திருத்தேவூர் கோவில் வரலாறு!

தேவகுருநாதர் திருக்கோயில் - தேவூர்


இறைவன் : தேவகுருநாதர் (தேவபுரீசுவரர்,கதலிவனேசுவரர்)
இறைவி : தேன்மொழியம்மை (மதுரபாஷிணி)

இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதாலும் , குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதாலும் தேவகுருநாதர் என்று இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். இத்தலத்தில் பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. மூலவர் தேவகுருநாதர்(தேவபுரீசுவரர்), இறைவி தேன்மொழியாள்(மதுரபாஷினி) ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.
இதன் வேறு பெயர்கள் கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம் என்பன. ஊரின் நடுவே கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகர், அகலிகை வழிபட்ட லிங்கம், கௌதமர் வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், நவக்கிரகம், நடராஜர்சபை, இந்திரலிங்கம், பைரவர், சந்திரன், சூரியன், சோமஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன.


திருத்தலத்தின் சிறப்புகள் :

தலமரம் :
கல்வாழை

இத்தலத்து ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழை
யும் இறைவனை இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.

திருத்தல தீர்த்தம் :

தேவ தீர்த்தம், வருண, கௌதம, மிருத மற்றும் சஞ்சீவினி முதலிய தீர்த்தங்கள்.
திருத்தல பாடல்பெருமைகள் :

திருஞானசம்பந்தர்,நாவுக்கரசர்,மாணிக்கவாசகர்,வள்ளலார்,அருணகிரிநாதர்,சேக்கிழார் ஆகியோரால் பாடப்பெற்ற தலம்.
வழிபாட்டு பலன்கள் :


  • குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.
  • இந்திரன் தனது இந்திர பட்டத்தை இழந்தபோது இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றான். மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.
  • இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.
  • திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.
திருத்தல இருப்பிடம்:

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவூரில் இத்தலம் உள்ளது.நாகை - திருவாரூர் சாலையில் உள்ள கீழ்வேளூருக்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் தேவூர் உள்ளது.திருவாரூரிலிருந்து18 கி.மீ தொலைவிலும்,நாகப்பட்டினத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

திருத்தல முகவரி:

தேவபுரீஸ்வரர் ஆலயம்,
தேவூர் அஞ்சல்,
கிழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ்நாடு - 611 109

நன்றி :  www.karma.org.in, www.shivatemples.com, www.shaivam.org, www.tamil-temples.co

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment