15 ஜூலை 2016

சாதியம் தாண்டி, சாதித்த காமராஜர்!

கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட காமராஜர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல இந்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் இங்கே இல்லாமலே போயிருந்திருக்கும். மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை, 27000 பள்ளிகளாக தன் ஆட்சிக்காலத்தில் மேம்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதன்முதலாக உருவாக்கிய உத்தமர் காமராஜர்.

மேலும், ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டதை ரத்து செய்த சமதர்மவாதி அவர். இந்திய அரசியலில் கிங்மேக்கராக விளங்கிய காமராஜர் காலத்தில் தான் என்.ஐ.டி. போன்ற தேசிய அளவிலான கல்வி நிலையங்களும் தமிழகத்தில் கால் பதித்தன. இது தவிர அவரால் தான் தமிழகத்தின் நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டது. காவிரி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, மேட்டூர் போன்ற பல நீர்பாசன திட்டங்களும் காமராஜர் காலத்தில் தான் உருவாகப்பட்டது.

01. பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

02. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

03. மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

04. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

05. நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

06. கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

07. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

வெறும் வாய்ச்சொல் வீரராக மேடையில் மட்டும் பேசி கைத்தட்டி வாங்கிக்கொள்ள விரும்பாத கர்மவீரர் காமராஜர் என்ற பச்சைத்தமிழனால் தமிழ்நாட்டிற்கு இவையெல்லாம் அற்பணிக்கப்பட்டவை என்பதை நினைக்கையிலேயே தமிழனாக பெருமையாக இருக்கிறது. படிக்காத மேதை காமராஜர் அவதரித்த நாளான ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவோம்!

காமராஜரை அகமுடையார்கள் ஏன் போற்ற வேண்டும்? என்று கேள்வி கேட்பதை விட, காமராஜரை ஏன் அகமுடையார்கள் புறக்கணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது. ஏனெனில்,காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான், தென் தமிழகத்தில் அகமுடையாருக்கு அதிக அளவில் தேர்தலில் நிற்க தொகுதிகள் வழங்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் உள்ள அகமுடையார் உள்பட அனைவருமே காமராஜரின் பக்கமே நின்றார்கள். அந்த காலந்தொட்டே, அகமுடையார்களுக்கும் காமராஜருக்கும் ஒருவித இணக்கமான நிலையே இருந்து வந்திருக்கிறது. அதுபோலவே நாடார்களுக்கும் அகமுடையார்களுக்கும் எந்த நேரத்திலும் தனிப்பட்ட பகை வந்தது இல்லை. அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் அகமுடையார் சமூகத்திற்கு யாரும் எதிரியில்லை என்பதை உணர்வோம். சிலர் சாதிக்காக காமராஜரை எதிர்க்கலாம். நாம் சாதித்த காமராஜரை ஆதரிப்போம்.

தன் காலத்தில் அரசியல் செய்தவர்களெல்லாம் மைக் பிடித்து பல மணி நேரம் பேசி மக்களின் கைத்தட்டலை மட்டுமே வாங்கிய நேரத்தில், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை பேசாமல் செயல்படுத்தி காட்டியவர் கிங்மேக்கர் காமராஜர்.இத்தனை வருடங்கள் கழித்த பின்னாலும் கர்மவீரர் காமராஜரை அவரது சாதியினர் அல்லாத மாற்று சாதியினரும் வருடாவருடம் போற்றுக்கின்றனர் என்பதே அவருக்கான அங்கீகாரம். இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும், தமிழக தேர்தல் பரப்புரையில் "மீண்டுமொரு காமராஜர் ஆட்சியை நாங்கள் தருவோம்!" என்று முழுக்கமிடாத கட்சிகளே இருக்க போவதில்லை.

சாதி அடையாளம் கடந்து சாதித்த பெருந்தலைவரின் பிறந்தாள் ஜூலை 15!
பெருந்தமிழருக்கு சக தமிழனாக புகழ் வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக