29 ஜூன் 2017

சான்டோ சின்னப்பா தேவர் எனும் தன்னம்பிக்கை சகாப்தம்!













'தேவர் மகன்' போல எத்தனை திரைப்படங்கள் வருடத்திற்கு வந்தாலும், என்றைக்குமே திரைத்துறையின் ஒரே "தேவர்", அகமுடையார் குலத்தோன்றல் சான்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் மட்டுமே! ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருக்கும் போது, மிகப்பெரிய நீதித்துறை பதவியிலிருருந்த யாரோ ஒரு தயிர்சாத பிரியர் கேள்வி கேட்டிருந்தார், "காளைகளுக்கு பதிலாக காட்டிலுள்ள சிங்கத்தை அடக்க முடியுமா?" என்று. அப்போதைய நேரத்தில் சாண்டோ சின்னப்பா தேவர் சிங்கத்தின் மீது கை வைத்து தடவி கொடுக்கின்ற படமும், எங்கள் வேதாரண்யம் பி.வி.தேவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் படமும் தான் அதிகளவில் சமூக தளங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டிருந்தது என்பதும் இங்கே நினைவு கூற வேண்டிருக்கிறது.


தீவிர முருக பக்தர்
பாமர ரசிகர்
ஆகச்சிறந்த உழைப்பாளி
கட்டழகான மாவீரர்
மிகச்சிறந்த மனிதர்
மாபெரும் தயாரிப்பாளர்

இப்படியான பல அடையாளங்களும், பெருமைகளும் அவருக்கு இருந்தாலும், "மருதமலை மாமணியே முருகையா... தேவரின் குலம் காக்கும் வேலையா..." என்ற பாடலில் கூறப்படும் வரிகளுக்கு சொந்தக்காரரான தேவரின் குலம் சார்ந்த எம்மை காக்கும் எம்பெருமான் திருமுருகனின் தீவிர பக்தரான திரைத்துறையின் ஒரே அடையாளச்சொல்லான எங்கள் தேவருக்கு 102வது புகழ் வணக்கம்!

(28 ஜூன் 1915 – 08 செப்டம்பர்1978)

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Thevar

28 ஜூன் 2017

இமலாதித்தவியல்



"எதற்கெடுத்தாலும் எல்லா இடங்களிலும் தன்னை மிகைப்படுத்தி கொள்கின்ற அனைத்துமே, தன்னை விரைவாகவே அழித்து கொள்ளும்; தன்னிருப்பை, தன்னுழைப்பை வெளிக்காட்டுவதற்காக மட்டுமென சொல்லிக்கொண்டாலும், தற்புகழ்ச்சிக்காக செய்யப்படுகின்ற புகழ் என்ற போதைக்கு, நிச்சயம் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் வல்லமை உண்டு. தனக்கான தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பினால், தன் அடையாளத்தை எல்லா இடங்களிலும் நிறுவிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் 'நான், நாங்கள், என்னுடைய, எனது, எமது, எங்கள், எங்களுடைய' என்ற எண்ணங்களே எதிர்மறை கருத்தியலை தனக்குத்தானே உருவாக்கி தன்னையே வீழ்த்தும். செயலை தொடர்ந்து, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் அநேகரோடும் இணைந்து வேடிக்கை போல, தன்னையும், தன் செயல்களையும் பார்த்து கடந்து செல்ல பழகிக்கொள்வதே, நிலைத்த வெற்றிக்கான ஒரே வழி."

- இமலாதித்தவியல்

24 ஜூன் 2017

கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவன்!





"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

"பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!"

இப்படியாக ஐயாயிரத்துகும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் மூலம், தமிழால் தமிழர்கள் மத்தியில் இன்று வரைக்கும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிநாட்டு முத்தையாவான கவியரசர் கண்ணதாசனின் இடத்தை நிரப்ப இன்னும் ஒரு கவிஞர் இதுவரை இங்கில்லை.

தான் அனுபவித்த வாழ்க்கையையே ஆய்வு செய்து எழுத்துகளாக்கி, எட்டாவது வரை படித்திருந்தாலும், யாரும் எட்டாத உயரத்தை அடைந்த கவியரசர் கண்ணதாசன் என்ற கவிதை பொக்கிஷம் அவதரித்த 90ம் அகவை நாள் இன்று!

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

21 ஜூன் 2017

சூப்பர் ஸ்டார் விஜய்!






ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வையில் மெர்சல் என்பது விஜய் போல தெரியும். ஆக்கம்: பிரகாஷ் காளீஸ்வரன்)


எங்கள் நாகப்பட்டினத்தில் முதன்முறையாக மாபெரும் அரசியல் அடையாள மாநாடு போட்டு, 'எங்கள் தமிழ் மீனவனை சிங்களவன் தாக்கினால், இங்குள்ள தமிழர்களெல்லாம் ஒன்றிணைந்து இலங்கையையே உலக வரைபடத்திலிருந்து நீக்குவோம்' என உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் சிங்கள இனவாத அரசால் அவரது படம் திரையிடப்படாமல் முடக்கப்பட்டும் கூட, தன் படத்திற்கு தமிழர்களின் அடையாளமான 'புலி' என பெயர் வைக்கும் போதும், 'அகதியான மக்களுக்கு தனி நாடு வேண்டும்' என 'வில்லு' பட காலத்திலேயே பாடல் வரிகளில் தன் விருப்பத்தை சேர்க்கும் போதும், சமீபத்தில் BehindWoods கொடுத்த 'People's most favorite and most popular actor' என்ற விருதை பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பற்றி பேசாமல் விவசாயிகளுக்காக, 'வல்லரசு ஆவதை பிறகு பார்க்கலாம்; விவசாயிகளுக்கான நல்லரசாக இருங்கள்' என அரசாளும் அரசாங்கங்களை எதிர்த்து உணர்வோடு குரல் கொடுக்கும் போதும் தமிழனாக விஜய் பலரது மனங்களுக்கு நெருக்கமாகி விடுவதை எந்தவொரு ஹேட்டர்ஸாலும் தடுத்துவிட முடியாது.

எங்கள் சகோதரர் இயக்குனர் அட்லியின் மெர்சல் திரைப்படம், மெர்சலான வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள்! வருங்காலத்தில் நிச்சயமொரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க போகும், எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு 43ம் அகவை நல் வாழ்த்துகள்!

  ரசிகனாக,
- இரா.ச. இமலாதித்தன்

#IamWaiting 4 #Mersal

18 ஜூன் 2017

தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!




ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன்.

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, தாய் பாசம், குடும்ப பொறுப்பு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், நாட்குறிப்பு போலவே கணக்கு வழக்குகளை கையாளும் உத்தி, எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், இடர்பாடான சுப/துக்க நிகழ்வுகளை கூட நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் வல்லமை, பாகுபாடில்லாத பழகும் முறை, நினைவாற்றலுடனான செயல்பாடு, இப்படி எத்தனையோ விசயங்களை இன்னுமும் என் வாழ்நாளில் என் தந்தை திரு. இரா.சம்பந்த தேவரிடமிருந்தே கற்று கொண்டிருக்கிறேன். நான்கு முழ வெள்ளை வேட்டி, முழங்கை வரை மடித்த முழு வெள்ளை சட்டையென்ற தனித்துவ ஆடை அடையாளத்தை அவரது பதின்ம வயதிலிருந்து இப்போது வரை மாற்றியதே இல்லை. அவரது மகன் என்ற பெருமையான ஒற்றை அடையாளத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி!

மேலே சொல்லிருக்கின்ற எந்தவொரு விசயத்தையும் இப்போது வரையிலும் என் அப்பாவிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை. கூச்சமா? கால இடைவெளியா? பக்குவமின்மையா? இப்படி எது காரணமென தெரியவில்லை. அதனாலேயே வருடாவருடம் இங்கேயே சொல்லி விட்டு, இந்நாளை கடந்து விடுகிறேன். அது பக்தி; பாசம்; பயம்; தலைமுறை இடைவெளி. இப்படி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும், விலகியே ரசிக்கிறேன் என் அப்பாவை.

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

17 ஜூன் 2017

எங்களிலிருந்து ஒரு இசை நாயகன் உதயமாகிறான்!




இசைஞானி இளையராஜா என்ற பெயர் போல, 'போத்திராஜா' என்ற பெயரும் இனி இசைத்துறையில் நீங்காதவொரு இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. தெற்கத்தி மண்ணின் மணம் சார்ந்த மக்களிசையை பாடலாக்கிருக்கும் முதற்முயற்சியே முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது. தானே எழுதி, தானே இசையமைத்து, தானே பாடி, சகோ.போத்திராஜா உருவாக்கி இருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல் அனைவரையும் நிச்சயமாக கவரும். இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இதுவரையிலும் தாய்மாமன் வாரான்டி பாடலை எத்தனை முறை கேட்டேனென தெரியவில்லை; கணக்கு வழக்கில்லாமல் கேட்டு கொண்டிருக்கிறேன். தாய் மாமனின் உரிமையையும், சீர் பற்றியும், மொய் பற்றியும் பெருமைகளை பாடும் இப்பாடல் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

ஏறி இறங்கி கொண்டிருக்கும் பொருளாதார சூழலிலும், தன் உழைப்பில் சம்பாரித்த பணத்தையே முதலீடாக போட்டு, தன் திறமையால் மட்டுமே சிங்கிள் பாடலை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சினிமாத்துறையில் பிரபலமான தனுஷ், சிம்பு போன்றவர்கள் பலரின் உதவியோடு எழுதி பாடினாலேயே ஆஹா ஓஹோவென மெய் சிலிர்க்கும் அதே வேளையில், பிரபலங்களின் எவ்வித பின்புலமுமின்றி இசைத்துறையில் காலடி பதிக்கும் எளியவரான போத்திராஜா போன்ற திறமைசாலிகளையும் பாராட்டுவோம்.

மதுரை மண்ணின் மைந்தனான போத்திராஜாவின் எழுத்து - இசை - குரலாக உருவாகியிருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல், 18.06.2017 ஞாயிறன்று மதுரை செக்கனூரணியிலுள்ள ஜெயஸ்ரீ மகாலில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படுகிறது. போத்திராஜாவின் தந்தையான தெய்வத்திரு கே.ஆர்.பாண்டி சேர்வையின் ஆசியோடு, எங்கள் 'பெரிய மருது' போத்திராஜாவின் இந்த இசைப்பயணம் இனிவரும் நாட்களிலெல்லாம் சிறப்பாக அமைந்து, இசையுலகில் மிகப்பெரிய உச்சத்தை தொட அன்பு சகோதரனாக எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

(இனி பலருடைய செல்போனின் ரிங்டோனாக மாறப்போகும் 'தாய்மாமன் வாரானடி' பாடல் தேவைப்படுவோர், என்னுடைய வாட்சப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.)

16 ஜூன் 2017

யார் அகமுடையார் என தீர்மானிப்பது யார்?



ஊருக்கொரு சங்கம் வைத்திருக்கும் மேன்மை பொருந்திய அகமுடையார் பெரியோர்களுக்கு, தன் இனக்குழுவிற்கான பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவே அறவே இல்லாமல் இருக்கிறது. தேவர் என்பதோ, சேர்வை என்பதோ, பிள்ளை என்பதோ சாதி அல்ல. அவையெல்லாம் வெறும் பட்டம் மட்டுமே. இவற்றுள், தேவர் என்ற பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு; அதுபோல, சேர்வை என்ற பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு; இந்த வரிசையில் பிள்ளை என்ற பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. ஒரே மாதிரியான பட்டங்களை மட்டும் வைத்து, ஒரு இனக்குழுவை ஒன்றாக்கி விட முடியாது.

ஒரு காலத்தில், சேர்வை பட்டம் உள்ளவர்களே அகமுடையார் என தென்னக உறவுகளில் சிலர் நினைத்து கொண்டிருந்தனர்; அதே காலத்தில் டெல்டா உறவுகளில் சிலரோ, தேவர் என்ற பட்டமுள்ளவர்களே அகமுடையார் என நினைத்திருந்தனர். கொங்கு பகுதிகளிலும், அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே என்பதால், கொங்கு - தெற்கு - டெல்டா என ஒரே இனக்குழு என்ற உண்மையை உணரத்தொடங்கினர். காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதற்கிணங்க டெல்டா - தெற்கு என பிரிவினையில்லாமல் பட்டங்களை கடந்து, இன்று அனைவரும் அகமுடையாராக ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

அதுபோன்றதொரு சூழல் தற்போதும், அகமுடையார்களுக்குள் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. வட மாவட்டங்களிலுள்ள அகமுடையார்களுக்கு முதலியார் - உடையார் - பிள்ளை பட்டங்களே பெரும்பான்மையாக உள்ளது. முதலியார் என்பதால் செங்குந்தர் என்பதாகவும், உடையார் என்பதால் பார்கவகுலம் என்பதாகவும், பிள்ளை என்பதால் வெள்ளாளர் என்பதாகவும் சிலர் குழப்பமடைகின்றனர். இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், தேவர் பட்டம் உள்ளதால் அகமுடையாரும் - கள்ளரும் ஒன்றென சொல்ல முடியாது; சேர்வை பட்டம் இருப்பதால் வலையரும் - அகமுடையாரும் ஒன்றென சொல்ல முடியாது; பிள்ளை பட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம், அது பலதரப்பட்டவர்களுக்கும் அந்த பட்டம் உண்டு. அதுபோலவே முதலியார் பட்டமும், உடையார் பட்டமும், பிள்ளை பட்டமும் அகமுடையாருக்கு உண்டு என்பதையும், அந்த பட்டத்தை மட்டுமே காரணம் சொல்லி, மற்ற இனக்குழுக்களோடு வடக்கத்திய அகமுடையாரை பிரித்து விட முடியாது என்ற உண்மை நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தென்னகத்தில் 'சேர்வார் / சேர்வை' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், டெல்டாவில் 'தேவர்' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், வடக்கத்திய பகுதிகளில் 'முதலியார் /உடையார்' என்றால் அது அகமுடையாரையே குறிக்கும் என்ற எதார்த்தத்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான உண்மை கள நிலவரங்களை பற்றி தெரியாததாலும், சாதி பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவில்லாததாலும், அகமுடையார் சங்கத்தின் தலைமை பொறுப்பிலுள்ளவர்களே, பட்டங்களால் அகமுடையாரை பிரிக்க முயல்கின்றனர். தகவல் தொடர்பு ஊடகங்கள் சூழ்ந்த இக்காலத்திலும் கூட, பொறுப்பில் உள்ளவர்கள் அகமுடையார் இனக்குழு பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பது வேதனையான விசயம்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட 'அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்' ஆண்டு தோறும் அதிக மதிப்பெண் பெற்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 10 / +2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கான அடிப்படை தகுதியாக 'முக்குலதோர் - அகமுடையார் மட்டும்' என்ற அளவீடும் வைத்திருக்கின்றனர். இந்த லாஜிக்கே புரியவில்லை. போலியான அரசியல் கூட்டமைப்பான 'முக்குலம்' என்ற இல்லாத ஒன்றை அகமுடையாருக்கான அளவீடாக வைப்பது எவ்வகையில் நியாயம்?

திருவண்ணாமலை பகுதியிலுள்ள அகமுடையார் இனக்குழு சேர்ந்த சகோதரி இந்தாண்டு +2ல் 1136 மதிப்பெண் பெற்றிருக்கிறார். பொருளாதார சூழ்நிலையால் மேற்படிப்புக்காக சிரமப்படுவதால், அங்குள்ள உறவினரின் ஒத்துழைப்போடு சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு, கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். சங்கத்தை சேர்ந்தவர்களோ, வடக்கிலுள்ள அகமுடையார்கள் வேறு; முக்குலத்தோர் அகமுடையார் வேறு என்று, அரிய கண்டுபிடிப்பாக புது(?) வரலாறை சொல்லி விண்ணப்பத்தை மறுத்திருக்கின்றனர். இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கண்டு, சிரிப்பதா? கோபப்படுவதா?

ஒரு பக்கம், முக்குலத்தோர் என பேசும் மறவர் தலைமையிலான அமைப்புகளும், கள்ளர் தலைமையிலான அமைப்புகளும் கூட திருண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில், முதலியார் - உடையார் பட்டம் கொண்ட அகமுடையார்களை ஒன்று திரட்டி மாநாடு கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், தென்னகத்தை சேர்ந்த அகமுடையார் அமைப்புகளும், வடக்கிலுள்ள அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வலுவான கட்டமைப்பை உருவாக்கி அகமுடையார் இனக்குழுவின் ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் வேளையில், அறியாமையில் இருக்கும் அகமுடையாரின பெரியோர்களின் இதுபோன்ற செயல்கள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

தன் இனக்குழு பற்றிய வரலாற்று உண்மைகள், தெரிந்தால் பேசலாம்; தெரியவில்லை என்றால் அமைதி காக்கலாம். அரைகுறையாக தெரிந்து கொண்டு குழப்பும் (சங்கம் / அமைப்பு / இயக்கம்) பதவியிலுள்ள பெரியோர்கள், கொஞ்சம் தன் இனக்குழு சார்ந்த வரலாற்றை கொஞ்சம் அறிந்து கொள்ள முற்படுங்கள். அதன் பிறகு, தலைவராகவும் - செயலாளராகவும் - பொறுப்பாளராகவும் - அமைப்பாளராகவும் பதவியை அலங்கரியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#அகமுடையார் #தேவர் #சேர்வை #முதலியார் #உடையார் #பிள்ளை #Agamudayar