09 ஆகஸ்ட் 2017

ஆளப்போறான் தமிழன்!



"ஆளப்போறான் தமிழன்"
எழுத்தில் பிழை இருக்கலாம்; கருத்தில் பிழையே இல்லை! இனி இம்மண்ணை தமிழன் ஆள்வான்.
சீமானுக்கு நன்றி.

06 ஆகஸ்ட் 2017

சினேகனுக்கு வாழ்த்துகள்!


கட்டிப்பிடி வைத்தியம், டைனமிக் திருமணம் இந்த இரண்டிலுமே சினேகன் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்குண்டு. குறிப்பாக, மணப்பெண்ணை கண்டவனும் மணமகனுக்கு நேராகவே மேடையேறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நிகழ்வான டைனமிக் திருமண விசயத்தில் எரிச்சல் தான் அதிகம்; அதை தலைமை தாங்கி நடத்திய சினேகன் மீது வெறுப்பும் கோபமும் தான் மேலோங்கி இருந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் சினேகன் மட்டுமே எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலையிலும் கனகச்சிதமாய் அனுசரணையோடும் விவேகத்துடனும் செயல்படுகிறார் என்பதால் ஒருவகையில் ஆதரிக்கவும் வேண்டிருக்கிறது. இதன் நீட்சியாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்ற சினேகனிடமிருந்தும் ஒன்றை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அது என்னவெனில், ஒரு விசயத்தை அணுகும் விதம், அதை மற்றவர்களோடு கலந்தாலோசிக்கும் தன்மை, சம்பந்தபட்டவர்களிடம் அவர்களது பிரச்சனைகளை விவரிக்கும் பேச்சுநடை என இவ்விசயத்தில் ஒட்டுமொத்த கலவையான செயல்பாடுகள் என்னை ஏதோவொரு விதத்தில் கவர்ந்திருக்கிறதாக உணர்கிறேன். ஒருவேளை, சினேகனுக்கு பிக்பாஸூல் பட்டம் கிடைத்து வெற்றிப்பெற்றால் ஓவியா ரசிகனாக வாழ்த்துகள்!


கொசுறுகள்:

தைப்புரட்சியால் 'மீசைய முறுக்கு' ஆதிக்கும், 'பிக்பாஸ்' ஜூலிக்கும், புகழ் வெளிச்சம் வெள்ளித்திரையில் அதிகமாக படர விடப்பட்டிருக்கிறது.


'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன், 'மருத்துவ முத்த நிபுணர்' ஆரவ் என்ற இருவரிடமும் இனி சிக்கி தவிக்க போகிறார் ரைஸா.


ரைஸா பிக்பாஸ் வீட்டில் இவ்வாரத்திற்கான தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை கூட ஏற்க முடியாமல், ஏதேதோ புதுப்புது கதை சொல்லி கோபப்படும் காயத்ரி மாதிரியான சைக்கோக்கள் சூழ்ந்த உலகம் இது.


பாடப்புத்தகத்திலெல்லாம் 'மனோன்மணியம்' சுந்தரம் பிள்ளை என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த விசயத்தில் கூட ஜூலியை காப்பியடித்து, அரிய உண்மையை உலகிற்கு சொன்ன கட்டிப்பிடி கவிஞர் சினேகனை நினைத்து பெருமை கொள்கிறோம்.


ஓட்டே போடாம காயத்ரியை வெளியேற்ற ஊரு உலகமே நினைக்கும் போது, இப்படி மயிரு மாதிரி ஒரு டாஸ்கை கொடுத்து உங்க எச்சை புத்தியை காட்டி, அந்த ஹேரை காப்பாத்தி இருக்கீங்களே ஏன் பாஸூ (Vijay Television) இந்த மானங்கெட்ட பொழப்பு?

- இரா.ச. இமலாதித்தன்

05 ஆகஸ்ட் 2017

நினைவுகளை மீட்டெடுக்கும் நட்பு பாலம்!






இது வடுகச்சேரிக்கும் இருக்கைக்கும் இடையிலான எல்லையிலிருக்கும் குதிரைசேவகனாற்று பாலம். நாகை மாவட்டத்திற்குட்பட்ட இரு சட்டமன்றத்தொகுதிகளின் எல்லை இது. ஒன்று கீழ்வேளூர், மற்றொன்று நாகப்பட்டினம். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் மனம் விட்டு பேசக்கூடிய நண்பர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அந்த சிறு பட்டியலில் விஜயபாபுவும் ஒருவர். எங்களின் பள்ளிக்காலமான ஆறு முதல் பனிரெண்டு வரையும் மேலும் கல்லூரிக்காலங்களிலும் மாலை முதல் இரவு வரை இங்கேயே அமர்ந்திருந்து படத்துறங்கி பல கதைகள் பேசிருக்கிறோம். அரசியல் - சினிமா - விளையாட்டு - ஊர்க்கதை என பலவற்றை அலசிருக்கிறோம். மதிய நேரங்களிலெல்லாம் இப்போது வறண்டு கிடக்கும் இந்த ஆற்றில் அன்று துள்ளியோடும் நீரில் குளித்து கும்மாலமடித்திருக்கிறோம். நீச்சல் தெரிந்திருந்தும், ஒருமுறை ஆற்றுச்சுழலில் சிக்கி உயிர் பிழைத்திருக்கும் அச்சம்பவம் இன்னும் என் மனதினுள் உண்டு. எதிரிலேயே சுடுகாடு; கூடவே நம்மைப்போலவே கார்பன் டை ஆக்சடை அதிகம் வெளியேற்றும் ஆற்றோர தூங்குமூஞ்சி மரம் என சூழ்ந்திருக்கும் திறந்தவெளி விவாதமேடை இது.

பெரும்பாலான விடுமுறை நாட்களில் கிரிக்கெட்டும், சில சமயம் வாலிபாலும் விளையாடி விட்டு, எங்களின் இளைப்பாறும் இடம் இது. வேப்பங்குச்சியோடு, ஆற்றங்கரையோரம் காலைக்கடன் முடித்து விட்டு விடிகாலையிலும் சில நிமிடங்கள் அமர்ந்து போகுமிடம் இது. அதிகாலை நாளிதழ்களில் டீக்கடை பேப்பரென பெயர்பெற்ற தினத்தந்தி இருக்கை சுல்தானியா டீ கடைக்கு வரும் நேரம் மதியம் பனிரெண்டை தாண்டும். அப்போதும் கூட, ஒரு பக்கம் கூட விடாமல் பாரா பாராவாக புரட்டி எடுப்போம். கூடவே எதிரே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வரும் தீக்கதிரையும் படித்து தீர்ப்போம். அங்கேயே சைக்கிள் கடை வைத்திருந்த போஸூன் தயவால் தேநீரும் படிப்பின் துணைக்கு வரும். மற்ற நேரமெல்லாம் பொழுது போகும் வரை, அரவணைத்த இந்த சேவகானாற்று பாலமும், தூங்கு மூஞ்சி மரமும் தான், எங்களைப்போன்ற பலருக்கும், எங்களை விட மூத்தோருக்கும் அன்றைய பிக்பாஸ் வீடு!

இன்று மதியம் ஆளில்லா அந்த இடத்தில் சில நிமிடங்கள் தனியே அமர்ந்துவிட்டு நினைவுக்கு சில படங்களையும் பிடித்து வந்தேன். ஆயிரம் இருந்தாலும் பள்ளி வாழ்க்கையின் போது கிடைத்த ஓய்வு நேரத்திற்கு இணையான ஓய்வு நாட்கள் இனி எப்போதும் கிடைக்க போவதில்லை. எப்போதுமே இருக்கும் போது, அதை சரிவர அனுபவிக்க தெரியறது இல்லை என்பதும் நம்மில் பலருக்கும் உள்ள குறைபாடு. ப்ச்...

- இரா.ச. இமலாதித்தன்

#Autograph #OldMemories

ஓவியா செய்த இரண்டே தவறுகள்!




01. பொம்பள ஆரவ்வான காயத்ரியை நம்பியது; காயத்ரியிடன் வாக்கு கொடுத்ததால், தன் இயல்பான அடிப்படை குணங்களில் ஒன்றான வெளிப்படையான கருத்தை சொல்லாமல் தன்னுள்ளேயே மறைத்து கொண்டது. அது ஓவியாவின் குணாதிசயம் இல்லை என்பதால் தான், ஓவியாற்குள் ஏற்பட்ட முதற்குழப்பம்.

02. ஆம்பள காயத்ரியான ஆரவ் மீது அளவுக்கதிகமான அன்பை வைத்தது; அன்புக்கு ஏங்கிய ஓர் அபலையின் ஆன்ம ஈடேற்றம் போல, மருத்தவரிடமும், பிக்பாஸுடமும், கமலுக்கு முன்பாகவும், வெளியேறிய மேடையான பொதுவெளியிலும் ஆரவ்வை காதலிக்கிறேனென வெளிப்படையாக சொன்னது. இதுதான் இரண்டாவதும் இறுதியானதுமான ஓவியாவிற்குள் ஏற்பட்ட குழப்பம்.


இந்த இரண்டிலும் தான், ஓவியா எனும் மனதிற்கு நெருக்கமானதொரு பெண்ணை உணர முடிந்தது. தனிப்பட்ட வாழ்வில் இதுவரை ஆட்டோகிராஃப் சேரன் போல ஒன்றுக்கும் மேற்பட்ட 'ஐ லவ் யூ!'க்களை நேரடியாக எனக்கு பிடித்த பெண்களிடம் உணர்வுப்பூர்வமாக சொல்லிருக்கிறேன்; கடைசியில் எல்லாமே ஆட்டோகிராப் க்ளைமேக்ஸ் போல தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. இம்முறை எவ்வித வெட்கமும் சலனமுமின்றி உணர்வுப்பூர்வமாக நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து ஓவியாவுக்காக பொதுவெளியில் சொல்லத்தோன்றியது.

ஐ லவ் யூ ஓவியா!

ஆரவ்வோ அல்லது அவரை விட மிகச்சிறந்த வேறு யாரோ ஓவியாவுக்கு பிடித்த மாதிரியான ஒருவர் வாழ்க்கைத்துணையாக வர இறைவனை பிராத்திக்கிறேன். இனிவரும் நாட்களெல்லாம் வாழ்வில் வெற்றியாக அமையவாழ்த்துகள் ஓவியா!

- இரா.ச. இமலாதித்தன்

#BiggBoss #Oviya #OviyaArmy

செம்பியன் மாதேவியார்!



பெரும்பாலான கோவில்கள் இன்றைக்கும் எஞ்சி நிற்கும் விதமாக கற்றளிகளாக மாற்ற காரணமாக இருந்த (அடியேனின் நட்சத்திரமான) கேட்டை நட்சத்திரத்தில் உதித்த, கோட்டை கட்டி வாழ்ந்த எங்கள் பெரும்பிராட்டி செம்பியன்மாதேவி கட்டியெழுப்பிய கோவிலில் இன்றைய மாலைப்பொழுது கடந்து கொண்டிருக்கிறது.

உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழத்தேவரை வளர்த்தெடுத்து அரியணையேற்றிய அவரது பாட்டியின் பெயரான செம்பியன்மாதேவியின் பெயரிலேயே இவ்வூரும் மீளுருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இவ்வூருக்கான கூடுதல் சிறப்பு. மேலும் இந்த ஊருக்கு சுற்று வட்டாரத்தில் தான் எங்கள் உறவினர்களின் ஊர்களும், அடியேன் படித்து வளர்ந்து ஊர்களும் இருக்கிறதென்பது பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறேன். ஆண்டுதோறும், செம்பியன்மாதேவி அவதரித்த மார்கழி மாத கேட்டை திருநாளில் பெண் வீட்டார் சீதனம் எடுத்து கொண்டாடப்படும் விழா காலம்காலமாக இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.


- இரா.ச. இமலாதித்தன்

#கேட்டை #ராஜராஜசோழன் #செம்பியன்மாதேவி

03 ஆகஸ்ட் 2017

ஆன்மீகமெனும் நவீன வணிகம்!



இந்த மனதை வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பது போல, கவனிக்கையில் ஒன்று மட்டும் புரிகிறது; நமக்கு பிடிக்காத சின்னச்சின்ன விசயங்கள் ஏதாவதொன்று நடந்தாலும் அதை நோக்கியே ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பி, இந்த மனது எண்ணங்களை குவிக்கிறது. மாறாக, எவ்வளவு பெரிய மகிழ்வான விசயங்கள் நடந்திருந்தாலும் அதை வெகு சுலபமாக இந்த மனது மறக்கடிக்க முயல்கிறது; அதோடு அடுத்தடுத்து எதையாவது செய்ய வைக்க முனைகிறது; அந்த செய்கைகளின் நீட்சியாக ஏதாவதொரு எதிர்வினை கிடைப்பதும் கூட, சின்னஞ்சிறிய வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான குழப்பத்தையெல்லாம் தொடர்ச்சியாக இந்த மனது எளிதாகவும் - விரைவாகவும் செய்து விடுகிறது. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே மனதினுள் எழும் (ஆணவம் - பொறாமை - மாயை என்ற இம்மூன்று மலங்களிலிருந்தும்) பல குழப்பங்களிலிருந்து உடனடியாக வெளிவந்து விடலாம். இம்மாதிரியான சம்பந்தமேயில்லாத வருத்தத்திலிருந்து வெளிவருவதோடு மட்டுமில்லாமல், அதை நிரந்தரமாக மாற்றவும் எளிய வழிகள் உள்ளன.

01. குறிப்பிட்ட இடைவெளியில் அடையக்கூடிய இலக்கு என்ற ஒன்றை நிர்ணயித்து கொண்டு, அவ்விலக்கு பற்றி சிந்தனையோடே அனைத்தையும் வெகுவிரைவாக கடந்து கொண்டே இருங்கள்.

02. இன்றைய நிலை மகிழ்ச்சியோ / சோகமோ எப்படியானதாக இருந்தாலும், நாளை இது நம்மோடு இல்லாமல் கூட போகலாம் என உணர்ந்து, எண்ணங்களுக்கு எவ்வித வலுவும் சேர்க்காமல் இந்த நிமிடத்தை இயல்பாக அனுபவியுங்கள்.

03. ஒருவேளை எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இந்த பொழுது கடந்து கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சி என்ற வரையறைக்குள் வைத்தே அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

04. தன் குரலையும், தன் உருவத்தையும், தன் எழுத்துக்களையும், செல்பேசி - கண்ணாடி - பேனா உதவியோடு மீளுருவாக்கம் செய்து கவனித்து பாருங்கள்.

05. தன்னை உறவு - நட்பு - இறை என யாரோடும் தொடர்பு படுத்தாமல், நான் யாரென யோசித்து பார்த்து விட்டு வெறுமனே அனைத்தையும் கேள்வியேதும் கேட்காமல் கவனிக்க தொடங்குங்கள்.

இந்த மனதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். பல பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக வெளிவரலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

(Courtesy: பரமஹம்ச இமலாதித்தனந்தாவின் 'ஆன்மீகமெனும் நவீன வணிகம்' எனும் நூலிலிருந்து, பக்.21-22)

01 ஆகஸ்ட் 2017

அவசர காலங்களில் ஹிந்தியா தாக்குபிடிக்குமா?








சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்) சாலையில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்க ஹிந்திய விமானப்படை அனுமதி தந்துள்ளதை எப்படி பார்க்க வேண்டும்?

- என்ற இந்த கேள்விக்குள் ஆயிரம் பதில்கள் அடங்கிருக்கின்றன.

இவர்கள் சொல்லும் அந்த அவசரக்காலம் என்பது எது?


ஒருவேளை போர்ச்சுழல் மிகுந்த காலத்தை தான், அவசரக்காலமென சொல்கிறார்களா?

வடக்கு வாழ தெற்கு தேயத்தான் வேண்டுமா?

ஒட்டுமொத்த ஹிந்திய நாட்டின் குப்பைத்தொட்டியாக தென்னகம் திகழ்வது போதாதா?

போர்க்காலங்களில் மனித அரண்களாக்கி பலிகடாவாக எம்மை பயன்படுத்த திட்டம் தானே இது?

அவசரக்காலம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தானா?

ஹிந்தியா முழுமைக்கும் இதுபோன்ற அவசரக்காலங்கள் வரவே வராதா?

மற்ற மாநிலங்களிலெல்லாம் இதுபோன்ற நெடுஞ்சாலைகளை விமானப்படை குத்தகைக்கு எடுத்திருக்கிறதா?

இப்படியாக எத்தனையோ கேள்விகளை கேட்கலாம். சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பதில் வரவே வராது; ஆனால் வெகுஎளிதாக ஆன்ட்டி ஹிந்தியன், தேசத்துரோகி, நக்சலைட், மாவோயிஸ்ட், தீவிரவாதி என்ற பட்டங்கள் மட்டும் சட்டென வந்து விடும். இங்கே கவனிக்கவேண்டிய விசயம் என்னவெனில், இஸ்ரோ முதற்கொண்டு அணு உலை வரைக்குமான எல்லாவற்றையும் தென்னகம் தான் தன்னகத்தே கொண்டிருக்கிறது; வாழ்வோ சாவோ எல்லாவற்றிலும் பரிசோதனை முயற்சிக்கு பயன்பட்டுக்கொண்டிருப்பது தமிழர்களும், தமிழ் மண்ணும் தான். இனி, சீனா - அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் இலங்கை போன்ற நாலாந்திர நாடுகளின் உதவியோடு தமிழ்க்கடலோரம் போர் முற்றுகையிட்டால் ஒட்டுமொத்த ஹிந்தியமும் வீழ்ந்து போகும். ஆனால் அதற்கு முன்னரே தமிழினம் சின்னாபின்னமாகும். இதன் அறிகுறியாகவே தமிழ்ச்சாலையான கிழக்கு கடற்கரையோர சாலையை விமானப்படை மறைமுகமாக கையகப்படுத்திருக்கிறது.

ஹிந்தியத்தின் லட்சணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இரண்டுமே கூகிள் மேப் தான்; ஒன்று கூகிள்.கோ.யூகே, இரண்டாவது கூகிள்.கோ.இன்; முதல் படத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றிய கூகிள் மேப்பின் படி, ஹிந்திய வரைபடத்தில் காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பூகோள ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக உள்ள ஹிந்திய கூகிள் மேப்பின் படி, ஒருங்கிணைந்த ஹிந்தியாவிற்குள் காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் பூகோள ரீதியாக உள்ளிருக்கிறது. குறைந்தபட்சம் உலகளாவிய இந்த கூகிள் மேப்பிலாவது, ஒற்றை தேச அடையாளமான வரைபட எல்லையை வரையறுத்து, அதை டிஜிட்டலில் கூட காப்பாற்ற முடியாத வக்கற்றர்கள் தான் அவசர காலங்களில் இம்மண்ணை காப்பாற்ற போகிறார்களா?

- இரா.ச. இமலாதித்தன்

#Google #GoogleMaps #Hindia #China #Pakistan #Map #hindustan