25 நவம்பர் 2014

பசும்பொன் தேவரின் குருவான சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி!


தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. நீதிபதி அனந்த நாராயணன், சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் அங்கே சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.

ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் இந்த ஜீவசமாதிக்கு செல்வதற்காக மூன்று முறை முயற்சித்தும் தரிசிக்க முடியாமல் போனதால், நான்காவது முறையாக நேற்று (24.11.2014) மாலை இந்த ஜீவசமாதிக்கு சென்று வந்தேன். தேவர் மீது பற்றுள்ள அனைவரும், நேரமிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

செல்லும் வழி:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி உயிர்துடிப்புடன் இருந்து வருகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

24 நவம்பர் 2014

என் பெற்றோர்களின் தமிழ்முறை திருமண பத்திரிகை!




இது என் பெற்றோர்களின் (1984ம் ஆண்டில் நடைபெற்ற) தமிழ்முறை திருமண பத்திரிகை! உறவினரல்லாத நண்பர்களுக்காக அச்சடிக்கப்பட்டது...

‪#‎பொக்கிசம்‬

என் தாத்தாவின் கடிதம்




'வண்டலூர் கிராம முன்னேற்ற சங்கம்' கூட்டத்தை கூட்ட சொல்லி, 04-04-1966 ம் ஆண்டு என் தாத்தா உயர்திரு அ.இராமாமிர்ததேவர் எழுதிய கடிதம். மேலும், என் பெரிய தாத்தாவான உயர்திரு அ.பக்கிரிசாமித்தேவர் அவர்கள் நேதாஜி படையில் இருந்தவர். அவர் என் தந்தைக்கு எழுதிய கடிதத்தை அடுத்த வாரம் பதிகின்றேன்.

‪#‎பொக்கிசம்‬

கீழ வெண்மணியும் - வரலாறும்!

விவசாய அறுவடை கூலியாக தரும் ஒரு படி நெல்லிலிருந்து இரு படி நெல் தரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இருந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் துயர சம்பத்திற்கு பிறகு 'கீழ வெண்மணி' என்ற கிராமம் தமிழக கம்யூனிசத்தின் ஆணிவேராக மாறிபோனது. 36க்கு 12 என்ற நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீட்டுக்குள் வைத்து 44 பேரும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 20 பெண்கள்; 13 வயதிற்கும் குறைவான 19 சிறுவர்கள்; 70 வயது பெரியவர் உள்பட 5 ஆண்களென மொத்தம் 44 அப்பாவிகள் கொல்லப்பட்ட பிறகும், தன் சாதியை சார்ந்த ஒருவரால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதை அறிந்திருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கடைசி வரையிலும் எந்தவித பெரிய எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் துரோக வராலாற்றுக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட கீழ வெண்மணிக்கு மூன்று மைல் தொலைவில் தான் வண்டலூர் எனும் கிராமமும் உள்ளது.

டெல்டாவில் பெரும்பாலான விவசாயம் சார்ந்த கிராமங்களிலெல்லாம் கம்யூனிசம் மிக வலுவாக கால் பதித்திருந்த நிலையில், கீழவெண்மணிக்கு மிக அருகிலுள்ள வண்டலூரில் கிளை செயலாளர் என்ற மிகச்சிறிய பதவியில் இருந்த என் தந்தை இரா.சம்பந்தம் அவர்களின் தீவிர முயற்சியால், தீவிர கம்யூனிசத்தொண்டர்களை திராவிட கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்தார் என்பது கடந்த கால வரலாறு. இங்கே திராவிடம் - கம்யூனிசம் என்று ஒப்பிட்டு பேசி எது சரி? எது தவறு? என்பதையெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், எளியவனுக்கும் நேர்மையான மனத்திடத்துடன் கூடிய ஆளுமை திறனிருந்தால், எந்தமாதிரியான களத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை சொல்லவே இந்த பதிவு. மேலும், கம்யூனிசம் பரவியிருந்த மண்ணில் திராவிடத்தை திணித்திருக்கும் போது, திராவிடம் பரவியிருக்கும் இக்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாதா என்ன? முடியும்.

வரலாறு என்பது மன்னர் என்று நிறுவுவதில் மட்டுமல்ல; மண் சார்ந்த புது மாற்றத்திலும் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

19 நவம்பர் 2014

சின்ன கலைவாணருக்கு வாழ்த்துகள்!


கலவரத்துக்கு பெயர் போன தென்தமிழகம் தான் இவரது பூர்வீகமென்றாலும் கலகலப்புக்கு சொந்தக்காரர்.

வேலையிலிருந்த பட்டதாரிகள் நிறைந்த அந்த காலத்திலேயே இவர் எம்.காம் முதுகலைப் பட்ட தாரி.

தமிழ்நாடு தலைமை செயலகத்தின் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்த முன்னாள் அரசு ஊழியர்.

சிவ கார்த்திக்கேயன், மதுரை முத்துக்கு முன்பாகவே ஸ்டேன்ட்-அப் காமெடியை முதன்முதலில் பிரபல படுத்திவர்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், ரஜினி காந்த, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களை பேட்டியெடுத்தவர்.

ரஜினி, கமலை போலவே இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் இவரை அறிமுக படுத்தினார்.

1987ல் ”மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தார்.

1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார்.

சினிமாவில் சமூக மூடநம்பிக்கைக்கு எதிரான பல சீர்திருத்த கருத்துகளை மிக ஆழமாக பதிவு செய்து வரும் இவரின் மனதுக்கு மிகவும் நெருங்கியவர் ஷீரடி சாய்பாபா.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றவர்.

'உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் நான்கு மாநில விருது அரசு விருகளை பெற்றவர்.

மேலும், ‘எடிசன் விருது’, ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’, ‘ஐ.டி.எஃப்.ஏ விருது', ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றவர்.

குறிப்பாக இந்திய அரசால் ’பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றவர்.

”நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்” எனக்கூறி ’க்ரீன் கலாம்’ திட்டத்தினால் பல லட்சம் மரக்கன்றுகள் ஊன்றி பசுமை புரட்சி செய்து வருபவர்.

இயற்பெயரான விவேகனாந்தனிலிருந்து, சினிமாவால் விவேக் ஆனவர்.

அகவை 54ல் அடியெடுத்து வைக்கும் ”சின்ன கலைவாணர்”, ”ஜனங்களின் கலைஞன்” அண்ணன் திரு. விவேக் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எம்பெருமான் திருமுருகன் அருளோடு வாழ்க வளமுடன்!

- இரா.ச.இமலாதித்தன்

18 நவம்பர் 2014

வீரமும் வீரம் சார்ந்த இடமும்!



”வீரமும் வீரம் சார்ந்த இடமும்!” - தைத்திங்கள் ஆயத்த ஆடை பட்டறை மூலமாக இந்த டீசர்ட் (வாசகம்) உருவாக அடியேனும் ஒரு காரணம்.

இதை #சுயபெருமை ன்னு கூட வச்சிக்கலாம்.

17 நவம்பர் 2014

ரஜினியெனும் மாபெரும் நடிகன்!


ஓரளவுக்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகமில்லாத தன்னுடைய படங்கள் வெளிவரும் போதெல்லாம், ”அரசியலுக்கு வருவேன்!” யென கீழ்த்தரமான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி, படத்தை பாமர ரசிகனுக்கு கொண்டு செல்லும் ஈனத்தனமான புத்தியை இந்த ரஜினி என்னைக்கு தான் விட்டு தொலைக்கப்போறாரோ தெரியவில்லை. கோடி கோடியாய் சம்பாரித்த பிறகும் ”வசூல் நாயகன்” என்ற புகழ் போதைக்காக ஆண்டவனை ஊறுகாய் போல தொட்டுக்கொள்ளும் ரஜினி, திராணி இருந்தால் அரசியலுக்குள் வந்து பார்க்கட்டுமே. இந்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை எத்தனை நாள் தான் தன்னந்தனி ஆளாக சுமந்து கொண்டிருப்பார்? பாவம்.

“எதுவாக இருந்தாலும் சரி அதை கடவுள் தான் முடிவு செய்வார். அது என்னவென்று எனக்கு தெரியாது. எதுவாக இருப்பினும் மக்களுக்கு நல்லதையே செய்வேன்!” இப்படி பேசியுள்ள ரஜினி, தன்னுடைய கதைகளில் உருவான வள்ளி - பாபா போன்ற படங்கள் ஓடாதென்று அவருக்கு கடவுள் சொல்லவில்லையா? ஏற்கனவே வெளிவந்த மாற்று மொழி திரைப்படத்தை ரிமேக் செய்து வடிவேலுவையும் - ஜோதிகாவையும் நம்பி சந்திரமுகியால் ரீ எண்ட்ரி கொடுத்த போதும் கூட, ”இனி படம் நடிப்பதை நீ நிறுத்திக்கொள்” என கடவுள் ஏதும் சொல்லவில்லையா? சரி அது போகட்டும். ஏதோ மக்களுக்கு நல்லது செய்வாதாக கூறியுள்ள ரஜினி, இது வரையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்ன செய்தார் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இதுவரையில் அப்படி எந்தவொரு ஆணியையும் அவர் பிடுங்கவில்லை, இனியும் பிடுங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஒருவேளை தன்னுடைய இரு மகளுக்காக நல்லது செய்திருக்கலாமே ஒழிய, மக்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்பது தான் நிதர்சனம்.

”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது” யென்று சொன்ன ரஜினியை, அந்த ஆண்டவன் எப்படி காப்பாத்துவார்? ஏனென்றால் அவர் இப்படி ஆண்டவனை அடிக்கடி சொல்லும் போதெல்லாம் அது தோல்வியில் தானே முடிந்திருக்கிறது என்று அந்த ஆண்டவனுக்கு தெரியாதா? தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாதுன்னு ரஜினி சொன்ன பிறகும் ஜெயலலிதா இரு முறை முதலமைச்சர் ஆனார் என்பதும், அதே ஜெயலலிதா சமீபத்தில் ஆட்சியிலிருக்கும் போது கைதாகி ஜாமீனில் வந்த போது, இதே ரஜினி வாழ்த்துகள் சொல்லி கடிதம் எழுதிய போதும், அந்த கடவுளுக்கே ரஜினியின் கோமாளித்தனங்கள் கோபத்தை ஏற்படுத்திருக்காதா?

அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு என்பது ஒரு மனிதனின் வாழ்வியல் படிநிலை. அப்படி பார்த்தால், சராசரி மனிதனின் கடைநிலை என்பதுஆன்மீகமே. அந்த கடைநிலையில் இருக்கும் ரஜினி, ஆண்டுக்கொரு முறை இமயமலை பக்கம் போனால் மட்டும் இறைவனாகவா ஆகிவிட போகிறார்? எந்த இறை அவதாரம், தன் படம் வரும் போதெல்லாம் புகழ் போதைக்காக அரசியலுக்கு வருவேனென ஊரை ஏமாற்றி இருக்கிறது? ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் தான் நிற்க்கும் ஒரு எம்.எல்.ஏ தொகுதியை வெற்றி பெறுவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிருக்கும் என்பது தான் எதார்த்தம்.

தன்னுடைய படங்கள் வரும்போதெல்லாம் தன் ரசிகர்களை உசுப்பேற்றி கேவலமானதொரு அரசியலை அரங்கேற்றும் இந்த ரஜினிக்கு, திரையில் நடிக்க வருகிறதோ இல்லையோ நிச்சயமாக திரைக்கு வெளியே நன்றாகவே நடிக்க வருகின்றது. அரசியலுக்கும் இந்த நடிப்பு தான் தேவையென்பதால் கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏனென்றால் தமிழர்கள் ஏமாற காத்து கொண்டிருக்கின்றார்கள். எது எப்படியோ, எம்பெருமான் திருமுருகா! இந்த லிங்கா படம் ப்ளாப் ஆக வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்