09 நவம்பர் 2015

நரகாசுரன் யார்? தீபாவளி, தமிழர் பண்டிகையா? - ஓர் ஆய்வு.


நராகசுரனை கொன்றொழித்த நாள் தான் தீபாவளியென வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த புராண வரலாறெல்லாம் முற்று முழுதாக உண்மையில்லை. புராணங்களெல்லாம் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, ஏதாவதொரு கதாபாத்திரத்தை கடவுளோடு ஒப்பிட்டு நம்பும்படியாக செய்வதுதான் ஆன்மீக நூலோரின் கடமையாக இருந்தது.

வள்ளுவன் சொன்ன அந்த ஆதிபகவனான சிவஜோதியை முதலாம் தீர்த்தங்கர் ரிஷபதேவரான நந்திதேவர் முதற்கொண்டு 24ம் தீர்த்தங்கராக அவதரித்த மகாவீரர் வரையிலும் சமணம் என்ற மார்க்க பெயரில் பாரத தேசமெங்கம் சாதி வேறுபாடின்றி உண்மையான ஆன்மீகத்தை அவரவர் தாய் மொழிகளின் வாயிலாகவே பரவ செய்தனர்.

இன்றைய நாட்களில் ஹிந்து பண்டிகைகளில் முதன்மையானதாக தீபாவளியே அறியப்படுகிறது என்பதற்கு, கத்தோலிக்க வாடிகனின் வாழ்த்து செய்திகளில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற நாளை நினைவு படுத்தவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்றும், இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பியது நாள்தான் தீபாவளி என்பதே பலரின் நம்பிக்கை.

ஹிந்து என்பது ஒரு மதமென அறியப்படும் முன், பாரதம் உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் ஆதிமதமாக சமணமே விளங்கியது. உலகில் மூத்தக்குடியென அறியப்படும் நம் தமிழர்களின் ஆதிமதத்தின் பெயரே ஆசீவகம் தான். அந்த ஆசீவகமும், சமணமும் ஒன்றே. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என, தமிழின் பழைய அகராதிகளான, திவாகர நிகண்டும் - பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது.

"சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீவகரும் அத்தவத் தோரே"
- திவாகர நிகண்டு

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குக் கற்பித்த மகாவீரரை, 'வென்றவர்' என்ற பொருளில் 'ஜெயனா' என்று மக்கள் அழைத்தனர். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.சம்மணம் போட்டு தியானத்தில் இருப்பதால் ச(ம்)மணர் என்றும், அம்மணமாய் இருந்ததால் அ(ம்)மணர் என்றும், அன்றைய சமகாலத்தில் இவர்கள் அறியபட்டதாகவும் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்தில் இரவு முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி கொண்டிருக்க, விடியற்காலையில் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தவாறே இறந்து விடுகிறார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் முக்தியடைந்த நாளில், மக்கள் அனைவரும் வீட்டினுள் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர்.

தீப+ஆவளி =தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்று பொருள். மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்ததாலேயே தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது.

"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!"

- ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி, (புத்தகம்: சமணமும் தமிழும்)

வர்ணாசிரமங்களை கொண்டு சாதிய அடிப்படையில் கடவுளை வணங்க மனிதனால் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட போலி கொள்கைகளை உடைத்தெறிந்து, உண்மையான ஆதி மார்க்கத்தை வழிகாட்டிய 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் இறப்பானது, ஹிந்து அடிப்படைவாதிகளுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. அதனாலேயே, மகாவீரரை அசுரனாக்கி, பெருமாள் வதம் செய்ததாக பொய் பரப்புரையை புராணக்கதைகள் மூலமாக பரப்பிட காரணமாகவும் அமைந்தது. இது போன்ற பொய் புராண கதையை திருவோணம் பண்டிகையிலும் காணலாம். தமிழ் அகம்படி குலத்தில் உதித்த மாவலி சக்கரவர்த்தியின் இறப்பின் பின்னாலேயே கேரளத்தில் சமகிருதம் கோலோச்சியது. கேரள தமிழ் மன்னனை கொன்றொழித்த நாளே ஓணம் பண்டிகையென அம்மக்களையே நம்ப வைத்தது கூட பொய் புராணக்கதைகள் தான் என்பதும் சிந்திக்க வேண்டிய விசயமாகும். எது எப்படியோ, தமிழர்களின் ஆதி மதமான ஆசிகவத்தின் இறைத்தூதரான மகாவீரரின் நினைவுநாளை தீபமேற்றி மனதில் ஏற்றுவோம் அவரது நினைவேந்தலை!

கொல்லாமை வேண்டாமென்று சொன்ன மகாவீரரின் நினைவுநாளிலேயே அசைவம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்; இதுதான் கால மாற்றம். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழின உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக