06 மே 2019

யார் தமிழர்?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே 90 சதவீத முன்னுரிமை என்பது உறுதி செய்யப்பட்டு - தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்ற நிலையை உருவாக்குவோம்!

- மு.க.ஸ்டாலின்.

வரவேற்கிறோம். ஆனால், யார் தமிழர்? என்பதை எதை வைத்து முடிவு செய்வீர்கள். , யார் தமிழர்? தமிழரை எப்படி இனம் காண்பீர்கள்? டிஎன்ஏ பரிசோதனை நிலையம் வைத்திருக்கின்றீர்களா? இதெல்லாம் ஒருகாலத்தில் சீமானிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள். தமிழ்த்தேசிய அரசியலை கேலிசெய்கிறோமென்ற மனப்பான்மையில், திராவிடவாதிகள் கேட்ட இது மாதிரியான கேள்விகளுக்கு திராவிடத்தலைவரான ஸ்டாலினே இனி பதில் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கலாம். ஏனெனில், அதற்கான காலம் இப்போது கனிந்திருக்கிறது.

யார் தமிழர்?


அ. தாய்மொழியை தமிழாக கொண்டவர்.

ஆ. குலதெய்வ (நாட்டார்) வழிபாடுகளை பின்பற்றுபவர்.

இ. பட்டத்தாலோ, வேறுவகையிலோ இனக்குழு (சாதி) அடையாளமுடையவர்.

இந்த மூன்றையும் வைத்து யார் தமிழரென்பதை எளிதாக அடையாளம் காண முடியும். குறிப்பாக, சாதியை மறைத்து தமிழரை அடையாளம் காணவே முடியாது. ஏனெனில் இம்மண்ணின் மைந்தர்களான தாய்த்தமிழ் உறவுகளை விட வேற்றுமொழிக் காரர்களும், வேற்றினத்தவர்களும் தான், தங்கள் அடையாளங்களை மறைத்து நம் தாய்மொழியை வாய்மொழியாக நன்றாக பேசுகின்றனர். தமிழ் இனத்தை அடையாளம் காண சாதியும், தாய்மொழியும், குலசாமி வழிபாடுகளுமே முதன்மையானது. இந்த மூன்றில் எதை விட்டுக்கொடுத்தாலும் யார் தமிழர் என்பதை கணக்கிடவே முடியாது.

தமிழருக்கான வரையறையில், குலதெய்வ வழிபாடு தேவையற்றது; அதைச் சேர்த்தால் நிறைய குழப்பம் வருமென பலர் சொல்வதை கேட்கலாம். ஆனால், பல தமிழ்ச்சாதியிலும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. விஸ்வகர்மா அடையாளம் தமிழ்ச்சாதி அடையாளத்தை சிதைக்கிறது தானே? அதுபோல யாதவர், தலித் அடையாளங்களும்...
இங்கே பலருக்கும் பழனி எட்டுக்குடி முருகனும், திருப்பதி வேங்கடமுடையாரும் தான் குலசாமி ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவர்களும், நாட்டார் வழிபாடுகளே செய்திருக்க வேண்டுமென்பது என் பார்வை. உருது இசுலாமியர், ஆங்கிலோ இண்டியன் கிருஸ்துவர்களும் தமிழராக கணக்கிட முடியாதென்பதால், பெற்றோரின் தாய்மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதே இதற்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்.

- இரா.ச. இமலாதித்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக