16 பிப்ரவரி 2015

வருங்கால முதல்வர் வளர்மதி!

ஜெயலலிதாவை விட 46,233 வாக்குகள் அதிகம் பெற்று, ஜெயலலிதாவை விட 55,027க்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருவரங்கத்தில் வெற்றி பெற்றுள்ள வளர்மதிக்கு வாழ்த்துகள்! வரபோகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 1000/-ரூபாய்க்கு குறையாமல் கொடுத்தால் தான் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி நிச்சயம் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. ஒரு கழுதையை வேட்பாளாராக்கினாலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் ராஜதந்திரம் பணத்திற்கு உண்டு என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.

2011 சட்டசபைத் தேர்தல்:

ஜெயலலிதா (அ.இ.அ.தி.மு.க) 1,05,328 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 63,840 வாக்குகள்
வித்தியாசம் 41,488 வாக்குகள்

2015 இடைத் தேர்தல் :

வளர்மதி (அ.இ.அ.தி.மு.க) 1,51,561 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 55,046 வாக்குகள்
வித்தியாசம் 96,515 வாக்குகள்

வருங்கால முதல்வர் வளர்மதிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!!!

10 பிப்ரவரி 2015

துடைப்பத்திற்கு வாழ்த்துகள்!

பாரத தலைநகரத்தின் தலையெழுத்து போர் வாளில்லாமல் கெஜ்ரிவால் என்ற தனிமனிதனால் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதிகார பலம், ஆளும் பலம், ஆட்பலம், முக்கியமாக வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டுரிமையை விலை பேசும் தந்திரம் போன்ற அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளையெல்லாம் தூள்தூளாக்கிய சாமானிய மக்களின் வெற்றியாகவே இதை பார்க்கின்றேன். இந்நாட்டிற்கான நல்லதொரு மாற்றம் ஏற்பட இது மீண்டுமொரு தொடக்கமாக இருக்கட்டும். வாழ்த்துகள்!

07 பிப்ரவரி 2015

தமிழர் முன்னணி!?

பா.ஜ.கவுக்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத இந்து முன்னணியோ, தி.மு.க.விற்கு எப்படி அரசியலில் பங்கெடுக்காத திராவிட கழகமோ, அதுபோல நாம் தமிழர் கட்சியின் தோழமை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணியை சீமான் இன்று தொடங்கி வைக்கிறார். நாம் தமிழர் கட்சியானது அரசியல் தளத்தில் தொடர்ந்து செயல்படும். வீரத்தமிழர் முன்னணியானது இனிவரும் காலங்களில் அரசியல் சார்பற்ற அமைப்பாக செயல்படும். அதுக்குள்ள பலபேரு பலவிதமா புரளியை கிளப்பி விடுறாய்ங்க. ஒருத்தரை பிடிக்கவில்லை என்பது வேறு. அதற்காக வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்புவது சரியா? ஒரு விசயத்தை பற்றி ஆழமாக தெரியாவிட்டால் ஏன் அவசரகுடுக்கை போல முந்திக்கொண்டு தவறான தகவலை பரப்ப வேண்டும்? பொய்யான பரபரப்பால் சில லைக்குகள் அதிகம் கிடைக்குமே தவிர, மற்றபடி ஒன்றும் நடந்து விடாது.

06 பிப்ரவரி 2015

பார்வார்ட் ப்ளாகிற்கு பின்னால் தேவர் சாதி அமைப்புகள்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரால் தமிழகத்தில் உச்சம் தொட்ட அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியை இன்றைக்கு யார் யாரோ வளர்த்தெடுக்க, கைப்பற்ற நினைக்கிறார்கள். நல்ல விசயம். ஆனால், ”பசும்பொன் தேவரின் பேரன்” என்ற அடையாளத்தோடு அரசியலில் கால் பதித்த திரு.வெள்ளைச்சாமித்தேவரோ, அவருக்கு பின்னால் அரசியலில் நுழைந்த அவரது அண்ணன் திரு.ஜோதி முத்துராமலிங்கத்தேவரோ, ஏன் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணையாமல் தனியாக, ’பசும்பொன் தேசிய கழகம்’ என்ற அமைப்பில் இருக்க காரணம் என்ன? தேவரின் பேரன் என சொல்லும் இவர்களையே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைய தடுப்பது யார்? எது இவர்களுக்கு இடையூறாக இருக்கின்றது? தேவரை வைத்து தெருவுக்கு தெரு கட்சி - அமைப்பு - பாசறை - கழகம் - இயக்கம் என அரசியல் செய்யும் யாருக்கும் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பமில்லையா?

அஜித் பற்றி தம்பி ஒருவரோடு சாட்ல...

நிகழ்வு:01

தம்பி: வணக்கம் அண்ணே

நான்: வணக்கம், எப்படி இருக்கீங்க?

தம்பி: நல்லாருக்கேன்’ண்ணே. நீங்க?

நான்: நானும் நல்லாருக்கேன். அப்பறம் என்ன விசேசம்?

தம்பி: ஒரு டவுட்டுண்ணே

நான்: என்ன டவுட்டு?

தம்பி: அஜீத் நம்மாளுண்ணே. தேவரா இருந்துகிட்டே நீங்க ஏன்ண்ணே அஜீத்தை எதிர்க்குறீங்க?

நான்: நான் ஒன்னும் எதிர்க்கலையே...

தம்பி: என்னை அறிந்தால் படத்துல கூட பாருங்க தலயோட பேரு சத்யதேவ்’ண்ணே. போன, வீரம் படத்துல அஜீத் கடையில சாமி போட்டோ பக்கதுல தேவர் போட்டோ இருக்கும்ண்ணே. கமல் மாதிரி அஜீத்தும் நம்ம சாதி தான்ண்ணே.

நான்: கமல், தமிழ் பிராமின்; அஜித், மலையாள பிராமின். வேணும்ன்னா விக்கிபீடியாவுல அஜித் குமார்ன்னு தேடி போய் பாருங்க. அதுல தெளிவா போட்டு இருப்பாங்க.

தம்பி: அதுல பொய்யா போட்டுருப்பாங்கண்ணே. கமல் பரமக்குடி தேவர்’ண்ணே. கமல் மாதிரியே அஜீத்தும் தேவர் தான்’ணே. அவரு ஊரு என்னான்னு எனக்கு சரியா தெரியல. ஃப்ரெண்ட்கிட்ட் விசாரிச்சு சொல்றேன்ணே..

நான்: விசாரிச்சு சொல்லுங்க. நன்றி



 நிகழ்வு: 02

அஜித் படம் நல்லா இல்லைன்னு பதிவு போட்டவரின் பதிவுல கண்டபடி ஒருமையில் கண்ணியமற்ற தனிநபர் தாக்குதல் நடத்துற முட்டாள்த்தனமான ரசிகனுங்க இருக்கிற வரைக்கும் ஒரு மயிறும் இங்க ஆகப்போறதுல்ல. மீசையை முறுக்கிக்கிட்டு வேறவொருத்தன் கிட்ட அடிமையா கிடக்குறதுதான் இவனுங்களுக்கு காலம்காலமா கைவந்த கலை. அதே மாதிரி அஜித்தையும் அரியணை ஏத்தி வச்சிட்டு ”எங்க ஆளு அஜித்!”ன்னு பெருமை பேசத்தான் அடிபோட்டுக்கிட்டு கிடக்குறானுங்க. இப்போ இருக்க நிலைமையில அடுத்த வேலை சோத்துக்கே அடுத்தவன் கிட்டதானே அடிமையா வேலை பார்க்குறோம்ன்னு யோசிக்காத முட்டாபயலுக, என்னைக்குமே திருந்த வாய்ப்பே இல்லை.

03 பிப்ரவரி 2015

திருக்குராவடி எனும் திருவிடைக்கழியில் முருகனும் சிவனும்!



முருகப்பெருமானும், லிங்க வடிவ சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரியும் அற்புத தலம் திருவிடைக்கழி. சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படும் இந்தக் கோவில், நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தூரத்திலும், தில்லையாடிக்கு மேற்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார். 

சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவணபொய்கையில் நீராடி, இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக விளங்குகிறது. மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.

இந்த ஆலயத்தில் வழிபட்டால், ஒருவருக்கு ஜாதகரீதியாக உள்ள மாங்கல்யதோஷம், நாகதோஷம், புத்திரதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி, சுபீட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஆண்டு முழுவதும் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. சிறப்பு திருவிழாவாக வைகாசி சதய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நான் அடிக்கடி செல்லும் கோவில்களில், என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கோவில் இது. தைப்பூசம் என்பதால் இன்றைக்கும் சென்று வந்தேன். ஒருமுறை நீங்களும் வந்து தரிசித்து பாருங்கள்.

இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!

02 பிப்ரவரி 2015

தை பூச திருநாள்!

வாடிய பயிரை கண்டபோதல்லாம் வள்ளலார் வாடினார். தைப்பூச திருநாளான இன்னைக்கு நிலைமையே வேற, வாடி போன பயிரை கூட பார்க்க முடியல. விளை நிலங்களையெல்லாம், விலை நிலங்களா ஆக்கிட்டாங்க.

ஜோதிடப்படி விசாக நட்சத்திரத்திற்கான விலங்கு: புலி. மேலும், விசாக நட்சத்திரத்திற்கு உரியவரான எம்பெருமான் திருமுருகனுக்கான ஆதித்தமிழரின் வழிபாட்டு முறையில் காந்தள் மலர் (கார்த்திகை பூ) தான் முதலிடம் பிடித்திருந்தது. இந்த இரண்டுமே விடுதலை புலிகளுக்கு நெருக்கானவை.

விசாக நட்சத்திரத்தின் மொத்தமுள்ள் நான்கு பாதங்களில் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், மீதமுள்ள நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது. ஜாதக்கப்படி என்னோட நட்சத்திரம் கேட்டை. அதுல பாதம் நான்கு. ஒருவேளை எம்பெருமான் திருமுருகனின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் பாதமானது நான்காம் பாதமாக இருக்குமானால், நானும் அவர் ராசி தான். விருச்சிகம்! தமிழ்தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனும் விருச்சிக ராசி தான். எப்படியெல்லாம் பெருமை பட்டுக்க வேண்டிருக்கு.


என் காதலன்
அவன் மாயவன்
பகலவன் சேயவன்
எம் தாயவன்
மன தூயவன்
தமிழ் ஆண்டவன்
யாரவன்
விசாகன் வேலவன்!
சேயோன் போற்றி!
மயிலோன் போற்றி!
சேவற்கொடியான் போற்றி!
வேலேந்தியோன் போற்றி!
செந்தமிழோன் போற்றி!
வெற்றிகொண்டான் போற்றி!


வெற்றி வேல்! வீர வேல்!

உறவுகள் அனைவருக்கும் தைப்பூசத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்