21 மார்ச் 2017

ராயல்டி விசயத்தில், ராகங்கள் மட்டுமல்ல; ராஜாவும் புதிது தான்!




எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.

”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”

இது அந்த பாடலிள்ள முதல் சரணத்தில் வருகின்ற வரிகள். இந்த நான்கு வரிகளிலேயே இசையின் எதார்த்தம் அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் என்ற இம்மூவரின் கீர்த்தனைகளையோ அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தமிழிசை மும்மூர்த்திகளான, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரின் கீர்த்தனைகளையோ, பின்னாட்களில் தமிழிசை நால்வராக இணைக்கப்பட்ட பாபநாசம் சிவன் போன்றோரின் கீர்த்தனைகளையோ பயன்படுத்தாமல், இத்தனை பாடல்களை இளையராஜாவால் இசையமைத்திருக்க முடியுமா? என்பது அவருக்கே வெளிச்சம்.

”ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது”

இதுவும், அதே பாடலிலுள்ள இரண்டாவது சரணத்தின் வரிகள். இந்த பாடலில் கூட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை, இளையராஜா சுட்டிக்காட்டிருப்பார். இப்படியான இசையின் எதார்த்தத்தை 80களிலேயே நன்றாக புரிந்து வைத்திருந்த இளையராஜா, இன்றைய இசையமைப்பாளர்கள் போல வெளிப்படையாகவே காப்பியடிக்காமல் கீர்த்தனைகளில் காப்பியடிப்பதெல்லாம் ராயல்டியில் வருமா? வரதா? என்பதை அவரது மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி போன்ற மூத்த இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை காப்பியடித்த பாடல்களும் இளையராஜாவின் ஹிட்லிஸ்டில் இன்றளவும் இருக்கிறது என்பதை இளையராஜா உணராதவர் கிடையாது; அதை ஒருசில மேடைகளில் அவரே சொல்லியும் இருக்கிறார். அப்படிப்பட்ட இளையராஜா இப்போது சமீப காலமாக ராயல்டி விசயத்தில் மல்லுக்கட்டுவது தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த ராயல்டி விசயத்தில் இளையராஜாவை எதிர்த்தால், ”ரஹ்மான் மட்டும் யோக்கியரா? அவரை மட்டும் ஏன் யாரும் குறை சொல்லவில்லை? விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்த இளையராஜவை தான் இச்சமூகம் வஞ்சிக்கிறது!” என சிலர் வகுப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். இசைக்கு சாதியுமில்லை; மதமுமில்லை; அது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும், கலையாகவும் தான் ஆதிகாலம் தொட்டே விளங்கி வருகிறது.

இளையராஜாவின் பாடல்கள் தான் மக்களிசை; மண்ணின் இசை. அதனால் தான் பெரும்பாலான சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. ரஹ்மானின் பாடல்கள் அப்படியல்ல; இன்றைய லெக்கின்ஸ், ஜூன்ஸ் போல, அது மேற்கத்திய இறக்குமதியின் கலவை. ஆனால் இளையராஜாவின் இசையோ வேட்டி, புடவை போல; இம்மக்களின் மனதோடு நெருக்கமானதாக இன்றளவும் அவர்களுக்குள் இணைந்திருக்கிறது. தொலைத்தொடர்பு வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்ட இக்காலத்தில், செல்போன் இல்லாதவர்களே அநேகமாக இருக்க முடியாதென்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிராமம், நகரம் என எவ்வித பாகுபாடுமின்றி செல்போன்களும், அதன் வழியாக இசையும் இங்கே முழுவதுமாக பரவிக்கிடக்கிறது. திரையிசை சம்பந்தமாக இங்கேவொரு கணக்கெடுப்பு நடத்தினால், இளையராஜாவின் பாடல்கள் சேமிக்கப்படாத செல்போன்களோ, மெமரி கார்டுகளோ இருக்கவே முடியாதென்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

சமூகத்திலுள்ள அனைத்து நிலை மக்களின் மனதோடும் நெருங்கிப்போன இசைக்கு யாரிடம் ராயல்டி கேட்க முடியும்? சமீபமாக பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் இசையமைப்பாளர்களே, உரியவரிடம் அனுமதி வாங்குவதில்லை. இன்னும் சில ரீமிக்ஸ் பாடல்களுக்கு நீதிமன்றம் அளவுக்கு பிரச்சனை வந்தபோதும் கூட, அதையெல்லாம் வெகு எளிதாக தயாரிப்பாளர்களே சரி செய்து விடுகின்றனர். ”பொதுவாக இசையமைப்பாளர்கள் அனைவருமே, யாரோவொரு தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு தானே, குறிப்பிட்ட படத்திற்கு இசையமைத்து கொடுக்கிறார்கள்; அப்படியென்றால் அந்த இசைக்கான ராயல்டி, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு தானே சென்றடைய வேண்டும். இடையில் ஏன் இசையமைப்பாளர்கள் உரிமை கோருகிறார்கள்?” என கேட்கும் சாமானியனின் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக யாரும் பதில் சொல்லிவிட முடியாது.

