28 பிப்ரவரி 2016

குரூப் தேர்வுகள் எழுதுவதை விட கொத்தனராகி விடலாம்!


நான் டிப்ளமோ படித்த அதே வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2004க்கு பிறகு தேர்வு எழுத இன்று சென்றிருந்தேன். வழக்கம்போல மீண்டுமொரு டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்ப பைக்கை எடுத்தேன். பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் லிப்ட் கேட்ட இன்னொருவரையும் ஏற்றி கொண்டு பயணிக்கும் போது, சில நிமிடங்கள் பேசி வந்தேன்.

'எக்ஸாம் எப்படி இருந்துச்சுண்ணே? ஈசியா?'ன்னு கேட்டாப்ள. நான் பதிலுக்கு, 'படிச்சிட்டு எழுதுற பழக்கமில்ல; ஃபார்மாலிட்டிக்கு ஏ பி சி டி யில் ஏதோ ஒன்ன டிக் பண்ணிட்டு வந்திருக்கேன்!'ன்னு சொன்னேன். கலகலப்பாக பேசிக்கொண்டே, 'என்ன பண்றீங்க?'ன்னு கேட்டேன். 'பி.எட் முடிச்சிட்டு கொத்தனார் வேலைக்கு போறேன்!'ன்னு சொன்னாப்ள. 'அப்படியா?' என ஆச்சர்யத்தோடு கேட்கையிலேயே, 'இப்போ கரஸ்ல எம்.எஸ்.சி படிச்சிக்கிட்டு இருக்கேன்ணே'ன்னு சொன்னாப்ள. 'ஏன் பி.எட் படிச்சிட்டு கொத்தனாரா இருக்கணும்? கவர்மெண்ட் ஜாப் கிடைக்கிற வரைக்கும் பிரைவேட் ஸ்கூல்ல வேலை பார்க்கலாமே?'ன்னு கேட்டேன். 'இல்லைண்ணே, அங்க 2000, 3000 ரூபாய்தான் சம்பளம் தராங்க; நான் இப்போ ஒரு நாளைக்கு 650 ரூபாய் சம்பாரிக்கிறேன். நாலு நாளு வேலைக்கு போனாலே அங்க வாங்குற சம்பளத்தை சம்பாரிச்சிடுவேன்!'னு சொன்னாப்ள.

'என்ன ஊரு?'ன்னு கேட்டேன். 'தாமரைப்புலம்!'என சொன்னாப்ள. அதுபோக, அவரின் பக்கத்து ஊரான புஷ்வனம் நண்பர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சென்ற முறை செலக்ட் ஆனாராம். 'நம்மள போலயே குத்து மதிப்பாக டிக் அடிச்சு படிக்காமலே லக்குல பாஸ் ஆகி, கவர்மெண்ட் போஸ்டிங்கே வாங்கிடாரு!'ன்னு சொன்னாப்ள. 'அப்படியா! கேட்கவே ஆச்சர்யமாத்தான் இருக்கு; உங்களுக்கும் அதே லக் கிடைச்சு கண்டிப்பா போஸ்டிங் வாங்கவீங்க; வாழ்த்துகள்!'ன்னு சொல்லி கைகொடுத்து நாகை பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன், முருகா!ன்னு...

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக