடுத்துக்காட்டான அதை விடுத்து, கந்து வட்டியை பேசிய அந்த கருத்துப்படம் சரியானதே. கொசு தொல்லையாக இருந்தால் அதை தடவி கொடுக்க முடியாது; அடிக்கத்தான் வேண்டும். அதை அநாகரீகம் என நினைத்து கொசுவை மட்டுமே ஓட்டிக்கொண்டிருப்பது தான் உங்களுக்கு நாகரீகம் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.


நூறு வார்த்தைகள் சொல்ல வேண்டியதை ஒரு கருத்து படம் சொல்லும்; சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன? அதுபோல, பெரும்பாலானோரின் கருத்தை படமாக்கி இருக்கும் ஒருவரை கைது செய்திருப்பது அயோக்கியத்தனம். ஆளும் வர்க்கத்தை விமர்சனம் செய்யவே கூடாது என்பது காட்டாட்சியின் எடுத்துக்காட்டாகவே அமையும். சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் வேண்டுமென்றால் குறை காண முடியும்; சொல்லிய கருத்தில் குறையே இல்லை. படைப்பாளிகளை கைது செய்தால் மட்டுமே, வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்தி விட முடியாது என்பதை காலம் உணர்த்தும்.  அமெரிக்கா பற்றிய கார்ட்டூனில் கூட அம்மணமாக்க பட்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதனால் அங்கே இதுபோன்றதொரு கைது நடக்கவில்லை.




கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கருத்து படம் அநாகரீகமாக தெரிந்தால், ஒரு கருத்து படத்திற்காக கைது செய்திருக்கும் இந்த அரசின் போக்கு பச்சை அநாகரீகம் தானே? கருத்தை கருத்தால் எதிர் கொள்ள பக்குவம் வேண்டும். வானாளவிய அதிகாரம் இருப்பதாக இவர்கள் நினைத்து கொண்டால், அந்த அதிகாரத்திமிர் உடைத்த்றியப்படும். கந்து வட்டி கொடுமையால் பல முறை மனுகொடுத்தும் கண்டு கொள்ளாமல், மெளனித்திருந்தது யார்? இந்த மெளனத்திற்கு பின்னால் பலர் இருக்கின்றனர். அதில் முதன்மையான மூவரை மட்டுமே பாலா சுட்டிக்காட்டிருக்கிறார். தீக்குளித்து கொண்ட பகுதியையே அவசரகதியில் சுவர் எழுப்பி அடைத்தது எதனால் என்பதை யோசித்தாலே புரியும்; இவர்களுக்கு கந்து வட்டி கொடுமையை விட, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நம் வாசலில் கொளுத்திக்கொள்ள கூடாது என்பது மட்டும் தான் என்ற கையாலாகத தனம் புரிய வரும். அந்த கையாலாகத தனத்தை தான் பாலா படத்தில் வரைந்திருக்கிறார் என்று பார்க்கிறேன். இந்த கைது விசயத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை ஆதரிப்பது தான் எதிர்கால நலனுக்கானதாக இருக்க கூடும்.

வடக்கத்திய ஊடகங்கள் வரைக்கும் கொண்டு சேர்த்த அரசுக்கு பாலா கடமைபட்டவராகிறார். 

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக