திருக்குராவடி எனும் திருவிடைக்கழியில் முருகனும் சிவனும்!முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி. சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படும் இந்தக் கோவில், நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தூரத்திலும், தில்லையாடிக்கு மேற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார். 

சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவணபொய்கையில் நீராடி, இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக விளங்குகிறது. மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.

இந்த ஆலயத்தில் வழிபட்டால், ஒருவருக்கு ஜாதகரீதியாக உள்ள மாங்கல்யதோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி, சுபீட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஆண்டு முழுவதும் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. சிறப்பு திருவிழாவாக வைகாசி சதய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நான் அடிக்கடி செல்லும் கோவில்களில், என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கோவில் இது. தைப்பூசம் என்பதால் இன்றைக்கும் சென்று வந்தேன். ஒருமுறை நீங்களும் வந்து தரிசித்து பாருங்கள்.

இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment