05 மே 2019

மதவெறி அரசியல் இம்மண்ணுக்கு தேவையற்றதே!


இசுலாமிய பகுதிகளில் மாற்று மதத்தினர் உள்ளே நுழையவே கூடாதென்ற சட்டம் ஏதும் இருக்கின்றதா என்ன? இசுலாமிய பெண்கள் டிக்டாக் விடியோவை வெளியிடுவதற்கும், மதத்திற்கும் என்ன சம்பந்தம்? தனிப்பட்ட விருப்பத்தில் டிக்டாக் செய்த பெண்களை மதத்தின் அடிப்படையில் கண்டிக்கிறேனெ நினைத்து, மாற்று மதத்தினரை வம்பிழுப்பது சரியே அல்ல. இசுலாமியர்களுக்கு ஜமாத் என்ற கட்டமைப்பு இருப்பதும், பொருளாதார பின்புலம் இருப்பதும், சிறுபான்மை என்ற பெயரில் ஓட்டு வங்கி இருப்பதும் அவர்களது பாதுகாப்புக்கு அரணாக இருக்க வேண்டுமே ஒழிய மாற்று மதத்தினரை இழிவாக நினைப்பதற்காக இருக்க கூடாது.

இந்த நாட்டில் பெரும்பான்மை மதத்தை சேர்ந்த பெரும்பான்மையானவர்களின் சகிப்புத்தன்மையால் தான் சிறுபான்மையினரென சொல்லப்படும் இசுலாமியர்கள் நட்புறவாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கின்றார்கள். அதை அடிப்படைவாத மதவெறியால் சீரழிக்க முற்பட வேண்டாம். அதன் விளைவால் பாதிப்படைய போவது, அப்பாவி இசுலாமியர்களே என்பதை இந்த அடிப்படைவாத மதவெறியர்கள் புரிதல் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் போன்ற ஹிந்து அமைப்புகளை எதிர்க்கும் இசுலாமியர்களின் எண்ணிக்கையை விட ஹிந்துக்களின் எண்ணிக்கையே அதிகம். காரணம், அடிப்படைவாத மதவெறியை யார் செய்தாலும் எதிர்ப்பதே இம்மண்ணின் பண்பாட்டு கூறுகளில் ஒன்று. ஏனெனில் வெறுப்புணர்வை தூண்டும், தான் சார்ந்த மத அமைப்புகளே எதிர்க்கும் நேர்மை ஹிந்துக்களிடம் உண்டு. அந்த நேர்மையையே இசுலாமியர்களிடம் எதிர்பார்க்கிறோம். 'இசுலாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் சிரியா' என்ற ISIS அமைப்பை போல இம்மண்ணிலும் தனித்தனி இசுலாமிக் பஞ்சாயத்துகளை ஒவ்வொரு ஊரிலும் கட்டமைக்கலாமென நினைப்பதை கைவிடுவதே இன்றைய காலத்திற்கு நல்லது.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக