17 ஜூலை 2017

புதிர்கள் நிறைந்த ஆடி மாதம்!

திருமணமான புதுமண தம்பதிகளை ஆடி மாதம் விலகி இருக்க சொல்லிவிட்டு, "ஆடி பட்டம் தேடி விதை!" என உழவிற்கு மட்டும் உயிரூட்டியது எதற்கென புரியவில்லை. முதலாவது தாம்பத்யம் சார்ந்த விசயத்தை பற்றி பேச வந்தால், அதற்கொரு கணக்கு சொல்லப்படுகிறது. ஆடியிலிருந்து பத்தாவது மாதம் சித்திரை வரும்; அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஆடி மாதம் தம்பதிகள் ஒன்றிணைந்து கரு உருவாகி விட்டால் அது சித்திரையில் குழந்தையாக பிறக்கும்; அப்போதுள்ள சித்திரை வெயிலின் தாக்கத்தை அக்குழந்தையால் தாங்கி கொள்ள முடியாதென அறிவியல் சித்தாந்தங்களும் சொல்லப்படுகிறது.  புதுமண தம்பதிகள் இல்லாத மற்றவர்களோ அல்லது திருமணமாகி ஒரு வருடத்தை கடந்தவர்களோ, ஆடியில் தாம்பத்ய உறவாடி சித்திரையில் பிள்ளை பெற்றெடுக்க மாட்டார்களா? அப்படி பெற்றெடுத்தால் அப்போது சித்திரை வெயில் அக்குழந்தையை பாதிக்காதா?

அடுத்து, ஆடியில் விதை விதைத்தால் தையில் அறுவடை செய்யலாம் என்ற முதுமொழியும் கூட நெல் சார்ந்த உழவர்களுக்கு மட்டுமே பொருந்த கூடியதாக இருக்கிறது. ஆனால், சிறு தானியங்களை விதைத்துண்ட உழவர்களுக்கு இந்த ஆடி முதலான தை வரையிலான ஆறு மாத கணக்கெல்லாம் தேவையே இல்லை. மேலும், நெல் சார்ந்த சாகுபடியையே மூன்று போகம் விளைவிக்க செய்து பழக்கப்பட்டவர்களுக்கும் கூட, ஆடி மாத கணக்கெல்லாம் பயனற்ற ஒன்று.

பன்னிரு மாதங்களும், தட்சிணாயணம் - உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. தை முதலான ஆறு மாதங்கள் உத்திராயணம் என்றும், ஆடி முதலான ஆறு மாதங்கள் தட்சிணாயணம் என்றும் வகைப்படுத்த பட்டிருக்கிறது. சூரிய வட ஓட்டத்தை (உத்திராபதி) உத்திராயணம் என்றும், சூரிய தென் ஓட்டத்தை (தெட்சிணாமூர்த்தி) தட்சிணாயணம் என்றும் சொல்வதும் ஏதோவொரு குறியீடாகவே தோன்றுகிறது. தையை முதலாக கொண்ட ஆறு மாதங்களான உத்திராயணம் என்பது வானுலக தேவர்களுக்கு ஒருநாளைய பகல் பொழுதாகவும், அதுபோல ஆடியை முதலாக கொண்ட ஆறு மாதங்களான தட்சிணாயணம் என்பது வானுலக தேவர்களுக்கு ஒருநாளைய இரவு பொழுதாகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கின்றனர். குழப்பம் நிறைந்த இவற்றை பற்றியெல்லாம் சொல்ல நிறையவே இருக்கிறது.

இப்போது இரவின் நடுநாயகமாக திகழும் நிலவை பற்றி பார்ப்போம்.
தானே ஒளிரக்கூடிய தன்மையில்லாமல் சூரியனின் ஒளியை உட்கிரகித்து வெளிச்சம் கொடுத்தாலும் நிலவானது, நம் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகவும், தெளிந்த அறிவையும், உற்சாகத்தையும் கொடுக்கும் வல்லமையையும் உடையதாகவும் இருக்கிறது. ஜாதகத்தில் கூட சந்திரன், மனதிற்கான மனோ காரகன் என்றே சொல்லப்படுகின்றது. ஒருவரின் ஜாதக கட்டத்தில் சந்திரன் எந்த ராசிக்கட்டத்தில் இருக்கிறதோ, அதுவே அந்த ஜாதகரின் ஜென்ம ராசியாகவும் கணிக்கப்படுகின்றது.

இந்த ஆடி மாதத்தில் தான், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை,  ஆடி பெளர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என சிறப்புமிகு நாட்களும் அதிகமாக வருகின்றது. மேலும், முன்னோர்களின் ஆன்ம அலைகளோடு தொடர்பு கொள்ள ஏதுவான மாதமும் இதுவே தான். என்னதான், சூரியனை தொடர்பு படுத்திய வட ஓட்டம், தென் ஓட்டம் என்ற ஆறாறு மாதங்களாக வகைபாடிருந்தாலும், நிலவை மையப்படுத்தியே ஒவ்வொரு மாதத்தின் நாட்களெல்லாம் வகைபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்க விசயமாகவும் இங்கே இருக்கிறது.

நம் முன்னோர் சார்ந்தும், குலம் சார்ந்தும், வழிவழியாக தொடர்ந்து வருகின்ற குல தெய்வ வழிபாட்டையெல்லாம் சிறு தெய்வ வழிபாடென சொல்லிவிட்டு பெருந்தெய்வத்தை பெருங்கோவில்களில் அடையாளப்படுத்தினார்கள். ஆனால் அந்த பெருங்கோவில்களிலும் கூட, பெளர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை வளர் பிறை - தேய் பிறை என பிரித்துதான் இரண்டு பதினைந்து நாட்களாக வழிபாடு செய்கின்றனர். (நான்காம் நாள்) சதுர்த்தி, (ஆறாம் நாள்) சஷ்டி, (எட்டாம் நாள்) அஷ்டமி, (ஒன்பதாம் நாள்) நவமி, (பத்தாம் நாள்) ஏகாதசி, சிவராத்திரி, பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை என அனைத்து நாட்களுமே நிலவை மையப்படுத்தியே பகுக்கப்பட்டு விழாவாக பெருங்கோவில்களில் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் என்பதே முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் மாதம். அதனால் தான் அம்மாதத்தில் ஆறு, கடல்களில் நீராடி கரையோரம் பித்ரு காரியங்கள், பிதுர் தர்ப்பணம் போன்றவற்றை தம் குல முன்னோர்களுக்கு கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். ஆடி முதலான ஆறு மாதங்களும் அந்த வானுலக தேவர்களுக்கு வேண்டுமானால புராணப்படி இருளாக இருந்துவிட்டு போகட்டும். பொதுவாக முதலிரவு என்பதே இருளில் நடப்பது தானே? எனவே புது மண தம்பதிகள், ஆடியில் கூடியே இருங்கள்; மாறிகிடக்கும் காலச்சூழலில் பெரும்பாலான மாதங்களில் சித்திரையை தாண்டிய வெயிலே சுட்டெரிக்கிறது என்பதால், வெயில் அதிகமுள்ள சித்திரையில் குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை; சமாளித்து கொள்ளலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக