07 ஏப்ரல் 2014

தரணியாண்ட தஞ்சை தொகுதி!


முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடைய தஞ்சாவூர் தொகுதி தேர்தல் பரப்புரையை நேரலையாக பி.ப 3.00 மணியிலிருந்து பி.ப 4.00 மணி வரை அந்த ஒரு மணி நேரமும் பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போல திமுக தலைவர் திரு கருணாநிதி உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள மட்டுமே சம்மட்டியடி விமர்சனம் செய்யும் செல்வி ஜெயலலிதா, தஞ்சாவூரில் மட்டும்தான் திரு டி.ஆர்.பாலுவை மட்டுமே முழுக்க முழுக்க விமர்சித்து கொண்டிருந்தார். திரு டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டு கொண்டிருந்தார்.

செல்வி ஜெயலலிதாவிடம் இல்லாத சொத்தா? அரசியலில் உள்ள ஒவ்வொருவருக்கும் எக்கசக்கமான சொத்து இருக்கத்தான் செய்கின்றது. வார்டு கவுன்சிலர் கிட்ட கூட இப்போதெல்லாம் வங்கி கணக்கில் கோடிகள் புரளும்போது திரு டி.ஆர்.பாலுவின் சொத்தை மதிப்பிட்டு கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. மேலும் அதை மட்டுமே பிரதான காரணமாய் சொல்லி செல்வி ஜெயலலிதா ஓட்டு கேட்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. திரு கருணாநிதிக்கு கொடுக்கும் அதே முக்கியவத்தையே திரு டி.ஆர்.பாலுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவின் நோக்கமும் புரிந்தது.

திரு டி.ஆர்.பாலுக்கு அடுத்து செல்வி ஜெயலலிதா பேசியது மீத்தேன் பிரச்சனையை மட்டும்தான். இத்தனை நாளாக வேளான்ஞானி தெய்வத்திரு நம்மாழ்வார் மேற்கொண்டிருந்த போராட்டத்தின் போதெல்லாம் மெளனியாக இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன புது கரிசனம்? மீத்தேன் விசயத்தில் திமுக மட்டுமே குற்றவாளியல்ல அதிமுகவுக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாகவே படுகிறது. எத்தனையோ முறை வெறும் கடிதங்களை மட்டுமே மத்திய சர்க்காருக்கு அனுப்பி கொண்டிருந்த செல்வி ஜெயலலிதா, ஏன் ஒரு முறை கூட மீத்தேன் பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதவில்லை?

மீத்தேன் விசயத்தில் டெல்டா மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் போரட்டம் அல்லவா அதிமுக செய்திருக்க வேண்டும்? சோழ நாடு சோறுடைத்து  என்ற வார்த்தையை மேடையில் பேசும்போது மட்டும் அலங்கரித்துவிட்டு நெற்களஞ்சியம் குப்பைமேடாவதை செல்வி ஜெயலலிதா வேடிக்கை பார்ப்பதேன்?


டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்களாக உள்ள திரு காமராஜோ, திரு வைத்தியலிங்கமோ, திரு ஜெயபாலோ ஏன் மீத்தேன் பிரச்சனை தொடர்பாக மக்களை சந்திக்கவில்லை? டெல்டா மக்களின் ஓட்டுகளை வாங்கித்தானே இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள ஆயினர்? அப்பறமும் ஏன் இவர்கள் மீத்தேன் தொடர்பாக வாயையே திறக்கவில்லை.

பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டு களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டை கூறுபோடும் திராவிட கட்சிகள் ஒன்றுக்கொன்று யாரும் சளைத்தவர்களில்லை. இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் ஒரே கொள்கை உடையவர்களே. எனவே, தஞ்சை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக என்ற திராவிட கட்சிகளுக்கோ, தமிழர் விரோத காங்கிரஸ் கட்சிக்கோ வாக்களிக்காமல் இருப்பதுதான் சரியான முறையாக இருக்கும். அதுதான் உணர்வுள்ள தமிழனாக, நேர்மையான வாக்களானாக நாம் செய்யும் கடமையாக இருக்கும். செய்வீர்களா...? நீங்கள் செய்வீர்களா?

ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக