03 அக்டோபர் 2017

அகமுடையார்கள் தொலைத்த அடையாளங்கள்!


புதுக்கோட்டைக்கு எப்போதுமே எனக்குள் தனித்த இடமுண்டு. என் (தாய் வழி) தாத்தா செய்த அறியாமையில் செய்த பாவ விமோசனத்திற்கான இடமாக கூட, என் குடும்ப உறவுகள் இன்றளவும் புதுக்கோட்டையை பார்க்கின்றனர். இவையெல்லாம் தனிப்பட்ட கதை. பொதுவாக புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது, தொண்டைமானும், காட்டிக்கொடுத்த சம்பவமும் தான். அடுத்து நினைக்கு வருவது, தமிழ்ச்சினிமாவின் முதல் சூப்பர் ஆக்டர் மற்றும் முதன்முதலாக இரட்டை வேடம் தரித்த அகமுடையார் குலத்தோன்றல் பி.யூ.சின்னப்பா அவர்களை தான். இவற்றை ஒப்புநோக்கையில், இருவிதமான வரலாற்று அரசியல் தொடர்புகள் அடிக்கடி நினைக்கு வரும்.

ஒன்று,

புதுக்கோட்டையை இன்றைய தொண்டைமான்களுக்கு முந்தியே தொண்டை நாட்டுக்கு தொடர்புடைய தொண்டைமான் / பல்லவராயன் என்ற பட்டங்களுள்ள அகமுடையார்களே ஆட்சி செலுத்தினர். இன்றைக்கும் கூட அவர்களின் நீட்சி அறந்தாங்கியில் உள்ள அகமுடையார்களிடம் காணலாம். இந்த அறந்தாங்கி தொண்டைமான்களே, இன்றைய அறந்தாங்கி அகமுடையார்கள் என்பதற்கான நிகழ்கால சான்றுகளும் அங்குண்டு. இந்த தொண்டைமான் பட்டமானது அகமுடையாருக்கானதா? என்பதிலுள்ள குழப்பத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பிலான 210/2013 கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தி கொள்ள முடியும். அடுத்து, பல்லவராயர் என்ற பட்டத்தோடு இன்றைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அகமுடையார் குடும்பங்கள் திருச்சி-திருவெறும்பூருக்கு அருகே இருக்கின்றனர் என்பதும் வரலாற்று தொடர்புடைய விசயமே. மேலும், இந்த முற்கால புதுக்கோட்டை ஆட்சியாளர்களின் சிறப்புமிக்க கடைசி அரசனாக சிவத்தெழுந்த பல்லவராயன் என்ற அகமுடையார் இனக்குழுவின் முன்னோன் அறியப்படுகிறார். இவரது அரசாட்சி வீழ்ச்சியடைந்து பின்னரே மறவர்களான சேதுபதியின் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை வந்தது. அதன் பின்னரே, பெண் எடுத்த சம்பந்தி வீட்டின் நிலையை உயர்த்துகின்ற நோக்கத்திலேயே புதுக்கோட்டை சமஸ்தானமானது, கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இன்று அவர்கள் தங்களை 'கள்ளர் குல தொண்டைமான்' என தனித்து அடையாளப்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இரண்டு,

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து, 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் மாநில அளவிலான மாநாடுகள் நடந்தது. அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மறவர் இனக்குழுவை சேர்ந்த, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது. இன்றைக்கு அந்த முக்குலத்தோர் சங்கமானது கள்ளர் இனக்குழுவை சேர்ந்த ஶ்ரீதர் வாண்டையாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இரு நிகழ்வுகளிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஒன்றுதான்; அது, அகமுடையாருக்கான வரலாற்றை நாம் தொலைத்து விட்டோம் என்ற உண்மையை மட்டுமே. இது போன்ற நிகழ்கால எடுத்துக்காட்டுகள் மூலம், மறவர் - கள்ளர் ஆதிக்கத்தாலும், முக்குலத்தோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பாலும், அகமுடையார் பேரினமானது பல வரலாற்று தொன்மங்களை தொலைத்து விட்டு, எவ்வித அடையாளமுமின்றி கிடக்கிறது என்பதை உணர முடியும். அகமுடையாருக்கான வரலாற்றை, வெறும் இருநூறு ஆண்டுகளுக்குள் சுருக்கவே இந்த அரசியல் நடத்தப்படுகிறது என்பதை கூட அறியாத எம்மவர்கள், குறைந்தது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்று சான்றுகளை கொண்டுள்ள அகமுடையார் வரலாற்றை மீட்டெடுக்காமலும், அதன் மீதான எவ்வித அக்கறையுமின்றி கண்டுகொள்ளாமலும் முக்குலத்தோர் என்ற சிறு வட்டத்திற்குள் அடைபட்டு கிடக்கின்றனர் என்பதுதான் பெரும்வேதனையான விசயம்.

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Pudukottai #Thondaiman #Pallavarayar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக