05 செப்டம்பர் 2022

ஆசிரியரெல்லாம் அறவழியினரா?



நூற்றில் பத்து பேர், 'அனைத்து தகுதிகளும் உடைய' ஆசிரியராக இருக்கலாமே தவிர, மற்ற 90% பேர் வியாபாரிகள் தான். வட்டிக்கு கொடுப்பது, மினி ரியல் எஸ்டெட் செய்வது, ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்வது, வீடு கடைகள் கட்டி வாடகை வசூலிப்பது என பகுதி நேர புரோக்கர்கள் இங்கே அதிகம். ஃபேஸ்புக்கில், வாட்சப்பில் யோக்கியர் போல காட்டிக்கொள்ளும் இவர்களில் பெரும்பாலானோர் நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை.

கஷ்டப்படும் பெற்ற தாய் தந்தை, சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளுக்கு கூட பலர் உதவ முன்வருவதில்லை. தன் பூர்வீக ஊருக்கு அருகேயுள்ள புறநகரங்களிலுள்ள உருவாக்கப்பட்ட புதுப்புது நகர்களில் வீடு கட்டி பொண்டாட்டி, பிள்ளை என சுருங்கி விடுகின்றனர். நல்லது கெட்டதற்கு மட்டும் ஊரார், உறவுகளை பார்க்க சில மணிநேரம் ஒதுக்கி, அவர்களோடு தங்கி விட்டு ஒதுங்கி விடுகின்றனர்.

ஆசியர்கள் அனைவருமே சுயநலவாதிகளா? என தெரியாது. ஆனால் பல சுயநலவாதிகள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். தன்னை மிகப்பெரும் ஆளுமையாக காட்டிக்கொள்ள காய் நகர்த்தி, பொதுவெளிகளில், சமூக ஊடகங்களில் எளிமை வேடம் போடுவார்கள். பெரும்பாலான ஆசிரியர்களின் திருமண இணையர்களும் ஆசிரியராகவே இருப்பதால், தன் குடும்பச்சூழலின் பின்னணியை மறைத்து,பழசையெல்லாம் மறந்து தனித்தே பயணிக்க விரும்புகிறார்கள். ஒருகாலத்தில் ஆசிரியர்கள் மீதெல்லாம் அத்தனை மதிப்பை வைத்திருந்தேன். அவர்களில் பெரும்பான்மையோரின் சுயரூபம் புரிந்த பின்னால் எதார்த்தம் உணர்ந்தேன்.

ஆசிரியர்களில் பலர், சிவாஜியை தோற்கடிக்கும் வல்லமை பொருந்திய மாபெரும் நடிகர்கள். கம்பனை மிஞ்சும் கற்பனை வளமிக்க எழுத்தினால் பொய்யை கூட நம்ப வைப்பவர்கள். நல்ல வருவாய் வருகின்ற கிராமத்து கோவிலின் அர்ச்சகர் போல நாசூக்காக பேசும் வல்லவர்கள். எளிதாக சொல்வதெனில், என்னளவில் அவர்களெல்லாம் சைலண்ட் கில்லர்கள்!
மீதமுள்ள, அந்த பத்து சதவீத ஆசிரிய பெருமக்களுக்கு, இனிய ஆசிரியர் திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக