14 அக்டோபர் 2017

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீதான வரலாற்று களங்கம்! (மறுப்பு கட்டுரை)





அக்டோபர் மாதத்திற்கும் வேலுநாச்சியாருக்கும் என்ன தொடர்பிருக்கிறதென தெரியவில்லை. ஐயா மு.ராஜேந்திரன் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த திடீர் அக்கறையென்று புரியவுமில்லை. கரடி கருத்தான் என்ற துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு, காளையார்கோவிலை தகர்த்தெறிவோமென மிரட்டி திருப்பத்தூரில் தூக்குமேடையேற்றி சதிகாரர்களான ஐரோப்பிய இழிபிறவிகளால் அக்டோபர் 24, 1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்களை சூழ்ச்சியால் மரணமடைய வைத்த மாதம் இது. மருதுபாண்டியர்களின் விசுவாசிகள் என்ற காரணத்திற்காக சாதி மத வேறுபாடின்றி ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழினக்குழுக்களை சேர்ந்தவர்களையும் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மாதமான இந்த அக்டோபரில் வேலுநாச்சியாரை நினைவூட்டியது ஏன் என்பது ஐயா மு.ராஜேந்திரனக்கே தெரிந்திருக்க கூடிய வியப்பான ரகசியம். மேலும், உலக வரலாற்றிலேயே குடிவழி ஆண் வாரிசுகளையும், சின்னஞ்சிறு குழந்தைகளையும் தேடித்தேடி கொன்ற மாபெரும் கொலைக்களம் திருப்பத்தூராக மட்டுமே இருக்க முடியும். இப்படியான வீரம்செறிந்த பெருஞ்சோக வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அக்டோபர் மாதத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களை இழிவுபடுத்தியது ஏன்?

”வேலுநாச்சியார் மீதான வரலாற்றுக் களங்கம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை 12.10.207 அன்று தி இந்து தமிழில் அவசரகதியில் மிகவும் பதற்றத்தோடு ஐயா மு.ராஜேந்திரன் எழுதிருக்கிறார். “வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம்.” இப்படியாக அவரது கட்டுரையை ஆரம்பித்து, ‘சோழர் கால செப்பேடுகள்’ என்ற நூலின் வரலாற்று ஆசிரியராக தன்னை முன்னிலைப்படுத்தி முடித்திருக்கிறார். இவரும் தங்களைத் தாங்களே வரலாற்றை முற்றுமுழுதாக கரைத்து குடித்தவர்கள் போல வரலாற்று ஆசிரியாக புனைந்து கொண்டிருக்கிறார் என்பதை இக்கட்டுரையை படித்து முடிக்கும் போது வெகுஎளிதில் புரிந்து கொள்ளலாம்.

“ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில் உள்ள பலவீனத்தைக் கொண்டு அரசியின் வழியினரான நாலுக் கோட்டை குடும்பத்தின்மீதும் அக்குடும்பத்தின் பங்காளிகள் மீதும், சிவகங்கை பகுதி மக்கள் மீதும் அவர்கள் கொடுங்கோன்மையும் யதேச்சதிகாரத்தையும் பிரயோகித்தார்கள்” என சென்னை மாகாண ஆளுநர் எட்வர்ட் கிளைவ் 06.07.1801-ல் வெளியிட்ட பிரகடனத்தை ஆதாரமாக சொல்லும்போதே ஐயா. மு.ராஜேந்திரனின் வரலாற்றறிவை புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியென்றால், வேலுநாச்சியார் 1796லேயே இறந்து விடுகிறார் என்பது ஊரறிந்த விசயம். ஆனால், இந்த கிளைவ் அறிக்கையில் 1801ம் ஆண்டிலும் பெண் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறாரென்ற தொனியில் சொல்லப்பட்ட பொய் பரப்புரையை ஆவணமாக சொல்லிருக்கிறார், நம் ஐயா மு.இராஜேந்திரன். அடுத்து, எட்வர்ட் கிளைவ்க்கு 1796லிருந்து 1801 வரை ஐந்தாண்டுகள் கோமாவிலிருந்து பிழைந்த வந்தவன் போல சொல்லிருக்கும் இந்த அறிக்கையை எப்படி ஒரு மாபெரும் வரலாற்று அறிவையுடைய ஐயா.மு.ராஜேந்திரன் ஏற்றுக்கொண்டார் என்பது அவர் மனசாட்சிக்கே விட்டுவிடலாம்.

அதிலும் உட்சபட்ச கோமாளித்தனம் என்னவென்றால் சிவகங்கை மக்கள் மீது கொடுங்கோன்மையும், யதேச்சதிகாரத்தையும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிரயோகித்தார்கள் என்று சொல்லிருப்பது தான். ஒருவேளை இப்படி அவர்கள் நடந்திருந்தால் தன் மன்னனுக்காக தன்னுயிரையே நூற்றுகணக்கானோர் அக்டோபர் 24ம் தேதி உயிர்கொடை கொடுத்திருப்பார்களா என்ன? ”தன்னாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம்; எப்போதும் மூடப்படாமல், திறந்தே இருக்கும் மருதுபாண்டியர் அரண்மனையின் வாசற்கதவுகள்” என்று சொன்னதும் கூட எட்வர்ட் கிளைவோடு பணியாற்றிய ஆங்கில தளபதிகளில் ஒருவர் தானே? கி.பி. 1772 முதல் கி.பி. 1780 வரையிலான எட்டு ஆண்டுகள் திண்டுக்கல் - விருப்பாட்சியில் யாரிடம் அடைக்கலம் புகுந்தார் வேலுநாச்சியார்? நாலுக்கோட்டை குடும்பத்தினரிடமா? பங்காளிகளிடமா? இல்லையே; அவர் நம்பிக்கை முழுவதும் மாமன்னர் மருதுபாண்டியர்களிடம் தானே இருந்தது? ஏன் மாமன்னர் மருதுபாண்டியர்களோடு வேலுநாச்சியார் கை கோர்த்தாரென ஐயா மு.இராஜேந்திரன் சிந்தித்திருந்தால், எட்வர்ட் கிளைவின் உளறலை உதாரணமாக சொல்லிருக்க மாட்டார். அப்போதுள்ள சூழலில் எப்படியாவது சிவகங்கையை தன் வசமாக்க வேண்டுமென நினைத்திருந்து, உள்ளுக்குள்ளாகவோ அல்லது உள்நாட்டிற்குள்ளவோ பகையை ஏற்படுத்த ஐரோப்பிய இழிபிறபிகள் தீட்டிய திட்டங்களில் இந்த அறிக்கையும் ஒன்று என்பதை சின்னக்குழந்தைக்கு கூட புரியக்கூடும். ஆனால், இதை வரலாற்று ஆசிரியர் ஐயா மு.இராஜேந்திரன் தான் வலுக்கட்டாயமாக அறிய மறுக்கிறார்.
மாமன்னர் மருதுபாண்டியர்களில் மூத்தவரான பெரியமருதுவின் இயற்பெயர் வெள்ளை மருது; இளையவரின் பெயர் சின்ன மருது. இதில் மருது என்பதற்கான பின்புலம் அவர்களின் தாய் - தந்தை வழி குலதெய்வங்களான வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாக மருது என்ற பெயர் வைக்கப்பட்டது. அடுத்து வெள்ளை என்பதற்கு வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் படைப்பிரிவில் இருந்ததன் காரணமாக வெள்ளை மருது என பெயர் சூட்டப்பட்டது. சரி; சில சந்தேகங்களை இங்கே வைக்கிறோம். இவற்றிற்கெல்லாம் ஐயா மு.இராஜேந்திரனிடம் மட்டுமல்ல; அவரைப்போன்ற உள்நோக்கம் கொண்ட யாரிடமும் பதில் இருக்காது.

வேலுநாச்சியார் பெற்றெடுத்த மகளுக்கு ஏன் வெள்ளச்சி நாச்சியார் என பெயர் சூட்டப்பட்டது?

வெள்ளச்சி நாச்சியர் பிறந்த ஆண்டிற்கான ஆதாரம் இருக்கிறதா?

கி.பி.1793 லேயே வெள்ளச்சி நாச்சியார் ஏன் திடீரென இறந்தார்?

கி.பி.1796ல் இறந்த வேலுநாச்சியாருக்கு முன்பாக வெள்ளச்சி நாச்சியார் இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

வேலுநாச்சியார் பெரியமருதுபாண்டியரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் தங்களது நூல்களில் குறிப்பிட்டு இருக்கின்றனர். அவர்களில், 1944ம் ஆண்டில் ’குமரிமலர்’ இதழில் திரு. தி.நா. சுப்ரமணியன், ’மருது சகோதரர்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் திரு. எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், ’பஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்’ என்ற நூலில் திரு. ஜெகவீரபாண்டியனார், ’ஊமைத்துரை’ நூலில் வித்வான் திரு. ந.சண்முகம், ’வீராங்கனை வேலுநாச்சியர்’ என்ற நூலில் திரு. சிரஞ்சீவி, ’தென்னிந்திய வரலாறு’ கி.பி.1356 முதல் கி.பி 1983 என்ற நூலில் டாக்டர் ஏ.சுவாமிநாதன், பேராசிரியர் வானமாமலை உள்ளிட்ட ஏராளமானோர் வேலுநாச்சியார் பெரியமருதுபாண்டியரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக நிரூபணம் செய்திருக்கின்றனர். ஜெ.ஹெச்.நெல்சன் எழுதிருக்கும் ’THE MADURA COUNTRY - A MANUAL’ என்ற நூலில் கூட வேலுநாச்சியாரை Mitress என்ற வார்த்தையிலுள்ள உள்ளார்ந்த அர்த்ததை ”மருதுபாண்டிய மன்னர்கள்” வரலாற்று நூலில் வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரனார் புரிய வைக்கிறார். இவற்றையெல்லாம் தொகுத்து வரலாற்று ஆவணமாக ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கும் போற்றுதலுக்குரிய வரலாற்று ஆய்வாளர் மீ.மனோகரனார் அவர்களுக்கு இந்நாளில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். மேலும்,

வேலுநாச்சியார் நாலுக்கோட்டை குடும்பத்தை சேர்ந்த முத்துவடுகநாதருக்கு வாழ்க்கைப்பட்டவர். அந்த நாலுக்கோட்டையினர் யாராவது இந்த மறுமணத்தை எதிர்த்து மறுப்பு தெரிவித்ததாக ஆதாரம் ஏதும் இருக்கிறதா? ஆனால் நாலுக்கோட்டை வழியினரான சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவர், தன்னுடைய கடைசி காலம் வரை மாமன்னர் மருதுபாண்டியர்களோடு தான் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்; இது தான் வரலாற்று உண்மை. இதைப்பற்றி, மலேசியத்தமிழரும் வரலாற்று ஆசிரியருமான திரு. ப.சந்திரகாந்தம் எழுதிய ’ஆளப்பிறந்த மருது மைந்தன்’ என்ற நூலில் கடைசி அத்தியாத்தில், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும் - படமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கும் இடையேயுள்ள உட்பகையையும், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும், மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் வாரிசான துரைச்சாமி சேர்வைக்கும் உள்ள பாசப்பிணைப்பையும் விவரிக்கும் சில செய்திகள் இந்த பக்கங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதை வைத்தே மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கும், ஒருசில துரோகிகளை தவிர வேற யாருக்கும் எவ்வித பகையும் இல்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்னவர்களின் கருத்தையெல்லாம், ஆதாரத்தோடு இல்லையென்று மறுக்க ஐயா மு.இராஜேந்திரனுக்கு திராணி இருக்கிறதா? 1772 - 1780 வரையிலான இக்கட்டான சூழலில் வேலுநாச்சியாரை காத்து, இழந்தை நாட்டை மீண்டும் கைப்பற்றியது மாமன்னர் மருதுபாண்டியர்களால் தானே? இழந்த சீமையை மீட்ட வரலாறு வேறெங்கும் உண்டா? அப்படியான புகழை உருவாக்கி கொடுத்த மாமன்னர் மருதுபாண்டியர்களை போற்றாமல் கூட இருந்திருக்கலாமே ஐயா மு.இராஜேந்திரன்? ஏன் இப்படி தூற்றிருக்கிறீர்கள்? வரலாற்று பிழை செய்தது நீங்கள் தான்; மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆன்மா உங்களைப் போன்றோரை ஒருபோதும் மன்னிக்காது.; நிச்சயம் ஒருநாள் இதற்காக வருந்துவீர்கள். அன்றைய நாட்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை பற்றி அவதூறாக எழுதுவதற்காக, அதே மறவர் இனக்குழுவை சேர்ந்த தினகரன் தேவர் என்பவர் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார். அதே போல, இன்றும் எங்கள் விரல்களை கொண்டே எம் கண்கள் காயப்படுத்தப்படுகிறதென்பதை எங்களாலும் அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற எந்தவொரு சூழ்ச்சிகளையும் இளந்தலைமுறையினர் எளிதாக கடந்து, ஒற்றுமையாக செயல்படுவோம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஓங்கட்டும் மாமன்னர் மருதுபாண்டியர் புகழ்! பெருகட்டும் அகமுடையார் ஒற்றுமை!

மறக்க முடியுமா மாமன்னர் மருதுபாண்டியரை!?அடக்க முடியுமா அரசாண்ட அகமுடையாரை?!


- இரா.ச.இமலாதித்தன்

(படங்கள்: மீ.மனோகரனாரின் ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ பக்: 161, 162, ப.சந்திரகாந்தத்தின் 'ஆளப்பிறந்த மருது மைந்தன்' பக்: 706, 707)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக