14 அக்டோபர் 2017

அகமுடையார் குலத்தில் உதித்த ஆற்காடு சகோதரர்களின் பிறந்த நாள் இன்று!


ஆற்காடு இராமசாமி முதலியார்:

ஆற்காடு இலட்சுமணசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர்; நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார். 1920 லிருந்து 1934 வரை தொடர்ச்சியாக சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். சென்னை மாநகரத்தின் தலைவராய் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார். ஐதராபாத் பிரச்சினையைக் கையாள அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்து சென்று அங்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் சார்பில் வாதாடி ஐதராபாத் நகரத்தை இந்தியாவுடன் இணைத்த பெருமை இவருடையதே. பிறகு மத்திய அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு சிறந்த பணி ஆற்றினார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தின. மேலும், இந்திய அரசு சார்பில் பத்மவிபூஷன் பட்டம் அளிக்கப்பட்டது.

ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார்:

ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவர் 1983 ஆண்டு எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் இந்திய மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார். இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலட்சுமணசாமி முதலியார் சிறந்த கட்டிடக் கலை நிபுணரும் ஆவார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், அங்குள்ள பட்டமளிப்பு மண்டபம் (இப்போது தொலைதூரக் கல்வி இயக்கமும், பல பெரிய அரசு விழாக்களும் அங்கு நடத்தப்படுகிறது.) ஆகியவைகள் இவரால் கட்டப்பெற்றன.

சென்னை தரமணியில் இயங்கிவரும் ஐ.ஐ.டி. நிறுவனமும் இலட்சுமணசாமி முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு இன்றும் உலகளாவிய புகழ்பெற்று வருகிறது. அந்நிறு வனத்தில் இலட்சுமணசாமி முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அகில இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆங்கிலத்தில் தென்னிந்திய மக்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் இவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பெருமைக்குரியவர்களான வழக்குரைஞர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் மற்றும் மருத்துவர் சர் ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார் என்ற ஆற்காடு இரட்டையர்களுக்கு 130 வது பிறந்த நாளில் புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Mudaliar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக