31 டிசம்பர் 2016

ஆண்டின் முதல் நாள் உறுதிமொழி ஏதெனில்...

31 டிசம்பர் 2016க்கும், 01 ஜனவரி 2017க்கும் இடையே ஒரேவொரு நாள் மட்டுமே வித்தியாசம். மற்றபடி எந்தவித மாற்றமும் வந்துவிட போவதில்லை. நாம் நமக்குள்ளாகவே சிலவற்றை மாற்றிக்கொள்ளாத வரை எந்த மாற்றமும் நம்மை சுற்றி நடந்து விடாது. புத்தாண்டிலிருந்து ஏதாவதொரு கெட்டப்பழக்கத்தை விடப்போவதாக பலரும் சொல்லிக் கேள்விப்படுகிறோம். உண்மையில் எது கெட்டப்பழக்கம்?யென தெரிந்த பின்பே அந்த பழக்கம் நம்மோடு நிரந்தரமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் மனதளவில் அது கெட்ட பழக்கமென ஆழமாக பதிந்த பிறகு, அந்த பழக்கம் படிப்படியாக நம்மை விட்டு விலகிவிடும். முதலில் எது கெட்ட பழக்கம்? எது நல்ல பழக்கம்? என்ற சுய மதிப்பீடு செய்து பார்த்தாலே போதுமானது. தனியாக அதற்கென நாள் குறித்து எதையும் விட்டொழிக்க வேண்டியதில்லை.

பெரும்பான்மையானவர்கள் கெட்டப்பழக்கம் என அவர்களுக்குள்ளாகவே கருதுவது, குடிபழக்கத்தையும் - புகை பழக்கத்தையும் தான். தெரிந்த தவறுகளுக்கு தீர்மானம் போட்டு திருத்த வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர்களால் விட்டொழிக்க முடியாமல் போனபின்பு தான் இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டிருக்கிறது. இப்படியான புகை/மது போன்ற உடல் நலத்திற்கு சம்பந்தப்பட்ட பழக்கத்தை விடுவதற்கு முன்னதாக, மனதளவிலான சில பழக்கங்களை உங்களின் ஆழ்மனதுக்குள் மாற்றிக்கொள்ளுங்கள். 'நான் என்ற ஈகோ - தனிப்பட்ட புகழ் பேசி கிடைக்கின்ற சுய பெருமை - தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பொறாமை படுவது - இவற்றிற்கெல்லாம் பின்விளைவாக உருவாகின்ற அர்த்தமற்ற அதீத கோபம்' யென்ற இதுபோன்ற பழக்கங்களை விட்டொழித்து பாருங்கள். 2017 மட்டுமல்ல; ஒவ்வொரு புத்தாண்டும் மகிழ்வாகவே அமையும்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக