11 மார்ச் 2016

அரசியல் களத்தில், நேதாஜியின் பேரனும் - பசும்பொன் தேவரின் பேரனும்!


நேதாஜியின் பேரனுக்கு கூட நேதாஜி உருவாக்கிய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்காததால், இன்றைக்கு அவர் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக்க பட்டிருக்கிறார் என்பதுதான் சமகால அரசியல் நிலவரம்.

மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தற்போது ஓரளவுக்கு அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்படுகின்ற பார்வார்ட் ப்ளாக் கட்சியும், அ.இ.அ.தி.மு.க போல அகில இந்திய கட்சிதான் என்ற நிலைக்கு மாறி போய்விட்டது. அப்படிப்பட்ட பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக இருந்த பசும்பொன் தேவரின் பேரனுக்கும் கூட பார்வார்ட் ப்ளாக் கட்சி உரிய அங்கீகாரம் கொடுக்காததால் தனியாக பசும்பொன் தேசிய கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
ஆனால் இதையே சாதகமாக சொல்லக்கூடும். 'பார்த்தீர்களா, நேதாஜி பேரனோ, பசும்பொன் தேவர் பேரனோ யாராக இருந்தாலும், அவர்களை கட்சியில் இணைக்காமல் வாரிசு அரசியலையும் ஊக்குவிக்காத கட்சியாக பார்வார்ட் ப்ளாக் கட்சி விளங்குகிறது' என வாதத்திற்காக சொல்லிக்கொள்ளலாம்.

சாமானியனாக என் பார்வையில், இருபெரும் தலைவர்களின் பேரன்களும் அரசியல் பக்கமே வராமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அரசியலில் பயணிக்க விருப்பம் இருக்கும் போது, அதை பார்வார்ட் ப்ளாக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டதென்றே தோன்றுகிறது.

நேதாஜியும், பசும்பொன் தேவரும் வளர்த்தெடுத்த கட்சியில் அவர்களது பேரன்களை கூட உறுப்பினராக்க முடியவில்லை என்ற எதார்த்தமும் புரியாமல், சாதிக்கட்சி என்று முத்திரையும் குத்தப்பட்டதென்ற உண்மையும் உணராமல், இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள பார்வார்ட் ப்ளாக் கட்சி, குறைந்தது ஐந்து தொகுதிகளையாவது அதிமுக கூட்டணியில் வாங்கி, கட்சியை பலமாக்காட்டும்.

ஜெய்ஹிந்த்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக