22 செப்டம்பர் 2021

வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா?


        ன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! இத்தனை பேர்களின் வாழ்த்து என்ன செய்து விட போகிறது? ஒரு பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா? என என்னிடம் யாராவது கேட்டால், இல்லையென்றோ ஆமாமென்றோ சொல்லத் தெரியவில்லை.


        ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வரவின் பின்னால் பிறந்தநாள் உள்ளிட்ட எந்தவொரு நாட்களையும், சம்பந்தப்பட்ட நபரே மறந்தாலும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அந்த நாளிலுள்ள சிறப்பை சுட்டிக்காட்ட அது தயங்குவதில்லை. அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாளோ, திருமணநாளோ, நல்லதோ, கெட்டதோ எம்மாதிரியாக இருந்தாலும் கடந்த ஆண்டின் மெமரிஸ் வழியாக கூட அனைவருக்கும் காட்டிக்கொடுத்து விடுகிறது. இப்படியான ஒன்றின் மூலமாக பலரிடமிருந்து பெறப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று பலர் நினைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பெருமை ஏதுமில்லை தான். ஆனால் அதை தாண்டிய ஒரு பலம் அதிலுள்ளது. ”நமக்கென யாருமில்லையோ!” என்ற மிகப்பெரும் தனிமையை அது ஆழ்மனதில் இருந்து நீக்கும் பேரொளியாக இருக்கிறது.


        எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே, என்னுடைய பிறந்தநாளை பெரிதும் கொண்டாடும் எண்ணவோட்டத்தில் நான் இருந்ததில்லை. இந்த நாளும் மற்றைய நாள் போன்றது தான் என்ற மனநிலையில் தான் இருந்திருக்கிறேன். ஆனாலும், அன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தால், வேதாரண்யம் அருகிலுள்ள கடிநெல்வயலில் உள்ள குலதெய்வ கோவிலான (வேம்புடையார் என்கிற) வேம்படி ஐயனாரை தரிசிக்க செல்வேன். வேலை நாட்களெனில், அந்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதுண்டு. இல்லையெனில், அன்றைய நாளின் காலையிலோ, மாலையிலோ அருகிலிருக்கும் சிவாலயத்திற்கோ, முருகன் கோவிலுக்கோ செல்வதுண்டு. அதிகபட்சம் ஓர் அர்ச்சனையோடு அன்றைய நாள் கடந்து விடும். ஆனால், நமக்கு மட்டுமே தெரிந்த நாளானது, இந்த சமூக ஊடகங்களின் தயவால் ஊரறிய தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்த ஓசையினால், நானும் ஏதோ ஆடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட்டமோ, பெருமிதமோ வேறொன்றுமில்லை.
 
        இன்னும் சொல்வதென்றால். நான் பிறந்தது ஆங்கில நாட்காட்டி படி, செப்டம்பர் 21. அப்படியானால் தமிழ் மாதம் புரட்டாசி ஐந்தாம் நாள். அதிலும் நட்சத்திரப்படி புரட்டாசி கேட்டை அன்று என் பிறந்தநாள் இதுவென கணக்கிலெடுத்திருக்கிறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமையை கணக்கில் எடுத்திருக்கிறேன்; புரட்டாசி ஐந்தாம் தேதியை கணக்கிலெடுத்திருக்கிறேன்; புரட்டாசி வளர்பிறை ஷஷ்டி திதியை கணக்கில் எடுத்திருக்கிறேன். இப்படியாக என் பிறந்தநாளை பலவாறு கணக்கில் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதை பற்றி ஆய்வுகளையெல்லாம் கடந்து அமைதியாக கடந்திருக்கிறேன்.


        ஆர்குட், கூகிள் பஸ் காலத்திலிருந்தே இதே ஊடகத்தில் நிறைய கசப்பான நிகழ்வுகளும், பலரின் வசவுகளையும், கேலி கிண்டல், மிரட்டல்கள் என பலதரப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து வந்திருக்கின்றேன். ஆர்குட் முழுவதும் மூடப்பட்ட பின்னால், 2009ம் ஆண்டு முதல் இந்த ஃபேஸ்புக்கின் வாயிலாக இயங்கி வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தவர்களை கணக்கிலெடுத்தால், விலகியவர்களின் பட்டியலே ஆயிர கணக்கில் இருக்கும். ஆனாலும், ஆர்குட் காலத்திலிருந்து இன்று வரை நட்பிலிருக்கும் உறவுகளும் இன்னும் உண்டு.

 
        இந்த சமூக ஊடகங்களின் உதவியால், என்னை உடன்பிறந்தானாக பார்க்கும் அன்பிற்கினிய அண்ணன்களும், தம்பிகளும், பாசமிகு பங்காளிகளும் இங்கே கிடைத்திருக்கின்றனர் என நினைக்கையில் வேறென்ன சொத்துபத்து நமக்கு வேண்டும் என, மன உளைச்சலுக்கு ஆளான நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொண்டதும் உண்டு. எவ்வித கைமாறும் செய்யாமல், ஊரெங்கும் இத்தனை பேர் எனக்கென அன்பொழுக பாசத்தோடு அரவணைக்க தோள் கொடுக்க இருக்கின்றனர் என நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
        என் வாழ்வில் எனக்கு நேர்ந்த எல்லாவிதமான சுக துக்கங்களில் உள்ள மனக்குமுறல்களை என் நெருங்கிய உறவினர்களோடு, என் குடும்பத்தினரோடு பகிர்ந்ததை விட, இங்குள்ள இணைய உறவுகளோடு அலைபேசியின் வாயிலாக நான் பகிர்ந்து கொண்ட செய்திகளே அதிகம். இப்படியானதொரு பிணைப்பை, நெருக்கத்தை ஆர்குட், ஃபேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களே சாத்தியப்படுத்திருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கும் இப்படியானதொரு வாய்ப்பை அனுபவிக்கும் நாம் அனைவருமே இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவர்களே.

        ஏதோ பழைய நோட்டு தாள்களில் கிறுக்கி கொண்டிருந்தவனை, நல்லா எழுதுறீங்கற. எழுதுங்க, தொடர்ச்சியா எழுதுங்க, உங்களுக்கு நல்லா எழுத வருது... என நம்பிக்கையூட்டி எனக்கென ஓர் அடையாளத்தை என் எழுத்துகளின் மூலமாகவே எனக்கு கொடுத்ததும் இதே சமூக ஊடகங்களில் இயங்கிய உறவுகள் தான். பூகோள ரீதியாக அவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் மாவட்டமாக, நகரமாக, ஊராக பிரிந்து இருந்தாலும், என் மீது இத்தனை நெருக்கமும், பாசமும், அன்பும், உரிமையும் வைத்திருக்கின்ற இத்தனை பெரிய உறவு கூட்டத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேரருளுக்கு இந்நாளிலும் என் நன்றி!

- இரா.ச. இமலாதித்தன்


02 ஜூலை 2021

தமிழர்களின் தொல்பொருளாய்வு மீதான வன்மம்!



        "தொல்பொருளாய்வு என்ற வெட்டிவேலை" என்ற தலைப்பில் துக்ளக் இதழ் ஓர் அபத்தமான கட்டுரையை வெளியிட்டு, மீண்டெழும் தமிழ் பண்பாட்டு புதையற்குவியல்களின் மீது தனது வன்மத்தை கக்கிருக்கிறது. தங்களது கற்பனை புராணங்களுக்கு வலு சேர்ப்பதற்காக, இல்லாத சரஸ்வதி நதியை தேட பல்லாயிரம் கோடிகளை வாரி இரைத்து செலவு செய்வதை தட்டிக்கேட்க வக்கில்லாத துக்ளக் இதழ், தமிழர்களின் உண்மை வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய ஆய்வுகள் மேற்கொண்டால், அதை திட்டமிட்டே இழிவு படுத்துகிறது.


        கீழடி மட்டுமல்ல எங்கள் தாய்மடி. அது, புதுக்கோட்டை அருகிலுள்ள பொன்பனை கோட்டை, தூத்துக்குடி அருகிலுள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர் என தமிழர்களின் ஆதி எச்சங்கள் ஆயிரம் இங்குண்டு. காளையார்கோவில் அருகேயுள்ள இலந்தக்கரை போன்ற தமிழர்களின் பண்பாட்டை இழந்தக் கரைகள் இந்த தேசம் முழுவதும் எக்கசக்கமாய் உண்டு. ஆனால், அதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் ஆளில்லை.


        இந்த மண்ணையெல்லாம் நோண்டினால் மண் பானைகளும், எலும்புக்கூடுகளுமே கிடைக்கின்றன என இழிவாக பேசும் வாய்களுக்கு, சொந்த மொழி ஏதுமுண்டா? தாய்மொழி, தாய் மண் என்ற ஏதாவது உண்டா? வாயை மட்டுமே நம்பி பசுங்கன்றையும், குதிரையும் நெருப்பிலிட்டு வேள்வி மூலம் வயிறு வளர்த்த கூட்டங்களை, எதிர் கேள்வி எழுப்பும் கூட்டத்தின் பண்பாட்டு மீட்சியை பார்த்து அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. என்ன செய்வது? தமிழர்களின் பல்லாயிரமாண்டு பண்பாட்டு நீட்சியை, முன்பு போல எந்த நூலும் இனி கட்டிப்போட முடியாது.

            நாகரீகமற்று நாடோடிகளாய் திரிந்து நாடு பிடித்த கூட்டத்திற்கு நிரந்தர சுடுகாடுகளோ, இடுகாடுகளோ இருப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் தான், ஆதிச்சநல்லூரில் நோண்டியதை நினைத்து அவர்களுக்கு பெரும்பதற்றம் வருகிறது போல. காலங்காலமாக ஒரே இடத்தில் பூர்வகுடிகளாக வாழ்ந்த மக்களுக்கு தானே நிரந்தரமான இடுகாடு கூட இருந்திருக்க முடியும். தமிழர்களது நாகரிகமும், பண்பாடும், தொன்மையும், துக்ளக் போன்ற துக்கடா ஆட்கள் சொல்வது போல, வெறும் மண்பானைகளுக்குள் முடங்கி விடவில்லை. மண் பானையின் கீறல் தானே, எங்கள் இலக்கியத்தரவுகளின் மற்றுமொரு அசைக்க முடியா சான்றாகவும் இருக்கிறது. எழுத்தறிவே இல்லாத நாடோடி மேய்ச்சல் கூட்டம் செவி வழியாக கடத்தி வந்த காலத்திலேயே, மண் பானை செய்யும் வேளாரின் கீறல்களை கூட புரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பது தானே இன்றைக்கும் மறுக்க முடியாத பேருண்மை.

            மண்ணை நோண்டுவதே தண்டச்செலவு என கூப்பாடு போடும் போலி தேச பக்தர்களுக்கு, அயோத்தியில் இராமர் கோவில் கட்ட அங்குள்ள மண்ணை நோண்டிய ஆதாரங்களைத்தானே நீதிமன்றங்களில் முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை மறந்து போய்விட்டதோ? அங்கே, புத்தனும், சிவனும் கிடைத்த இடத்தில் இராமனுக்கு கோவில் எழுப்பப்படுகிறது என்பது வேறு கதை.

            நாட்டு காளைகளை பீட்டாவோடு பின் நின்று கொல்ல துடித்ததை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. கோமாதா எங்கள் குலமாதா என ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, ஆண்டுதோறும் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் தேசப்பக்தர்களின் உண்மை முகத்தையும் அறியாமல் இல்லை. மாதந்தோறும் விழாக்களில் கோவிலுள் வலம் வந்த காளைகளை, வெறும் நந்தி சிலைகளாக்கி, பாலூற்றும் பிரதோச வழிபாடு நடத்தும் வரலாற்று திரிபுகளை உருவாக்கிய ஆன்மீக அயோக்கியத்தனத்தை அடையாளம் காணாமல் விட்டதன் விளைவைத்தான், இத்தனை நூற்றாண்டுகள் அனுபவித்து வருகின்றோம் என்பதை மறுப்பதற்கில்லை.

            தமிழ்நாட்டிலிருந்து சென்று கொரியாவையே ஆண்ட செம்பவளம் என்ற தமிழ் பேரரசியை கூட, வடக்கத்தியராக்கிய பெருமை, ஆரிய சித்தாந்த தொல்பொருள் ஆய்வாளர்களின் கைங்கர்யத்தை கண்கூடாகவே கண்டு வருகின்றோம். ஆய் குடியை அயோத்தியாக்கிய வரலாற்று திருடர்களின் ஆதிக்கமே இங்கே இன்னமும் கோலொச்சி நிற்கின்றன. அடுத்தவனின் வரலாற்றை திருடி தனதாக்கும் போக்கு இந்த நாடோடிகளுக்கு கை வந்த கலை என்பதற்கு , கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும், யோகாவும் கூட குறிப்பிடதக்க ஒரு சில சான்றுகளாகும். தமிழ் மருத்துவமான சித்தர் மருத்துவத்தை ஆயுர்வேதமாக்கியதும், முருகனை சுப்பிராமணியம் ஆக்கியதும், ஆசீவகத்தை அபகரித்ததும் என அடுக்கடுக்காக சொல்ல ஆயிரம் திருட்டுத்தனங்கள் இங்கே உண்டு.


            சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது தான் என்பதை மெய்ப்பிக்க தொடர்ச்சியாக சான்றுகள் கிடைத்து கொண்டிருப்பதும் அந்த மண்ணை நோண்டித்தான் என்பதை இங்கேயும் சுட்டிக்காட்ட வேண்டிருக்கிறது. சிந்து விட்ட இடமும், கீழடி தொட்ட இடமும் தமிழரின் தொன்மைகள் தான் என்பதை சான்றுகளின் அடிப்படையில் மறுப்பதற்கு யாருமில்லை என்பதே தமிழின் வளமை. எங்கள் வழிபாட்டை, எங்கள் கடவுளை, எங்கள் மொழியை, எங்கள் அறிவை திருடிக்கொண்டு, கடைசியாக எங்களையே முட்டாளாக்கிய காலம் இனி முடிவுக்கு வந்து விட்டது. இங்கே மண்ணை மட்டுமல்ல, எதை நோண்டினாலும் தமிழரின் பண்பாடும், பெருமையும், தொன்மையும், வரலாறும் மட்டுமே மிஞ்சி இருக்கும். இனியும் ஏமாற தமிழர்கள் தயாராக இல்லை. எத்தனை வசவுகள் எங்கள் மீது வந்தாலும் தமிழர் வரலாறு மீண்டெழும். இதை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.

            அகண்ட பாரதத்தை கட்டியமைப்போம் என சொல்லும் யாராகினும், காலம் முழுக்க பொய்ப்புராணங்களை மட்டுமே இங்கே முன்னிறுத்த முடியாது. அனைத்திற்கும் ஆதாரம் வேண்டுமெனில் மண்ணை நோண்டித்தான் நிரூபணம் செய்ய வேண்டும். அன்று போல், மூன்றடி மண் கேட்டு மாவலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியாக கொன்றான் வாமனன் என்ற பொய்க்கதை சொன்ன காலமெல்லாம் இங்கே மாறி போச்சு. எங்கள் முப்பாட்டன் மாவலியை போல, எம் மண்ணை இழக்க நாங்கள் யாரும் ஏமாளிகள் இல்லை.

            அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற ஆங்கிலேய அதிகாரி தான்,  இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை என்பதை ஆங்கிலேய விசுவாசிகளான துக்ளக் ஆதரவு ஆட்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி, நாடோடிகளாக பிழைக்க வந்த ஐரோப்பிய அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்த எங்கள் மண்ணை மீட்பதற்காக, எழுத்துப்பூர்வமாக முதற் போர்ப்பிரகடனத்தை அறிவித்து, இம்மண்ணுக்காக தங்களது உயிர் மட்டுமல்லாது, ஐநூறுக்கும் மேற்பட்ட தங்கள் குடிவழி உறவுகளையும், மக்களையும் இழந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாழ்ந்த மண் இது. அவர்களை போன்ற மக்கள் போராளிகளின் வழிவந்த எங்களின் மண்ணை நோண்டி எங்கள் வரலாற்றை மீட்டெடுக்க கூடாதென சொல்ல யாருக்கும் இங்கே அருகதை இல்லை.

            பழனி முருகனை நோண்டி வயிறு வளர்த்த கூட்டத்தை பெருந்தன்மையாக விட்டதன் விளைவு, எங்களையே ஏன் மண்ணை நோண்டுகிறாய் என கேட்க துணிச்சல் வந்திருக்கிறது. எங்கு நோண்டினாலும் உங்களுக்கென தனித்த எந்தவொரு பழமையான வரலாறும், சான்றும் கிடைக்க போவதில்லை என்ற வெறுப்பில் புலம்பி எந்த பலனும் இனி கிடைக்க போவதில்லை.

            மண் என்பதற்கான பொருள் வேள் என்பதாகும். மண்ணை நோண்டியவர்களே வேளாராகவும், வேளாளராகவும், வேளீராகவும் உருவெடுத்தார்கள் என்பதே யாராலும் மறுக்கவே முடியாத வரலாறு. அரசவுருவாக்கம் என்பதே மண்ணை நோண்டியதிலிருந்தே உலகெங்கும் உருவெடுத்தது. இன்னும் சொல்லப்போனால், மனித நாகரீகமும், நகர மயமாக்கலும் மண்ணை நோண்டியதால் தான் என்பது கடந்தகால வரலாற்று உண்மை. அந்த மண்ணை நோண்டுவதையே பெருங்குறையாக சொல்லி இழிவுபடுத்தும் கண்காணிகளை இழிபிறவிகளாகவே கருத வேண்டிருக்கிறது.

            பூர்வகுடி மக்களை ஏதிலிகளாக்கி, அவர்களது மண்ணை கைப்பற்றி, பெட்ரோல் டீசலுக்காகவும், தங்கம் வைரத்திற்காகவும், மீத்தேன், ஈத்தேனெ என கனிம வளத்திற்காகவும் அந்த பூர்வ குடிகளின் மண்ணை நோண்டும் வெட்டி வேலை செய்யும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பஜனை பாடும் கும்பல்கள், தொலைந்து போன தமிழரது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் எங்களை இழிவாக சித்தரிக்க வேண்டியதின் வன்மமும் அதன் பின்னணியும் எங்களுக்கு புரியாமல் இல்லை. காலம் உங்களை மீண்டும் வைக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் வைக்கும். அதுவரை எங்களை விமர்சித்து கொண்டே இருங்கள். விடியல் பிறப்பதை யாரால் நிறுத்த முடியாது. ஏனெனில், இனி எங்கள் காலம். உலக நாகரீகங்கள் அனைத்தும், மண்ணை நோண்டிய வெட்டி வேலையினால் தான் உருவாகி இருக்கின்றன. அப்படியான நாகரீகங்களின் மிகத்தொன்மையான தமிழர்களது நாகரீகமும் இம்மண்ணை நோண்டிய வெட்டி வேலை செய்ததால் தான் உருவானது. எனவே, தொல்பொருளாய்வு எனும் இந்த மண்ணை நோண்டும் வெட்டி வேலை இங்கே தொடர்வது காலத்தின் தேவை. அதுவே, உங்களைப்போன்ற கங்காணிகளிடமிருந்து மீள தமிழர்களுக்கான வெற்றி ஓலை!

- இரா.ச. இமலாதித்தன்

11 ஜூன் 2021

எதனடிப்படையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஊரடங்கு?



 அன்பிற்கினிய டெல்டா பகுதி வாழ் மக்களே!


தினசரி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டமே இல்லை. மயிலாடுதுறையையும் நாகப்பட்டினம் மாவட்ட கணக்கிலேயே இதுவரை காட்டி வருகின்றனர். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி இந்த இரு மாவட்டங்களையும் சேர்த்து பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை - 482 பேர். அப்படியெனில் சராசரியாக நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் 240 பேர் என ஒரு கணக்கிற்கு கொள்ளலாம். கொஞ்சம் ஏற்றமிறக்கம் இருந்தாலும், இவ்விரு மாவட்டங்களின் தினசரி பாதிப்பு 250 பேர் என வைத்து கொள்வோம். அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 272 பேர். அப்படியெனில் இந்த மூன்று மாவட்டங்களிலும் சராசரி பாதிப்பு 250 பேர் தான் வருகின்றது.
அப்படியே இதே கணக்கீடோடு சென்னையை எடுத்து கொண்டால் இன்றைய ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி, 1094 பேர் என அரசு கணக்கு காட்டிருக்கிறது. ஆயிரம் பேர்களுக்கு மேல் தினசரி பாதிப்புள்ளாகும் சென்னைக்கு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையோடு ஒப்பிடும் பொழுது நான்கில் ஒரு பங்கான தலா 250 பேர் தினசரி பாதிப்புக்குள்ளாகும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்க்கேள்வி கேட்க கூட ஆளில்லை என்பதால், அரசாங்கம் என்ன சொன்னாலும் தலையாட்டும் மந்தை புத்தி கொண்ட மக்கள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடச்சொன்ன மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டரசோ, இன்று சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இவையெல்லாம் என்ன மாதிரியான கணக்கீடுகளென்றே தெரியவில்லை. எல்லாம் ஆள்பவர்களுக்கே வெளிச்சம்!
- இரா.ச. இமலாதித்தன்

09 ஜூன் 2021

PhD பரிதாபங்கள்!


#ஒன்றிய_உயிரினங்கள் என ட்விட்டரில் இருநாட்களாக ட்ரெண்டிங்கான பல பதிவுகள் சுவாரசியமாக இருந்தன.
என் கடந்த கால பணியின் அனுபவங்களில் #முனைவர்_உயிரனங்கள் பலரை நெருங்கி கவனித்திருக்கிறேன். பழகிருக்கிறேன். அவர்களின் உண்மை முகத்தை கண்டிருக்கிறேன்.
கிணற்று தவளை,
கண்ணை மூடிய பூனை,
செம்மாறியாடு,
கூண்டுக்கிளி,
அட்டைப்பூச்சி,
எருமைமாடு
என பல PhDக்களில், போலிகளும், வெற்று பிம்பங்களுமே இருந்தன. 'தான்' என்ற பெருங்கூச்சல்கள் மட்டுமே அங்கே தென்பட்டன. வாட்சப் குரூப்பில் ஆங்கிலத்தில் எழுதுவதாக நினைத்து அடிப்படை வார்த்தைகளில் கூட ஆறேழு பிழைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். வேர்ட் ஃபைல்லோ, எக்‌ஸல் ஃபைலோ கூட ஒழுங்காக உருவாக்க தெரியாமல் முழி பிதுங்கியதை பார்த்திருக்கிறேன். அடிப்படை ஸ்போக்கன் இங்லீஷ் கூட தெரியாமல் தங்லீஷில் மேடையேறி ஒப்பேற்றியதை கவனித்திருக்கிறேன்.
கணினித்துறையில் பிஎச்.டி பெற்றவர்களுக்கு, அப்ளிகேசன் தொடர்பான சர்வர்களுக்கும், ஆப்ரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சர்வர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாததை பார்த்து வியப்படைந்திருக்கிறேன். நெட்வொர்க்கிங் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாதவர்கள், அதே கணினித்துறையில் பிஎச்.டி பெற்றிருந்ததை விட, அது தொடர்பாக மாணவர்களிடம் பாடமெடுப்பதற்காக Non Teaching ஊழியர்களிடம் பாடம் கேட்டு ஓடிக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன்.
இதுபோல சொல்ல ஆயிரம் நிகழ்வுகள் உண்டு. 'பல' வகைகளில் கெயிடை கரெக்ட் செய்து முனைவர் ஆனவர்களே அதிகம் இருப்பதையும் பல ஆதாரங்களின் அடிப்படையில் மெய்ப்பொருள் கண்டறிந்த பிறகே, கல்லூரிகளின் கல்வித்தரத்தை எடைபோட முடிந்தது. விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. நான் பேசுவது பெரும்பான்மைகளை பற்றி.
எனவே, பிஎச்.டி முடித்த முனைவர்கள் அனைவருமே அதிமேதாவிகளோ, அதிபுத்திசாலிகளோ அல்ல. அவர்களுக்கு எல்லாவித துறைசார் அறிவும் இருப்பதில்லை என்ற எதார்த்தத்தையும் ஒத்துக்கொள்ள பழகுங்கள். ஏனெனில் அவரவர் துறையிலேயே பதில் சொல்ல முடியாத விசயங்கள் ஆயிரமுண்டு. மீண்டும் சொல்கிறேன், இங்கே விதிவிலக்குகளை பேசவே இல்லை. ஆனால், கூத்தாடும் குறைகுடங்களையே சுட்டிக்காட்டிருக்கிறேன்.
- இரா.ச. இமலாதித்தன்

02 ஜூன் 2021

என் பார்வையில் இளையராஜா!



சிறு நகரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளின் தனிச்சிறப்பே இளையராஜா பாடல்கள் தான். இன்றைக்கும் பட்டி தொட்டியெங்கும் பிரைவேட் டவுன் பஸ்களின் மவுசுக்கு இதுவே முதற்காரணம்.
பனிக்கால ஜன்னலோர இருக்கை, மாலை நேர ரயில் பயணம், மழைச்சாரல், சூடான காபி, தன்னந்தனியாய் நெடுந்தூர பயணம், என எந்த மாதிரியான சூழலையும் இளையராஜா பாடல்களே பலரது மனதையும் குதூகலமாக்குக்கின்றன.
2k கிட்ஸ், 90s கிட்ஸ், 80s கிட்ஸ்(?) என யாராக இருந்தாலும், இளையராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களது வீட்டு காதணி விழா, திருமணங்கள் உள்பட எந்த சடங்குகளும் முழுமை அடைவதே இல்லை.
கோவில் திருவிழாக்காலங்களிலும், பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜையென ஆண்டுதோறும் நடக்கின்ற எல்லா கொண்டாட்டங்களிலும் இன்றைய சந்தோஷ் நாராயணன் காலத்திலும் அன்றைய இளையராஜா பாடல்களை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் முடிவடைவதில்லை.
காதல் தோல்வி, ஏமாற்றம், விரக்தி, துரோகம், பொருளாதார நெருக்கடியென பல விதங்களில் தனித்து விடப்பட்டவர்களின் மனங்களிலுள்ள காயா ரணங்களுக்கான ஒரே மருந்து இளையராஜா பாடல்களே. மதுவும், புகையும் உடலுக்கு கேடெனும் பொழுதும் அந்த இரண்டோடும் கூடி கொஞ்சி குலாவும் வேளையிலும் செவிகளில் பாயும் இளையராஜாவின் இசைகளே ஒரு சாராருக்கு சொர்க்க போதையாக இன்றளவும் இருக்கிறது.
இதுபோல சுட்டிக்காட்ட எத்தனையோ செய்திகள் இளையராஜாவின் இசையில் ஆயிரம் உண்டு. ஒரு பானை சோற்றுக்கு எத்தனை சோற்றை பதம் பார்ப்பது? எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பெரு மகிழ்ச்சியோ, கடுங்கோபமோ, மீளாத்துயரமோ, இப்படியான எல்லாவித உணர்வுகளுக்கும் தீனி போடும் ஒரே மருந்து இளையராஜாவின் இசை தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எளிதாக சொல்ல வேண்டுமெனில், இன்றைய அசுர வளர்ச்சியடைந்த சமூக ஊடகங்களில் இளையராஜா பாடல்களை பகிராத பதிவர்களே இல்லையென சொல்லலாம். வாட்சப் ஸ்டேடஸ், பேஸ்புக் ஸ்டோரி, டிவிட்டர், இன்ஸ்டாகிராமென இளையராஜா தான் பலரின் ஒரே ஆபத்துதவி கண்டன்ட். விமர்சனம் செய்தாவது அவரை நினைப்படுத்திக் கொண்டே இருக்கும் நபர்களும் இங்குண்டு. அவர்கள் பத்தில் ஓரிரண்டு ஆட்களாக இருப்பார்கள்.
இளையராஜாவை வானளாவ உயர்த்துவதால் எம்.எஸ்.விசுவநாதனும், டி.கே.இராமமூர்த்தியும், கே.வி. மகாதேவனும், ஏ.ஆர்.ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும், ஜி.வி.பிரகாஷ்ராஜூம் எங்கேயும் குறைந்தவர்களாக்கப் படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். டி.ராஜேந்தரும், சங்கர் போஸூம், கங்கை அமரனும் கூட இளையராஜாவின் இசைக்கு நிகரான பல சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கின்றனர். அவர்களது பாடல்களையும் இளையராஜவின் கணக்கில் எழுதி, ரசித்து வருவோரின் எண்ணிக்கை இங்கே ஏராளம். இன்றைய நாட்களில் இசை ரசிகர்களால் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படும் ஹாரீஸ் ஜெயராஜின் எத்தனையோ பாடல்களுக்கு பல லட்சம் பேர் வெறியர்களாக இருப்பது தான் இந்த இசையின் வெற்றி.
புனிதமென்றோ, இழுக்கென்றோ இசையில் எதுவுமில்லை. காப்புரிமைக்காக தன் பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் நடந்து கொண்ட விதமும், தற்புகழ்ச்சியும், கோபமும் என இளையராஜா மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஏற்கிறேன். ஆனாலும், அவரவர் செவியும், மனமும், அறிவும் முடிவு செய்யும் வரையறைகளுக்கு இளையராஜா போன்ற சமகால இறைத்தூதர்களை புறந்தள்ளுவது அறமாகாது. ஏ.ஆர்.ரஹ்மானை போலவே இளையராஜாவின் இசையையும் ரசிக்கும் பாமரனனாக எனக்குண்டான திருப்தியில் இப்பதிவை எழுதிருக்கின்றேன். அவர், இவரென இசையில் யாரும் பெரிதில்லை. இசையே பெரிது தான். உங்களுக்குள் உள்ள இறைவனை, விலகி நின்று அருகில் தரிசிக்கும் மாயவித்தை இசைக்குள் உள்ளது. எனவே அதை அனுபவியுங்கள். இசையோடு வாழுங்கள்; உங்களோடு இளையராஜாவும் வாழ்வார்!
- இரா.ச. இமலாதித்தன்

பின்னிணைப்பு:

OTD Facebook Memories!
தனிமையில் இரவோடு தவித்த பொழுதுகள் எல்லாமே, உன் இசையாலே சுகமாய் கழிந்தது. ஆன்மீக ஞானம் உள்ளவனாலேயே மிகப்பெரும் இசை கலைஞனாக உருவெடுக்க முடியுமென்பதை உலகிற்கு நிரூபித்து, கடுந்தவம் செய்த ஞானி பெறும் வரம் அவரை மட்டுமே சாரும்போது, உன் தவத்தால் நீ பெற்ற வரம் உன்னைவிட எங்களையல்லவா சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உன் தவம்.
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2012

*

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2015

*

இரவு நேர ரயில் பயணங்களிலும், நெடுந்தூர பேருந்து ஜன்னலோர இருக்கையிலும், ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை பைக் பயணத்திலும், உறக்கம் தொலைத்த எல்லா இரவுகளிலும், இதுபோல பல நேரங்களில் இசையே என்னோடு நட்பின் துணையாய், தாயின் ஆறுதலாய் இருந்திருக்கிறது.
என்னை ஆட்கொண்ட பெரும்பாலான இசையின் காரணகர்த்தாவாக விளங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். ஆன்மீகப்பற்றுள்ள எங்கள் இசையாண்டவன், இன்னும் பல ஆண்டுகள் அந்த இறையருளால் நீடுழி வாழட்டும்!
'ஏழை பேச்சு அம்பலம் ஏறாது' என்ற கருத்தியலை உடைத்தெறிந்து, இசையுலகில் புது ராஜாங்கம் அமைத்து, அதை அவாளுக்கும் பறைசாற்றிய இசையரசனின் கடைகோடி பாமர ரசிகர்களில் ஒருவனாக என் வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2016

01 ஜூன் 2021

சுப்பிரமணிய சுவாமியும், பழனிவேல் ராஜனும்!



நாயக்கர் ஆட்சியின் முதல் மன்னனான விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலமான 1529–1563 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் அரியநாத முதலி. இவரது வழித்தோன்றலே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

நாயக்கர் ஆட்சியின் குறிப்பிடத்தக்க மன்னரான திருமலை நாயக்கர் ஆட்சிக்காலமான 1623–1659 ஆண்டுகளில் தளவாயாக இருந்தவர் ராமப்ப ஐயர். இவரது வழித்தோன்றலே சுப்பிரமணிய சுவாமி.

பெரும்பான்மை தமிழர்களின் வீழ்ச்சி இக்காலக்கட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.




படம் 1: குடியரசு இதழில் பெரியார் ஈ.வெ.ராவின் இரங்கல் தலையங்கம்.





படம் 2: சுப்பிரமணிய சுவாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது ஒப்புதல் வாக்கு மூலம்.

- இரா.ச. இமலாதித்தன்

29 மே 2021

இயக்குனர் வீணை எஸ்.பாலச்சந்தரின் முன்னோடி சிந்தனை!

வெற்றிக்கரமான இயக்குனர்களாக அடையாளப்படும் ஷங்கர், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித் என பலரும் கதை திருட்டு விவகாரங்களில் சிக்கியவர்களே. பிரகாஷ்ராஜ், பிரிதிவிராஜ், கோபிகா நடிப்பில் உருவான 'வெள்ளித்திரை' திரைப்படத்தில் இம்மாதிரியான கலைத்திருட்டை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தையே இயக்குனர் விஜி உருவாக்கிருப்பார்.
ஆனால், 1964ல் வெளிவந்த 'பொம்மை' என்ற திரைப்படமானது வேறொரு பார்வையை நமக்கு தருகிறது. வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கி, இசையமைத்து நடித்த 'பொம்மை' திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளை கீழே இணைத்திருக்கிறேன். பார்த்தால் என்ன சொல்ல வருகின்றேனென உங்களுக்கு எளிதாக புரியும்.
கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பிலிம் நியூஸ் ஆனந்தன் என அந்த 'பொம்மை' திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள், துணை இயக்குனர்கள், கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், தயாரிப்பு நிர்வாகத்தில் உள்ளோர், வாகன ஓட்டிகள் என அனைவரையும் இயக்குனரான 'பத்ம பூசன்' வீணை. எஸ். பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பண்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
'World Movies Museum' குரூப்பில் இந்த காட்சியை அறிமுகப்படுத்தி பதிவு செய்த Muniyasamy Ramakrishnan அவர்களுக்கு நன்றி! இந்த வீடியோவை யூ ட்யூப் வாயிலாக பார்க்க: https://www.youtube.com/watch?v=LL_EEkZJw50
- இரா.ச. இமலாதித்தன்