கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல் 2021

இந்து அறநிலையத்துறையும், ஜக்கி வாசுதேவும்!

        "ஜக்கி வாசுதேவ், திராவிடர். எதிர்ப்போம். பிரசாந்த் கிஷோர், ஆரியர். ஆதரிப்போம்." என பேசும் திராவிட அரசியல் பேசும் ஆட்கள் அனைவருமே மக்களை ஏமாற்றும் செயல்களையே செய்கின்றனர். இங்கே நடைபெறும் அனைத்து வணிகம் சார்ந்தது தான். அது, அரசியலோ, ஆன்மீகமோ, மருத்துவமோ, விளையாட்டோ, எதுவாகினும் அனைத்தும் வணிகமயமாகி விட்டன.

        கோவில்களை பற்றி ஜக்கி வாசுதேவ் பேசியதும் கொந்தளிக்கும் நபர்கள், இந்து அறநிலையத்துறையில் உள்ள ஊழல்களை பற்றி பேசுவதில்லை.
இந்து அறநிலையத் துறைக்கான அமைச்சர் உள்ளிட்ட அரசு ஊழியர்களால், கட்சி ஆட்களின் தலையீட்டால் கோவில்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆன்மீகத்தின் பெயரில் லஞ்சமே தலைவிரித்து ஆடுகின்றன. கிறிஸ்துவ மத பற்றாளருக்கு இந்து ஆலயத்தில் அரசு பணி வழங்கிய போக்கும் ஊழலின் நீட்சியே.
 
        கோவில் மூலவரை விரைவாக தரிசிக்க உருவாக்கப்பட்டிருக்கும் வி.ஐ.பி. தரிசனத்தில் அர்ச்சகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையால் ஏற்படும் சிரமங்களெல்லாம் பாமர பக்தர்களின் மீது தான் விழுகின்றன. கோவிலுள்ள உண்டியல்களில் கூட அர்ச்சகர்களுக்கும், அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு உண்டு. பணம் யாருக்கென்ற அடிதடி போட்டிகளும் ஆங்காங்கே நடைபெறுவதை பார்த்துக்கொண்டு தான் கடக்கின்றோம்.
 
        சிலை கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகப்பெரும் ஆன்மீக அடையாளமாய் இருக்கும் பெரியாட்களே முதன்மையாக இருக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான சிலைகள் காணாமல் போவதும், மூலவருக்கான தங்க வைர நகைகள் பரவலாக எடைகுறைப்பு செய்யப்படுவதையும் அன்றாட செய்திகளாக பார்த்து வருகிறோம். பெரும்பாலான கோவில்களில் தட்சிணை வைக்கவில்லையென்றால் தரிசனமே கிடைக்காது. படியில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர், எழுந்து கூட தீபாராதனை தட்டை காட்டுவதில்லை. விபூதி குங்கும பிரசாதம் கூட தட்சினையை பொறுத்தே வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கோவிலுக்குள் நடைபெறும் கூத்துகள்.

        ஒவ்வொரு கிராமக்கோவில்களும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்து விட்டன. அனைத்து கோவில்களிலும் உற்சவர் சிலைகள் உண்டு. பெரும்பாலும் அவையெல்லாம் ஐம்பொன் சிலைகளாக இருக்கும். ஒவ்வொரு மாதாந்திர வருடாந்திர திருவிழாக்களின் பொழுது, வீதிவுலா செய்யும் உற்சவர் சிலையை அந்தெந்த கோவிலில் வைக்க விடுவதே இல்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி, பல மைல் தொலைவிலுள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் எடுத்து கொண்டு போய் விடுகின்றனர். கோவில் திருவிழாவின் பொழுது வசூல் செய்து வாங்கிய அந்த உற்சவர் சிலையை எடுத்து வர, இந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு முறைப்படி ஒருமாதம் முன்பே கடிதம் கொடுத்து, ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்தால் தான் உற்சவர் ஊருக்கு வருவார். இல்லையெனில் கெடுபிடிகள் தான். சில ஊர்களில் லஞ்சம் கொடுத்து சமாளிக்க முடியாததாலும், கெடுபிடிகள் அதிகமிருப்பதாலும் ஊர்க்காரர்களே வசூலித்து மற்றுமொரு உற்சவர் சிலையை வாங்கி வைத்து அறநிலையத்துறையின் கெஞ்சிக் கொண்டிருக்காமல் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்கின்றனர்.
இதெல்லாம் நேரடியாக கண்ட, கேட்டுணர்ந்த நிகழ்வுகள். இந்து அறநிலையத் துறையை பற்றி சுட்டிக்காட்ட இதுமாதிரியாக பல செய்திகள் உண்டு.

