13 ஜூலை 2017

மகான் சுந்தரானந்தர் சித்தர்!





பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக