13 ஜூலை 2017

மகான் சுந்தரானந்தர் சித்தர்!





பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

07 ஜூலை 2017

எம்.எஸ்.தோனியும் 80களும்!





(முன் குறிப்பு: 1980-1989களில் பிறந்தவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு இது)


எளிய நடுத்தர குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து மேலெழுந்து நிற்பது தான் தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலான விசயம். இந்த 80களில் பிறந்தவர்களும் கூட இது போன்றதொரு மிகப்பெரிய சவால்களை சமாளிப்பவர்கள் தான். ஏனெனில் 1980 முதல் 1989 வரையிலான இடைப்பட்ட பத்து வருடங்களில் பிறந்தவர்கள் அனைவருமே குழப்பமான சூழலில் வளர பழக்கப்பட்டவர்கள். அந்த இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவன் என்ற முறையில் என்னையே பலவற்றிற்குள் சோதனைக்குட்படுத்தி பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றை மட்டும் கீழே வகைப்படுத்திருக்கிறேன்.

SW/MW அலைவரிசை எங்கள் அபிமான அப்துல் அமீது போன்றோரின் இனிய குரல்களில் இலங்கை வானொலிகளையும், தென்கச்சியாரின் இன்றொரு தகவலை தினந்தோறும் கேட்டு ரசித்தோம். திரைச்சித்திரம் என முழு படத்தையும் ஒலிவடிவிலேயே கேட்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து ஒனிடா - பானசோனிக் - சாலிடர் என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சிகள் வாயிலாக ஞாயிறுக்கிழமைகளை கொண்டாடி இருக்கிறோம். டேப் ரெக்ராக்டர் கேசட், டெக் எனத்தொடங்கி சிடி - டிவிடி - பென்ட்ரைவ் - ப்ளூரே டிஸ்க் வரைக்கும் பதிவு செய்து பாடல்களையும், படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ப்ளாக் அன்ட் ஒய்ட் / கலர் டெஸ்க்டாப் மானிட்டரில் கணினி செயல்பாட்டை தொடங்கி LCD/LED மானிட்டர் வரைக்கும் பயன்படுத்தி வருகிறோம். பப்ளிக் டெலிபோன் பூத்களும், டெலிபோன் இன்ஸ்ட்ருமென்ட்களும், ப்ளாக் அன்ட் ஒயிட் பட்டன் வைத்த செல்போன்களும் பயன்படுத்த தொடங்கி, இன்று டச் மாடல்களான ஆன்ட்ராய்டுகளோடும் அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறோம்.

சிக்கல் பக்கம் ஆண்டனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக தவமிருந்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், ஜங்கிள் புக், மாதவன் இருவேடங்களில் நடித்த ராஜ் கஹானி என்ற அரச கதை, சக்திமான், என பல டப்பிங் தொடர்களின் அதிதீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறோம். ஒலியும் ஒளியுமென்ற வாரந்திர வெள்ளிக்கிழமை புதுப்பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறோம். DD1, DD5 என காத்திருந்த வேளையில் ஈழம் பக்கம் ஆண்டனாவை திருப்பி சக்தி டிவி, ரூபவாகினி, சிரிச போன்ற அங்குள்ள தமிழ்/சிங்கள சேனல்களை பார்த்து குதூகலித்திருக்கிறோம். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 'வானத்தை போல' படத்தை வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே சிரச சேனலில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.

அதே காலத்தில் வானொலிகளெல்லாம் FM என்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அலைவரிசையில் அணிவகுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த எங்கள் பகுதிக்கு காரைக்கல் பண்பலை தான் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க, பாதி நேரம் ஹிந்தியே ஆக்கிரமித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்து சக்தி எஃப்பெமும், சூரியன் எஃப்பெமும் 24x7 தமிழில் பாடல்களை ஒலிபரப்புவதை கேட்பவதற்காக வில்லேஜ் விஞ்ஞானி போல வடி தட்டை வைத்தே புதுப்புது ஆண்டனாக்களை உருவாக்கி கேட்டு ஈழத்தமிழோடு ரசித்திருக்கிறோம். அப்போது தான் தமிழகத்தில் தனியார் அலைவரிசையாக ரேடியோ மிர்ச்சியும் வந்தது; பனிக்காலங்களில் அதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஊருக்கொரு டிவி என்றிருந்த நிலையில் அடுத்து தெருக்கொரு டிவி என்ற நிலையில் வளர்ச்சி வந்த நிலையிலேயே, கலர் டிவியும் அதிகமாக அடியெடுத்து வைத்தது. முக்கால் சைக்கிள், டி.வி.எஸ் 50, பஜாஜ் எம் 80 என்ற வரிசையாக புதுப்புது வாகன படையெடுப்புகளில் பயணித்திருந்தோம். புது மாப்பிள்ளைக்கான சீதன பைக்காகி போன டி.வி.எஸ் விக்டர், ஹிரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் போன்றவற்றின் வருகையும், பல்சர், அவஞ்சர் தொடங்கி இப்போது TVS Apache RTR 200, Suzuki Gixxer, Yamaha FZ-FI, Honda Hornet என அனைத்தோடும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ரஜினி - கமலை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இடையே புது என்ட்ரி கொடுத்த விஜயை எங்களின் அடுத்த உச்ச நட்சத்திரமாக பார்த்தோம். மனதை தொட்டு சொல்லச்சொன்னால், இன்றைய அஜித் ரசிகர்களாக இருக்கும் 80களின் ஆட்களெல்லாம் ஆரம்பத்தில் விஜய் ரசிகனாகத்தான் இருந்திருப்பார்கள். கேலிக்கிண்டலுக்காகவே தனக்கு விஜயை பிடிக்குமென சொல்லத் தயங்கியவர்களே இங்கு அதிகம்; அது பெரிய கதை. இப்போது சிம்பு - தனுஷ், சிவக்கார்த்திக்கேயன் - விஜய் சேதுபதி - அசோக் செல்வன் எனவும், குஷ்பூ- மீனா- சிம்ரன்-நக்மா- ரம்பா என ரசித்து கொண்டிருந்த காலம் மறந்து கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீதிவ்யா - லெஷ்மி மேனன் - நயன்தாரா எனவும் நீளும் பட்டியலிலுள்ள பல இளநடிகர்களையும் ரசித்து கொண்டிருக்கிறோம்.

இசையுலகில் இளையராஜாவையும், கூடவே ரஹ்மானையும் ஒருசேர ரசித்தோம். அதோடு நிற்காமல் இன்று ஜி.வி. பிரகாஷ், அனிருத், சந்தோஷ் நாராயணனோடும் லயித்து நிற்கிறோம். கே.எஸ்.ரவிக்குமார் - வாசு - மணிரத்னத்தோடு ஷங்கர் - கெளதம் - வினோத் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்புராஜையும் கொண்டாடுகிறோம். டூரிங் டாக்கீஸ்லிருந்து மல்டி ஃப்ளெக்ஸ் சினிமாவையும் அதே உற்சாகத்தோடு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்படியாக உணவு - உடை - இசை - ரசனை என எல்லாவற்றிலும் 70களின் சாயலும் 90களின் சாயலும் கலந்து, எங்களுக்கென அடையாளமின்றி தனித்து நிற்கிறோம். 70களின் கடைசி தலைமுறையாகவும், 90களின் முதல் தலைமுறையாகவும் 80களில் பிறந்தவர்களான நாங்கள் கலப்படமான குழப்பம் நிறைந்த வரையறையோடு தான் இன்றளவும் இருக்கிறோம். இயற்கையோடு இயங்கிருந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் தொழிட்நுட்பத்தின் அபிரிவிதமான வளர்ச்சியையும் அதன் போக்கிலேயே அனுபவித்து கொண்டிருப்பவர்கள் என்ற சுயபெருமையும் எமக்குண்டு. என்றுமே மாறாத மாற்றம் என்ற ஒன்றில் சிக்கியும் தப்பி பிழைத்த எம்மைப்போன்ற 80களில் பிறந்த எம்.எஸ்.தோனிக்கு(07.07.1981) இனிய வாழ்த்துகள்! :)

- இரா.ச. இமலாதித்தன்
   (21.09.1985)

(பின் குறிப்பு: தோனி பற்றி எந்த குறிப்பும் இதில் இருக்காதென்றாலும், 90க்கு பிறகு பிறந்தவர்களும் தல தல என தலையில் வைத்து கொண்டாடும் தலைமைத்துவ சூட்சமத்தை எளிய குடும்பத்திலிருந்து 80களில் பிறப்பெடுத்த தோனி நமக்கு(80's) சமகாலத்திலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்; அதற்காகவே அவர் பிறந்த நாளில், அவர் படத்தோடும், அவர் பெயரோடும் இப்பதிவு)

05 ஜூலை 2017

அகம்படியர் குல தேவி - மீனாட்சி!





"வாகை சூடும் சுகுண தேவராகும்
தமிழர் வானவ அகம்படியர் குல தேவி
வாணி மாதங்கி
திருகூடலூர் தங்கி வளர்வாம்
மீனாம்பிகை என் உமையாளே!"

- மீனாட்சி திருப்புகழ்


மதுரை மீனாட்சியை போற்றிய பாடல்களில் 'மீனாட்சி திருப்புகழ்' என்னும் பாடல் தொகுப்பும் ஒன்று. இப்பாடலை மகாகவி பாரதியாரின் சீடரான மணிமன்ற அடிகள் இயற்றிருக்கிறார்.

(நன்றி: கவிஞர் இரா.பொற்கைப்பாண்டியன், அண்ணன் வெங்கடேஷ்)

04 ஜூலை 2017

தமிழ்த்தாய் வாழ்த்தும் - பிக் பாஸ் ஷோவும்!


கேரள ஆலப்புழாவில் பிறப்பெடுத்த பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' என்ற கவிதை நாடக நூலில் வரும் ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு அறிவித்தது. இந்நாடக நூல், லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி' என்ற நூலை தழுவி அமைந்தது என்பதும், எங்களது நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை என்பவரே, பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழாசிரியராக இருந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" என்ற உண்மையை உரக்கச்சொன்ன வரிகள் நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியது, (எங்க வேதாரண்யத்தை சேர்ந்தவரும் சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியருமான) தாயுமானவர் என தவறுதலாக #BiggBossடிராமாவில் ஜூலி சொல்லிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி முடிக்கிறார். அந்த நிகழ்வில் தமிழ் வாத்தியார் போல வீற்றிருந்த கவிஞர் சினேகன் வாய்மூடி மெளனியாய் வேடிக்கை பார்க்கிறார். என்ன இது, தமிழுக்கு வந்த சோதனை?

இத்தனை வருட வரலாற்றில் முதன்முறையாக விஜய் டிவியெல்லாம் தன் பெயரையே தமிழ் படுத்தி செம்மொழியை தூக்கி பிடிக்கிறதும், 'தமிழ்க்கடவுள் முருகன்' என்ற நாடகத்தை உருவாக்குவதும், அனைத்து பொருட்களின் பெயர்களையும் ஹிந்தியிலேயே அச்சடித்து பதஞ்சலி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பாபா ராம்தேவையும் தமிழ் பேச வைத்து யோகா சொல்ல வைக்கிறதுமென தமிழை மையப்படுத்தியே விஜய் டிவியில் அனைத்தும் நகர்கிறது. ஆனால் இவற்றிற்கு பின்புலமாக உள்ளவற்றை, எல்லாரோலும் புரிந்து கொள்வது தான் சிரமமாக இருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்

29 ஜூன் 2017

சான்டோ சின்னப்பா தேவர் எனும் தன்னம்பிக்கை சகாப்தம்!













'தேவர் மகன்' போல எத்தனை திரைப்படங்கள் வருடத்திற்கு வந்தாலும், என்றைக்குமே திரைத்துறையின் ஒரே "தேவர்", அகமுடையார் குலத்தோன்றல் சான்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் மட்டுமே! ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருக்கும் போது, மிகப்பெரிய நீதித்துறை பதவியிலிருருந்த யாரோ ஒரு தயிர்சாத பிரியர் கேள்வி கேட்டிருந்தார், "காளைகளுக்கு பதிலாக காட்டிலுள்ள சிங்கத்தை அடக்க முடியுமா?" என்று. அப்போதைய நேரத்தில் சாண்டோ சின்னப்பா தேவர் சிங்கத்தின் மீது கை வைத்து தடவி கொடுக்கின்ற படமும், எங்கள் வேதாரண்யம் பி.வி.தேவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் படமும் தான் அதிகளவில் சமூக தளங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டிருந்தது என்பதும் இங்கே நினைவு கூற வேண்டிருக்கிறது.


தீவிர முருக பக்தர்
பாமர ரசிகர்
ஆகச்சிறந்த உழைப்பாளி
கட்டழகான மாவீரர்
மிகச்சிறந்த மனிதர்
மாபெரும் தயாரிப்பாளர்

இப்படியான பல அடையாளங்களும், பெருமைகளும் அவருக்கு இருந்தாலும், "மருதமலை மாமணியே முருகையா... தேவரின் குலம் காக்கும் வேலையா..." என்ற பாடலில் கூறப்படும் வரிகளுக்கு சொந்தக்காரரான தேவரின் குலம் சார்ந்த எம்மை காக்கும் எம்பெருமான் திருமுருகனின் தீவிர பக்தரான திரைத்துறையின் ஒரே அடையாளச்சொல்லான எங்கள் தேவருக்கு 102வது புகழ் வணக்கம்!

(28 ஜூன் 1915 – 08 செப்டம்பர்1978)

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Thevar

28 ஜூன் 2017

இமலாதித்தவியல்



"எதற்கெடுத்தாலும் எல்லா இடங்களிலும் தன்னை மிகைப்படுத்தி கொள்கின்ற அனைத்துமே, தன்னை விரைவாகவே அழித்து கொள்ளும்; தன்னிருப்பை, தன்னுழைப்பை வெளிக்காட்டுவதற்காக மட்டுமென சொல்லிக்கொண்டாலும், தற்புகழ்ச்சிக்காக செய்யப்படுகின்ற புகழ் என்ற போதைக்கு, நிச்சயம் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் வல்லமை உண்டு. தனக்கான தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பினால், தன் அடையாளத்தை எல்லா இடங்களிலும் நிறுவிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் 'நான், நாங்கள், என்னுடைய, எனது, எமது, எங்கள், எங்களுடைய' என்ற எண்ணங்களே எதிர்மறை கருத்தியலை தனக்குத்தானே உருவாக்கி தன்னையே வீழ்த்தும். செயலை தொடர்ந்து, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் அநேகரோடும் இணைந்து வேடிக்கை போல, தன்னையும், தன் செயல்களையும் பார்த்து கடந்து செல்ல பழகிக்கொள்வதே, நிலைத்த வெற்றிக்கான ஒரே வழி."

- இமலாதித்தவியல்

24 ஜூன் 2017

கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவன்!





"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

"பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!"

இப்படியாக ஐயாயிரத்துகும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் மூலம், தமிழால் தமிழர்கள் மத்தியில் இன்று வரைக்கும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிநாட்டு முத்தையாவான கவியரசர் கண்ணதாசனின் இடத்தை நிரப்ப இன்னும் ஒரு கவிஞர் இதுவரை இங்கில்லை.

தான் அனுபவித்த வாழ்க்கையையே ஆய்வு செய்து எழுத்துகளாக்கி, எட்டாவது வரை படித்திருந்தாலும், யாரும் எட்டாத உயரத்தை அடைந்த கவியரசர் கண்ணதாசன் என்ற கவிதை பொக்கிஷம் அவதரித்த 90ம் அகவை நாள் இன்று!

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்