அடுத்து கோவில்களுக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், பெரும்பாலான சிறு நகரங்களிலும், பல கிராமங்களிலும் உள்ள பல வீட்டு மனைகள் கோவில் நிலங்களே. மேலும், நகர்புற வணிகவளாகங்கள், முக்கிய இடங்களெல்லாம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டு மிக சொற்பமான குத்தகை/வாடகை பணம் கூட சரிவர தரப்படுவதில்லை. இன்னும் ஒருபடி மேலாக போய், பல கோவில் இடங்கள் தனியாரின் சொத்தாகி கூட கை மாறியிருக்கின்றன. அதிலுள்ள உரிமையாளர்களில் மாற்று மதத்தினரும் உண்டு. கிராமப்புறங்களிலுள்ள எளிய மக்களை தவிர, பெரும்பாலான கோவில் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவருமே கட்சி ஆட்களாகவும், ஏதாவதொரு கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு வேண்டிய ஆட்களாகவுமே இருக்கின்றனர்.
 
        இந்து அறநிலையத்துறையை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி தங்களது கட்சியின் சொத்துகளாக்கி ஆக்கிரமித்த கதையெல்லாம் ஒவ்வொரு தனிநபருக்கும் தெரியாமல் இல்லை. நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதால் தான், கர்நாடகத்தில் இருந்து இங்கே வந்து ஆன்மீகத்தை மூலதனமாக்கி கார்ப்ரேட் நிறுவனம் போல கட்டமைத்து தொழில் செய்யும் ஜக்கி வாசுதேவ் போன்றோர் கோவில்களை கைப்பற்ற களமிறக்கப்பட்டிருக்கின்றனர். நாம் எதிர்க்க வேண்டியது ஜக்கி வாசுதேவை மட்டுமல்ல; அவரை எதிர்க்கும் கட்சி ஆட்களையும் தான். இரு தரப்புக்குமே இங்குள்ள கோவில்கள் மீது அக்கறையெல்லாம் இல்லை. கோவில்களை சார்ந்திருக்கும் அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த நினைக்கும் வணிக சண்டையே இவர்களுக்கு முதற் நோக்கமாக இருக்கிறது.
 
- இரா.ச. இமலாதித்தன்

22 ஏப்ரல் 2016

கோவில்களுக்கு பின்னுள்ள அரசியல்!



-01-

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள புள்ளிருக்கு வேளூர் என்ற வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் 'சடாயு குண்டம்' என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இது தவிர, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரையின் முனையின் 'ராமர் பாதம்' என்ற உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை இராமாயணத்தில் இராமர் இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும், அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
திருமறைக்காடு என்ற எங்கள் ஊரையெல்லாம் இந்த வடக்கத்திய மேப்பில் காணவில்லையே?! இதுல எது உண்மை? எது பொய்?

-02-

முகாலயர்களின் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ சிவன் கோவில்களை ஆக்கிரமித்து தான் மசூதிகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்பதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ, அதற்கு நிகரான மற்றுமோர் உண்மை என்னவெனில், முகலாயர் காலத்திற்கு முன்பாக வே கணக்கிலடங்கா சமண கோவில்களை ஆக்கிரமித்து தான் பல சிவன் கோவில்களும் கட்டியெழுப்பப்பட்டன என்பது தான்!

- இரா.ச.இமலாதித்தன்

25 மார்ச் 2016

அறவழி வந்தோர் அகமுடையார்!



எனக்கு தெரிந்து நான் இதுவரையிலும் நூறுக்கும் மேற்பட்ட பழம்பெரும் சிவன் கோவில்கள் தரிசித்து இருக்கிறேன். தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் நான் பல கோவில்களில் 'சேர்வை' என்ற பட்டத்தோடும், பல பெயர்களோடு பின்னிணைப்பாக 'சேர்வை' பட்டம் போட்டுள்ள பலரது பெயர்களையும் கல்வெட்டில் பார்த்திருக்கிறேன். இது பற்றிய மேலதிக ஆய்வு செய்தால் அகமுடையாரின் ஆன்மீக பணியின் முக்கியத்துவம் புரியவரும்.
அறவழி வந்தோர் அகமுடையார்!

படம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருத்தேவூர் மாடக்கோவில்.

11 மார்ச் 2016

வாணாதிராயர்களின் வரலாற்று அழிப்பு!





அகமுடையார் வழித்தோன்றலான வாணாதிராய அரசமரபினர் தமிழகமெங்கும் கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆட்சிக்குட்பட்ட 'வாணாதிராய மதுரை'யே இன்றைக்கு 'மானாமதுரை'யாகி போனது.

மேலும், அழகர்கோவிலை தலைநகரமாக கொண்டு மதுரையையும் ஆண்ட வாணாதிராய அகமுடையார்கள், அழகர்கோவிலைச் சுற்றி 14ம் நூற்றாண்டில் நீண்டதொரு வெளிக்கோட்டையை காவல் அரணாக கட்டினார்கள். பகைவர்களின் தாக்குதலிலிருந்து அழகர்கோவிலை பலமுறை காப்பாற்றிய சிறப்பு வாய்ந்த கோட்டையை, தற்போது பழுதுபார்க்கிறோம் என்ற பெயரில் 'தொல்லியல் துறை' கோட்டைச்சுவர்களின் பழம்பெருமைகளை சிதைத்து கொண்டிருக்கின்றனர் என்பது வேதனையான விசயம்.

ஏற்கனவே, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள கல்வெட்டுகளையும் பழம்பெரும் சிற்ப ஓவிய வேலைப்பாடுகளை யெல்லாம் சீரமைக்கிறோம் என்ற பெயரில் சிமெண்ட் பூசி சிதைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இதுமாதிரியான கோட்டைகளின் பழமைதன்மையையும் பாறை கற்களை பெயர்த்தெடுத்து சிமெண்ட் பூசி சிதைக்கிறார்கள். வரலாற்றை பழைமை மாறாமல் காக்க வக்கில்லாத 'தொல்லியல் துறை' இங்கே இருந்தென்ன லாபம்? என்பதுதான் பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

மேலும், இந்த அழகர் கோவில், பெரும்பான்மையான அகமுடையார்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

17 டிசம்பர் 2015

ஆகவிதியும் அட்ராசிட்டியும்!

நல்ல நாள் அதுவுமா, கோவில் வாசல்ல ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, கோவில் அலுவலகத்துல பத்து ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டு வாங்கி, அர்ச்சகர் கிட்ட போய் நம்ம ராசி - நட்சத்திரத்தை சொன்னா, அதை காதுலேயே வாங்காம காணிக்கையை போடுங்கன்னு மிரட்டுற தொனியில சொல்ற அர்ச்சகரை தான் நூத்துக்கு தொன்னுத்தொன்பது இடத்துல பாத்துருக்கேன். இதெல்லாம் என்ன எழவு விதியோ? என்ன மானங்கெட்ட குலத்தொழிலோ?

#

குலதெய்வம் கோவில்களிலும், ஊர்புற அம்மன் கோவில்களிலும் எந்த ஆகமவிதிப்படி அர்ச்சனை நடக்கிறது? எந்த ஆகமவிதிப்படி கடவுள் பூசாரியின் உடலில் வந்து தெய்வ வாக்காக குறி சொல்கிறார்? பூசாரி மட்டுமல்ல, கோவிலுக்கு வந்த யார் மீது வேண்டுமானாலும் அந்த கடவுள் அடிக்கடி வந்து போகிறாரோ? எனக்கு ஆகமவிதியை புறந்தள்ளிய இந்த கடவுளே போதும்! இறக்குமதி செய்யப்பட்ட எந்த கடவுளும் தேவையில்லை.

#

நான் தீவிர கடவுள் நம்பிக்கையாளன். என் ஆன்மீகறிவுக்கு எட்டியபடி, ஆகம விதிப்படி தான் கடவுளை ஆராதனை பண்ணமுடியும்ன்னு எந்த கடவுளும் உட்சபட்ச நீதியை வழங்கவில்லை என்பதை அறிவேன். ஏனெனில், எந்த கடவுளும் பூநூலை போட்டுக்கொண்டு மேல்தட்டு சாதியவாதியாக இருக்கவில்லை.

#

'சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற காமெடி போலத்தான், இந்த ஆகமவிதியும்!

#

சங்கரராமன்களும், தேவநாதன்களும் தான் ஆகமவிதிக்கு உரிமை கொண்டவர்களா? கோவில் கட்டி மண்ணையே ஆண்ட பரம்பரை என வீர முழக்கமிடும் என் அகமுடையார் குடியில் பிறப்பெடுத்த இந்த இமலாதித்தன் போன்றவர்களுக்கு வெறும் தலைவிதி மட்டும் தானா சொந்தம்?

#

"சாதியும் - நிறமும் ஆன்மீகத்திற்கு சர்வ நிச்சயமாக கிடையாது!"
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

குலத்தொழிலில் போர்குடிகளை தவிர்த்த ஏனையர்களும் வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கடந்தகால / நிகழ்கால வரலாறு. அதனால் குலத்தொழில் என்பதெல்லாம் ஒரு மாயை.
கோவில் கருவறையில் காம களியாட்டம் ஆடிய காஞ்சிபுரம் தேவநாதனின் குலத்தொழில் எது?

சித்தர்களில் - நாயன்மார்களில் - நால்வர்களில் - ஆழ்வார்களில் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்? இவர்களில் எத்தனை பேர் ஆகமவிதியை பயின்றவர்கள்?

அனைத்து சாதியிலிருந்தும் முறையாக பயின்று வரும் நபர்கள் சரியான முறையில் ஆன்மீக சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அன்று கோவில் கட்டிய தமிழ்குடிகளின் வருங்கால தலைமுறைகள், இன்று முறையாக பயின்ற பின்னால் கோவில் கருவறையில் நுழைய யாரும் தடை போட கூடாது. அப்படி இருந்தால் அந்த தடையை உடைப்போம் தமிழனாய்!

#

எங்க நாகப்பட்டினத்தில் மீனவனாய் பரதவர் குலத்தில் பிறந்த 'அதிபத்த நாயனார்' எந்த ஆகமவிதிப்படி வெறும் நாற்றம் பிடித்த மீனை கொடுத்து கடவுளை வணங்கி, அவரையே நேரில் வர வைத்தார் என்பதை சட்டமேதை என்ற அறிவுஜீவிகளால் பதில் சொல்ல முடியாது.
கடவுள் என்பது உணர்வு. அதுவொரு உட்சம் தொட்ட அறிவுநிலை. அது வேறுபாடற்ற அன்பின் நிறைவு. நான் யாரென்ற புரிதலோடு இயற்கை சூழ் இந்த உலகமடங்கிய ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை அணு அணுவாக அனுபவித்து, அணுவாகவே இடம் பெயர்ந்து அதுவாகவே ஆகிவிடும் பெரும்போதை. அதை இந்த ஆகம விதி, ஆகாத விதியென ஒப்பிட்டு இனியும் ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

06 ஜூன் 2015

செம்பியன் மகாதேவியின் சித்திரை கேட்டை திருவிழா!

தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்த செம்பியன் மாதேவியின் ஜென்ம நட்சத்திரத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் சின்ன மகிழ்ச்சி.


நாகை மாவட்டம் செம்பியன்மகாதேவி என்ற ஊரில் செம்பியன் மகாதேவியாலேயே கட்டியெழுப்பப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அங்கு செம்பியன்மாதேவியின் பிறந்த நாளான சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் வருடம் தோறும் கேட்டை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஊர் மக்களே சீர் எடுத்து வந்து அங்குள்ள செம்பியன்மாதேவி கற்சிலைக்கு சிறப்பு செய்து வழிபடுவார்கள்! இன்று அந்த கோவிலும் கேட்பாரற்று தான் கிடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு நவகிரக கோவில்கள் போன்ற வருமான தரும் கோவில்களை கணக்கிலெடுத்து கல்லா கட்டத்தான் நேரம் சரியா இருக்கு.

ஆளப்பிறந்தவன்...

இரா.ச.இமலாதித்தன்

03 பிப்ரவரி 2015

திருக்குராவடி எனும் திருவிடைக்கழியில் முருகனும் சிவனும்!



முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி. சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படும் இந்தக் கோவில், நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தூரத்திலும், தில்லையாடிக்கு மேற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார். 

சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவணபொய்கையில் நீராடி, இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக விளங்குகிறது. மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.

இந்த ஆலயத்தில் வழிபட்டால், ஒருவருக்கு ஜாதகரீதியாக உள்ள மாங்கல்யதோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி, சுபீட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஆண்டு முழுவதும் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. சிறப்பு திருவிழாவாக வைகாசி சதய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நான் அடிக்கடி செல்லும் கோவில்களில், என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கோவில் இது. தைப்பூசம் என்பதால் இன்றைக்கும் சென்று வந்தேன். ஒருமுறை நீங்களும் வந்து தரிசித்து பாருங்கள்.

இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!