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக, தன் அண்ணன் பாவலரோடு பொதுவுடைமை கொள்கைகளை தெருமுனை பிரச்சார பாடல்களாக உருவாக்கியும், அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தும் தானே, பின்னாட்களில் இளையராஜாவாக உருவெடுத்தார். அந்த தெருமுனை பரப்புரை பாடல்களின், மூலஇசை யாருடையது? அன்றைக்கு பிரபலமான கே.வி.எம்., எம்.எஸ்.வி., போன்ற இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட திரையிசைப்பாடல்களின் வரிகளை மாற்றியமைத்து தானே, தன் இசையாளுமையை அதே மெட்டுகளோடு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அன்றைக்கு தங்களது பொருளாதாரச்சூழலுக்கு கைக்கொடுத்த கே.வி.எம்., எம்.எஸ்.வி. போன்றோரின் இசைக்கு, அவர்கள் என்றாவது பாவலர் & கோ விடம் ராயல்டி கேட்டிருந்தால் நிலைமை என்னவாகிருக்கும் என்பதையும் இசைஞானி இளையராஜா சிந்தித்திருக்கலாம் என்பதே பலரது மனநெருடல்களாக இருக்கிறது.”இதற்கு மேலுமா அவர் சம்பாரிக்க வேண்டும்? அவரிடம் காசே இல்லையா? அவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை? அவரால் நாலுபேர் வாழ்ந்துட்டு போகட்டுமே” என்றெல்லாம் கேட்கும் எளியவர்களுக்கு, ராயல்டி பற்றிய உள்ளார்ந்த விசயங்கள் விளங்காமல் இருக்கலாம். ஆனால் இந்த ராயல்டி பிரச்சனையால், இளையராஜா பேசுபொருளாகி இருக்கிறார். பலரது ஏசுபொருளாகவும் மாறியிருக்கிறார். புகழின் உச்சத்தை என்றைக்கோ தொட்டுவிட்டு, இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக உச்சாணிக்கொம்பில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா, இந்த ராயல்டி விசயத்திலும் இன்னும் கொஞ்சம் பெருந்தன்மையாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

நகரமயமாக்கப்பட்ட போதும் கூட, அங்கே வசிக்கும் பெரும்பான்மையினரின் பூர்வீகம் ஏதோவொரு கிராமமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அரிச்சந்திர நாடகமோ, வள்ளித்திருமண நாடகமோ கூட இப்போது அரங்கேற்றுவது குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆடலும் பாடலும், ஆர்க்கெஸ்ட்ரா என இசை நிகழ்ச்சி இல்லாமல் எந்தவொரு கிராமத்தின் திருவிழாக்களும் முழுமையடைவதில்லை. சாமானிய இசை ரசிகர்களாக, எவ்வித பொருளாதார பின்னணியும் இல்லாமல் எத்தனையோ ஆர்கெஸ்ட்ரா குழுக்களிலுள்ள எளியவர்கள் அன்றைய இளையராஜாவின் பாடல்களால் தான் இன்றைக்கும் தங்களது பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இது தான் எதார்த்தம். அவர்களுக்கெல்லாம் இளையராஜா என்பவர் இசைஞானி மட்டுமல்ல, ”ஓர் தேவ தூதன்”, ”பிழைப்பை கொடுக்கும் கடவுள்”; அப்படியாகத்தான் நினைத்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ பேர், இளையராஜா என்ற ஒற்றை மனிதரால் நாள்தோறும், திருமண விழா, ஊர்த்திருவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள் என பல வடிவங்களில் பலன்பெற்று வருகிறார்கள். அவர்களுக்காகவது இசைஞானி, கெடுபிடிகளை தளர்த்தி இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம். இதன் மூலம் பணம் வேண்டுமென்றால் கிடைக்காமல் போகலாம்; ஆனால் முகம் தெரியாத எத்தனையோ பேரின் அழ்மனதிலிருந்து வெளியெழும் அன்பு கிடைக்குமே?! அதற்கு நிகராக வேறேதும் உண்டா இவ்வுலகில்? இந்த ராயல்டி விசயத்தில் இசைஞானியின் இசைவுக்காக தான் காத்திருக்கிறது, ஒட்டுமொத்த இசைப்பிரியர்களின் மனங்களும்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக