மதுவுக்கு பின்னாலுள்ள அரசியல்!

தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சிகளும் மதுவை கையில் எடுத்து மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராடுவது ஒருவகையில் அரசியல் என்றாலும் கூட பாராட்டுக்குரிய விசயம் தான். ஏற்கனவே பா.ம.க போன்ற கட்சிகள் மட்டுமே தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த வேளையில், திரு. சசிபெருமாளின் இறப்பிற்கு பிறகு இன்றைக்கு பெண்கள் உட்பட மாணவர்களும் தன்னெழுச்சியுடன் தீவிரமாக மதுக்கடைகளுக்கு எதிராக களமாடி வருகிறார்கள்.

மதுவுக்கு பின்னாலும், மதுக்கடைக்களுக்கு பின்னாலும், மதுபான ஆலைகளுக்கு பின்னாலும், முழுக்க முழுக்க அரசியல் தான் ஆட்சி செலுத்துக்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இங்கே அரசாங்கமே மதுவை நம்பித்தான் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது என்பது தான் எதார்த்தம். தேர்தலில் ஏற்கனவே மும்முனை போட்டி நிலவுவதால், மதுவை மையப்படுத்தியே இந்த தேர்தலும் அமையப்போகிறது என்பதை இப்போதே கண்கூடாக காண முடிகிறது.

மதுவை முற்றிலும் ஒழிக்க முடியாது என்பதில் எந்தளவுக்கு உண்மை உள்ளதோ, அதேமாதிரி மதுக்கடைகளை எண்ணிக்கை அளவில் குறைக்க முடியும் என்பதிலும் உண்மை உள்ளது. எனவே இனி ஆட்சியமைக்க போகும் கட்சிகள் யாராகினும், அரசியலுக்காக தேர்தல் வாக்குறுதி போல பேசிவிட்டு, மக்களின் வாக்குகள் கிடைத்தவுடன் தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய்விட கூடாது. தற்போதைய நிலையில், மது ஒழிப்பை முன்னிறுத்தும் அனைவருமே கட்சி வேறுபாடின்றி ஒரே அணியில் இணைந்து போராடினால் தான் இனிவரும் இளைய தமிழ்சமுதாயம் விழிப்போடும், வீரியத்தோடும், சுய அறிவோடும் இருக்க வழிவகுக்கும். இல்லையெனில் மதுவுக்கு அடிமையாகி, மூளை மழுங்கி இலவசங்களுக்கு கையேந்தி அடிமையாகி போகும் அடுத்த தலைமுறை!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment