12 மார்ச் 2017

அரசியல் கூத்து!




போராளிகளுக்கான அரசியல் எது?


மணிப்பூரிலுள்ள தோபால் தொகுதியில் மொத்தமாக பதிவான 27271 வாக்குகளில், நோட்டாவிற்கு கூட 143 வாக்குகள் பதிவாகிருக்கிறது. ஆனால் இரோம் ஷர்மிளா என்ற பெண் போராளிக்கு வெறும் 90 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில், போராளிகளுக்கு மக்களாட்சியும் கை கொடுப்பதில்லை; அம்மண் சார்ந்த மக்களும் தோள் கொடுப்பதில்லை. ஹிந்தியாவில் அரசியல் செய்து வெற்றிப்பெற வேண்டுமென்றால், ஐஸ்வர்யா தனுஷ் போன்ற சிறுபான்மையினரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசியலில் தேசியக்கட்சிகளுக்கான வாய்ப்பு:

ஜெயலலிதாவின் மரணத்தால், கருணாநிதியின் உடல்நலக்குறைவால், வைகோ உள்ளிட்ட மநகூவினர் போன்றவர்களின் செயல்பாட்டால், தமிழ்நாட்டு அரசியலும் உத்திரப்பிரதேச அரசியல் போல குழம்பிய குட்டையாக மாறி இருக்கலாம். ஆனால், அந்த குட்டையில் ஹிந்திய மீனவன் என அடையாளப்படும் யாரும் மீன் பிடிக்க முடியாது. ஏனெனில், அரசியலில் மட்டுமல்ல; அனைத்திலுமே தமிழ்நாடு, தனி நாடு தான்! இத்தனை வருட திராவிட அரசியல் தோற்கும் நேரம், அந்த இடத்தை நிரப்ப தமிழ் தேசிய அரசியலே தன்னெழுச்சியாக மேலெழும். இத்தனை ஆண்டுகால ஹிந்தியத்தின் புறக்கணிப்புகளுக்கு ஆளான இம்மண்ணில், வேறெந்த ஹிந்திய தேசியமும் அவ்வளவு எளிதாக தலையெடுக்க முடியாது.

ஆர்.கே.நகர் அரசியல்:

லெட்டர் பேடு சாதி சங்கங்களெல்லாம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு செழிப்பாகத்தான் இருப்பார்கள். போஸ்டர், பேட்டி, அறிக்கையென பணத்தை வாங்கிக்கொண்டு கண்ட இடங்களில்லாம் பல்லிளிப்பார்கள். அநேகமாக, அதிமுகவிலுள்ள சசி அணியின் வேட்பாளரான தினகரனுக்கு தான், பல லெட்டர் பேடு அமைப்புகள் ஆதரவு கொடுக்க கூடும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் தான், புதிய ஐநூறு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக