10 டிசம்பர் 2017

இராமதேவரும் - முகமது நபியும்!

முகமது நபிகளை புகழ்ந்து கொண்டே சித்தர்களை தவறாக விமர்சிக்கும் எண்ணமுள்ளவர்கள் சித்தர்களில் ஒருவரான இராமதேவரின் வரலாற்றை தேடி படித்து உண்மை உணரலாம். எங்கள் நாகப்பட்டினத்திலிருந்து மெக்கா சென்ற மகான் இவர். யாகோபுவாக சிலகாலம் வாழ்ந்து பின்னாட்களில் இராமதேவராகவே அழகர்மலையில் ஜீவசமாதி ஆகிருக்கிறார்.
(நாகப்பட்டினம் - இராமதேவர் - காசி - சட்டநாதர் - மெக்கா - யாகோபு - முகமது நபி - அழகர்மலை...)

சிவனுக்கு வாழ்த்துகள்!

தமிழ்ப்பெருங்கடலில் அரங்கேற்றப்படும் திட்டமிட்ட மீனவ படுகொலைகளையும், பயமுறுத்தலையும் ஆய்வு நோக்கில் ஆராய யாரும் தயாராகவில்லை. கடற்படையும், விண்வெளித்துறையும் யாருக்கானது? பல மில்லின் கணக்கான தொலைவிலுள்ள புதுப்புது கிரகங்களை கண்டுபிடித்து, அங்குள்ள பிடிமணலை கூட எளிதாக எடுத்துவர முடியும் போது, ஏன் மீனவனுக்காக அந்த நுட்பத்தை இவ்வரசு பயன்படுத்தவில்லை? தென்னவனான பாண்டியனின் மற்றொரு பெயர் மீனவன் தான்; என்னவன் கடலோடும் நெய்தலும் எம் நிலமே; தென்னாடுடைய சிவனும் பாண்டியனே!

08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

02 டிசம்பர் 2017

பாம்பாட்டியாரின் புரட்சி வரிகள்!

பொய் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி
ஆடாய் பாம்பே! (09)
நாறும் மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினாலும் அதன் நாற்றம் போமோ?
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே! (65)
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ?
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையில் நின்று ஆடாய் பாம்பே. (88)
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ?
அஞ்ஞானம் போகாது மூடர்க்கு என்று ஆடாய்பாம்பே! (92)
சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதவிதமான தான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே!
(98)
பூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ?
பூமிவலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாமென்று துணிந்து ஆடாய் பாம்பே! (100)
- பாம்பாட்டியார்
(எளிய தமிழில் அமைந்துள்ள இப்பாடல்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டோருக்கு நன்றி!)

சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல்!




சொந்த ஊர் மக்களுக்காக குளம் வெட்டிக் கொடுத்த செய்தியைத் தமது பத்திரிகையில் ‘குளம் வெட்டிய கோ.சி.மணி’ என்ற தலைப்பில் அண்ணா பிரசுரித்த பின்னர், 'கோவிந்தசாமி சிவசுப்ரமணியன்' என்ற இவரது பெயரும் மாறிப்போனது. ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் திமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். கோவில் நகரமான கும்பகோணத்தை சீரமைத்த சிற்பியாக, அவர் பெயரைக் காலம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
எல்லா நாட்களிலும் அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி மக்களைப் பார்ப்பதற்கு உட்கார்ந்திருப்பார். பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன் எல்லாரையும் ஒரே மாதிரிதான் சந்திப்பார். அமைச்சராக இருந்த போதும் கூட சனி, ஞாயிறுகளில் தொகுதிக்குள் தான் இருப்பார். இதைச் சுட்டிக்காட்டி, "கோ.சி.மணியைப் போல எல்லா அமைச்சர்களும் இருந்துவிட்டால், தி.மு.க ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும்" என்று ஒருமுறை முரசொலி மாறன் அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆதங்கப்பட்டார்.
"மிகச்சாதாரண மனிதனும் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வைத்துக் கொண்டு அரசியலில் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு கடைசி தலைமுறை உதாரணம் கோ.சி.மணி" என்ற ஆனந்த விகடனும் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது.
மேக்கிரிமங்கலத்தில் முளைத்த விருட்சமே! சோழநாட்டு அரசியலின் ஆணி வேரே! அரசியல் ஆளுமையால் ஒருங்கிணைந்த தஞ்சையை ஆண்டவரே! அகமுடையார்களின் பெருமைமிகு அடையாளமாக மாறிப்போன, சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல் இன்று. (திசம்பர் 02, 2016)
(நன்றி: கோமல் அன்பரசன்)

பாம்பாட்டியார் குருபூசை!



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள திருக்கடவூர் மயானத்தில் அமைந்துள்ள பாம்பாட்டி சித்தர் பீடத்தில், வருகின்ற திசம்பர் 4ம் தேதி (கார்த்திகை 18ம் தேதி) திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள பாம்பாட்டியார் குருபூஜையில் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்! வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
சார்பாக,

மதமென்பது...

ஆதித்தமிழனுக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை. ஆதிசங்கரர் தான் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்றாக்கினார். சக்தி வழிபாட்டை சாக்தம் என்றும், முருக வழிபாட்டை கெளமாரம் என்றும், கணபதி வழிபாட்டை கணபத்யம் என்றும், சூரிய வழிபாட்டை செளரம் என்றும், பெருமாள் வழிபாட்டை வைஷ்ணம் என்றும், சிவ வழிபாட்டை சைவம் என்றும் ஆறு வழிபாட்டு குழுக்களை ஒரே வட்டத்திற்குள் அடைத்தார். அதற்கு முன் வரை எல்லாம் வேறு வேறு தான். ஐவகை நில தெய்வங்களான குறிஞ்சி -
(சேயோன்) முருகன் , முல்லை - (மாயோன்) திருமால், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை வழிபாட்டை தான், சமகிருதத்திற்கு முன்னோடியான தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
ஆதித்தமிழனுக்கு இயற்கை வழிபாடு தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு நெருப்பு, பிறகு ஐம்பெரும்பூத வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு என்ற நாட்டார் வழிபாடு தான் இருந்தது; இருக்கிறது. இதில் எங்கேயும் ஹிந்து மதம் வராது. பிற்காலங்களில் சமண-பெளத்த ஆதிக்கத்திலிருந்து, காரைக்கால் அம்மையார் மற்றும் சைவ குரவர்கள் நால்வராலும், நாயன்மார்களாலும் தான், இன்றைய சைவ வழிபாடு கூட மீளெடுக்கப்பட்டது. ஆழ்வார்களால் வைணவம் என்ற மாயோன் வழிபாடு கூட மீட்கப்பட்டது. சுடலை மாடன் என்ற நீத்தார் வழிபாடும், கருப்பசாமி என்ற திருமால் வழிபாடும், முனீஸ்வரன் என்ற சிவ வழிபாடும் தான் தமிழர்களுக்கு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், சிவன் என்பதே ஒரு மன்னன் தான். தென் பாண்டியநாட்டை ஆண்டவன். அதனால் தான் தென்னாடுடைய சிவனானான் அவன். மற்றபடி ஹிந்து என்பது பல மொழி பேசிய, பல இனங்களை கொண்ட பல நூறு சிற்றரசு நாடுகளை ஒன்றிணைத்து ஹிந்தியா என்ற ஒற்றை நாடாக்கிய வல்லபாய் படேலின் யுக்திகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் வெளிப்பாடே இது.