16 நவம்பர் 2015

குறிஞ்சாக்குளத்து பிரச்சனை துணை நிற்குமா தேவரினம்?

குறிஞ்சாக்குளத்து கோவில் பிரச்சனைக்கு முக்குலத்தோர் அமைப்புகளும், மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும் துணை நிற்குமா?
கலிங்கப்பட்டியை தெரிந்து வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு அதன் அருகிலுள்ள குறிஞ்சாக்குளத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குறிஞ்சாக்குளத்தில் 1992ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அப்பகுதி வடுகர்களால், அதே பகுதியை சார்ந்த மண்ணின் மைந்தர்களான நான்கு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக ஏன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்கள்? என்பதை பற்றி கவலைப்படவோ, யோசிக்கவோ கூட நமக்கு நேரமில்லை. காரணம் கேட்டால், அது 'பறையர் - நாயக்கர்' சாதி பிரச்சனையென சொல்லி எளிதாக கடந்து, மறந்து விடுகிறோம்.

உண்மை என்னவெனில் அங்குள்ள தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதுதான் துயரமான செய்தி. அக்குள்ள பெரும்பாலான நிலப்பகுதி வடுகர்களிடம் இருந்ததால், தமிழனுக்கு கோவில் கட்ட இடம் கொடுக்க மனம் வரவில்லை; அதனால் தான் நால்வர் படுகொலை அரங்கேறியது.

இந்த கொலைக்கு, கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மாமா திரு. சங்குவெட்டி மோகன்தாசு நாயக்கர் தான் என திருவேங்கடம் காவல்துறை குற்றஞ்சாட்டியும் பலன் ஏதுமில்லை. காரணம் என்னவெனில் மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பிதான், இந்த கொலை வழக்கின் முதல் குற்றவாளியான ரவிச்சந்திரன்.

இதெல்லாம் கடந்த கால வரலாறு. இப்போதைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. குறிஞ்சாக்குளத்தில், கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட நால்வரின் கனவைவும், தமிழர்களின் உரிமையையும் நிறைவேற்றும் நோக்கத்தோடு தமிழின உணர்வாளர்களால் அங்கே, கந்தாரி அம்மனுக்கு கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மீண்டும் ஒரு யுத்தக்களம் வெடித்துள்ளது.

மதுரையில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுத்த முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் முக்குலத்தோர் அமைப்புகளும், கி.பி.1800 களிலேயே சாதி மத வேறுபாடின்றி 'வீரசங்கம்' என்ற அமைப்பின் மூலம் அனைத்து தமிழ் இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து காளையார்கோவில் கோபுரத்தை கட்டி காத்து, சிவகங்கையை கி.பி 1780 முதல் கி.பி 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் கொள்கைகளை பின்பற்றும் அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்புகளும், அகமுடையார் அமைப்புகளும், இந்த கோவில் கட்டும் பிரச்சனையை கையில் எடுத்து, சாதி என்ற வட்டம் தாண்டி சக தமிழர்களின் பிரச்சனைக்கும் தோள் கொடுப்பதுதான் காலத்தின் தேவை.

மண்ணின் மைந்தர்களான சக தமிழ் இனக்குழுக்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை, தன் மக்கள் பிரச்சனையென முடிவு செய்து, குறிஞ்சாக்குளம் காந்தாரி அம்மனுக்கு கோவில் கட்ட தடையாய் இருக்கும் அனைத்து எதிர்ப்புகளையும் உடைத்து, தமிழர்களாக ஒன்றிணைந்து ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக