02 ஏப்ரல் 2014

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!



உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல்  ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியை பிடிப்பதற்காக துரோகிகளின் தூண்டதலால்  மெய்க்காப்பாளன் கருத்தன் மூலமாக காட்டிக்கொடுக்கப்பட்டு மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிடும்போது அவர்களுக்கு ஆதராவாக கடைசிவரை நின்ற அனைத்து தரப்பட்ட மக்களான 500க்கும் மேற்பட்டோரை  ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சிகரமான மாபெரும் துயர சம்பவமும் இங்கேதான் அரங்கேறியது.

இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

ஆன்மீகப்பணியில் கிருத்துவம் - இசுலாம் - ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் - சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக