02 அக்டோபர் 2014

நேதாஜியின் ஆயுதமும்! காந்தியின் சுதந்திரமும்!

ஆயுதத்தின் மீது நம்பிக்கையில்லாத மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தநாள் அன்னைக்கு, இந்த ஆயுத பூஜை வந்திருப்பது கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருக்கு. அர்ஜீனன் உள்பட பாண்டவர்கள் அனைவரும் காட்டில் வசிக்கும் கடைசி ஒரு வருடகாலம் தங்களது ஆயுதங்களை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்து விட்டு, ஒரு வருடம் கழித்து இந்த புரட்டாசி மாதத்தில் திரும்ப எடுத்து பூஜை செய்த நாளை ஆயுதபூஜையாகவும், அதனை தொடர்ந்து போரில் வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாகவும் நாம் கொண்டாடி வருகின்றோம்.

ஆனால், காந்தியோ 1939ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தியும் நேதாஜியிடம் தோல்வியடைந்தார். இதனால், சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி.

அதன் பிறகு நேதாஜியின் ஆயுத போரட்டத்தால் மிகப்பெரிய சரிவை ஆங்கில ஏகாதிபத்தியம் அடைய நேரிட்டது. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியர்களின் வீரத்தை வெளி உலகக்கு வெளிப்படுத்திய ஆயுதமேந்திய நேதாஜியை தீவிரவாதி என்று காட்டி கொடுத்தது காந்தி & கோ. இதற்கு மேல் இந்தியாவில் சுரண்ட எதுவுமில்லை; மக்கள் அனைவரும் நேதாஜி வழி ஆயுத போரட்ட எழுச்சிக்கு தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்த வெள்ளையன், யாசகமாக கொடுத்த சுதந்திரத்தை தானே அடைந்தது போல் காட்டி கொண்டனர் காந்தி & கோ. மேலும், தலைமறைவாக இருந்த நேதாஜியை காட்டி கொடுத்தது மட்டுமில்லாமல் கைது செய்து பிடித்து உங்களிடம் ஒப்படைப்போம் என்று ஆங்கிலேயனிடம் உத்திரவாதமும் கொடுத்த இந்த காந்தி - மகாத்மாவாம், தேசத்தந்தையாம்!

இந்த ஒட்டுமொத்த தேசத்திற்கும் தந்தை என்ற பட்டத்தை  யார் கொடுத்தது? எதனால் கொடுத்தார்கள்? எப்போது கொடுத்தார்கள்? என்ற கேள்வியை உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற பத்து வயது மாணவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக  2011ம் ஆண்டு கேட்டபோது,  ”காந்திக்கு தேசத்தந்தை என்ற அடைமொழியானது எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.” என்றே பதில் வந்தது. இது தான் காந்தி. இவ்ளோ தான் காந்தி. பார்பனிய சிந்தனைக்கும் - பாகிஸ்தான் பிரிவினைக்கும் சொந்தகாரரான காந்தி, ஒருபோதும் மகாத்மாவும் கிடையாது; தேசத்தந்தையும் கிடையாது. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் வீரத்தை தட்டியெழுப்பி ஆயுதமேந்த வைத்து ஒட்டுமொத்த இந்தியர்களை தலை நிமிர வைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் எங்களுக்கு எப்போதுமே தேசத்தந்தை!

வீரமிக்க அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக