03 மே 2019

’சுயமரியாதை சுடரொளி’ எஸ்.இராமச்சந்திரனார்!



வாங்காத விருதுக்கு 250 பக்கத்தில் ஒரு புத்தகம் ஒரு கேடா? ஒருபக்கம், ஈ.வெ.ரா. தான், சாதியை ஒழித்தாரென திராவிடவாதிகளெல்லாம் தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால், ஈ.வெ.ரா பற்றிய படத்திற்கு தலைப்பே நாயக்கர் என்ற அவரின் சாதிப்பெயரிலேயே வெளியிட்டனர். வைகோ கூட முன்பொருமுறை, ஈ.வெ.ரா.வின் நாயக்கர் என்ற அவரது சாதிப்பட்டத்தை சேர்த்தே கடிதம் எழுதி கேரள முதல்வருக்கு அனுப்பிருந்தார். இதுபோல பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா. புராணம் பாடும், திராவிட வாதிகளுக்கு, தன் இறுதி மூச்சு வரை,தனிமனித ஒழுக்கம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, மதுஒழிப்பு, பெண்விடுதலை போன்ற தளங்களை தென்மாவட்டங்களில் உருவாக்கி, தன் வாரிசுகளும் அதைக்கடைப்பிடிக்கும் வகையில் செய்த எஸ்.இராமச்சந்திரனாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1929ம் ஆண்டு பிப்ரவரி 17,18ம் தேதிகளில் செங்கற்பட்டில் நடைபெற்ற 'தமிழ் மாகாண சுயமரியாதை' மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னாலுள்ள “சேர்வை”எனும் அகமுடையாருக்கான சாதிப்பட்டத்தைத் துறந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் போன்றோரின் புகழை மறைத்தது தான் திராவிடத்தின் வெற்றி.

யார் அந்த எஸ்.இராமச்சந்திரனார்?


1925ம் ஆண்டில் பனகல் அரசர் தலைமையில் அம்ரோட்டில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பிரதிநிதி இவர்தான்.

1926ஆம் ஆண்டு முதல் அரசியல் அதிகாரப்பணியான ஜில்லா போர்டு தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட கல்விக்கழகம்,மதுவிலக்கு கமிட்டி,தேவஸ்தான கமிட்டிகளில் பொறுப்பு வகித்து,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிந்தார்.

1927ம் ஆண்டு சூலை 20,21ம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட மாநாடு, ஈரோட்டில் நடைபெற்ற மதுவிலக்கு மாநாடுகளில்.தலைமை தாங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் குறைகளை உடனுக்குடன் போக்கிட பாடுபட்டார்.

நீதிமன்றங்களில் தன் வாதத்திறமையால் சமஸ்தானத்துக்கும் தான் சார்ந்த இயக்கத்துக்கும் நற்பெயர் பெற்றுக்கொடுத்தார்.

சிவகங்கை நீதிமன்றத்தில் பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை இருந்ததை நீதிபதி முன்பாக போட்டு உடைத்து சமூகநீதி பற்றி அவர் செய்த வாதம் இன்றும் அங்கு முத்தாய்ப்பாக பேசப்படுகிறது.

”இந்தக்கையால் எந்த பிராமணருக்கும் ஆதரவாக கையெழுத்திட மாட்டேன்”என்று சபதம் செய்தவர்.

நீதிகட்சி ஆட்சியில் சட்ட அமைச்சராக ஆகிட இவருக்கு வாய்ப்பு வந்தபோது, சமூகப்பணியாற்றிட அமைச்சர் பதவி தடையாக இருக்கும் என்பதால் அந்த வாய்ப்பை உதறியவர்.

இவர் போன்ற திறமை வாய்ந்த வழக்கறிஞர் காங்கிரசுக்கு வரவேண்டும் என மதுரை வைத்தியநாத ஐயர் இவரை அணுகிய போது,”மனிதரில் ஏற்ற தாழ்வைக்குறிக்கும் பூணூலை நீங்கள் கழற்றினால் அது பற்றி ஆலோசிக்கலாம்”என்று சொன்னவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர் நடத்திய ஆதிதிராவிடர்கள் மாநாடு தான், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச்சென்ற நிகழ்வுக்கு முன்னோடி சம்பவமாகவும் அமைந்தது.

- இரா.ச. இமலாதித்தன்


(தகவல்: திரு.அரப்பா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக