11 ஏப்ரல் 2014

திருமணம் என்ன பெரும்பிழையா?

மணமாகாத (மோடி)அவர் காமராஜர் போல கடைசிவரை தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என எண்ணினோம்.

- திரு. மு.கருணாநிதி



18ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருது சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டவர்களே; பூமரங் என்ற வளரி வீச்சு, கொரில்லா போர்முறை போன்ற பல்வேறு யுக்திகளை கற்றுதேர்ந்து, வெள்ளையனுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக ஜம்புத்தீவு பிரகடனத்தை வீரசங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் போர் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் தானே?

19ம் நூற்றாண்டில் என் தலைவன் தேசத்தந்தை நேதாஜி கூட எமிலி செனகலை காதல் திருமணம் தான் செய்து கொண்டார்; ஆனாலும், அவர் கொண்ட கொள்கைக்காக அந்நியனை விரட்டி தேசத்தை காப்பாற்ற இந்திய தேசிய ராணுவத்தையே கட்டியமைக்கவில்லையா?

20ம் நூற்றாண்டில் என் அண்ணன் பிராபகரன் கூட மதிவதனியை திருமணம் செய்து கொண்டார்; தமிழனின் புறநானூற்று வீரத்தை உலகளாவிய அளவில் வெளிக்காட்டி, உலகிலுள்ள போராளி இயக்கங்களில் முப்படையையும் உருவாக்கி எதிரிகளின் இனவழிப்பை எதிர்த்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டிமையக்கவில்லையா? 

படுக்கையறையை பற்றி பொதுமேடையில் பேச வேண்டியதன் அவசியம் என்ன? தாலி கட்டினாலே பிரம்ச்சர்யம் போய்டுமா என்ன? மோடி தனது திருமணத்தை முற்றிலுமாக மறைக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், தனிக்கட்டையென்றே சொல்லி இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது தானே? தாலி கட்டினாலும் அவர் தனிக்கட்டையாகத்தானே வாழ்ந்திருக்கிறார்.

என் கேள்வி, அவர் ஏன் திருமணம் செய்ததை மறைத்தார் என்பதை பற்றியல்ல... அவரது திருமணத்தை காரணம் காட்டி கீழான அரசியல் செய்வது ஏன்? திருமணமான அடுத்தநாளே தனியாக போயிருந்த கதைகள இங்கே ஏராளம் உண்டு. அவர் கல்யாணம் செய்ததால் காமராஜ் மாதிரி ஆட்சி செய்ய முடியாதா என்ன? அன்றைய தமிழகத்தின் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பென்று சொன்னது இதே வாய் தானே?

திருமணத்தை மறைத்ததவர் இன்று ஒத்து கொண்டு விட்டார்; அதை வரவேற்க வேண்டுமே தவிர, அதையே சொல்லி அவருக்கு மனவருத்ததை ஏற்படுத்த கூடாது. மேலும் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விசயம். அதை அரசியல் ஆக்குவது கேவலமான செயல் தானே? தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கையை பற்றி பேச இது சரியான தருணம் இல்லையென்று மோதி நினைத்திருக்கலாம். அவரது படுக்கையறையை விமர்சித்து என்னவாகி விட போகிறது? காங்கிரஸ் காரர்களுக்கும், காங்கிரஸோடு தான் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க போகிறோம் என்ற மனநிலையொடு இருக்கும் திரு கருணாநிதி போன்றோருக்கும், காமராஜர் ஓர் ஊறுகாய்... மற்றபடி சொல்வதற்கொன்றுமில்லை.

இந்த வயதிலும் மனைவி துணைவி யென்று குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தந்து கட்சி மேடையிலும் தனக்கருகே அவர்களை அமர வைத்து கொண்டும், இவ்விருவர்களுக்கு முன்னாடி ஏற்கனவே ஒரு திருமணத்தையும் செய்த நீங்கள், சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா என்ன? மணமாகாதவர்கள் மட்டும்தான் தேசத்தொண்டு ஆற்ற முடியுமென்ற தொனியில் நீங்கள் சொல்லிருப்பது நகைப்புக்குரியதாகவே பொருள் கொள்ளப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? அரசியலில் விமர்சனம் என்ற போர்வையில் படுக்கையறையை பற்றியெல்லாம் பொது இடத்தில் பேசுவது உங்களை போன்ற மூத்த அரசியல் தலைவருக்கு சரியான முறையா?

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக