08 ஜனவரி 2014

அமாவாசைக்கும் அப்துல்லாக்கும் என்ன சம்பந்தம்?

தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்: உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- வினவு செய்தி

தில்லை நடராச கோவில் தீர்ப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தை பாராட்டுகிறேன். இதை பாரிய அளவில் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, மிகப்பெரிய போராட்டக்களத்தை உருவாக்க வேண்டும். ஆனால், என் சந்தேகம், ஏன் இந்த போராட்டத்தை ஈ.வெ.ரா சிலைக்கு முன்பாக வைத்தார்கள் என்பதுதான்... ஆன்மீக உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டத்தில், கடவுளே இல்லையென்று சொன்ன ஈ.வெ.ரா.வின் சிலைக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் சரியானதாக படவில்லை. தேசியம் உடல்; தெய்வீகம் எனது உயிர்; என்று சொல்லி தன் கடைசிகாலம் வரை ஆன்மீகபற்றுள்ள தேசிய அரசியல் தலைவரான ஸ்ரீ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யென்ற மாபெரும் தமிழரின் சிலைக்கு முன்பாக நடத்திருந்திருக்கலாம். இல்லையென்றால், ஸ்ரீ பரமஹம்ச விவேகானந்தர் சிலைக்கு முன்பாக இப்போராட்டத்தை நடத்தி இருக்கலாமே? அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்ன சம்பந்தம்? கடவுளே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்;ன்னு சொன்ன ஈ.வெ.ராவின் சிலைக்கு முன்னால் நடத்திய இந்த போராட்டம், ஒரு குறிப்பிட்ட சாதீய பின்புலத்தைத்தானே உருவாக்க முயல்கிறது. கடவுளே இல்லைன்னு சொல்றவங்களுக்கு, எவன் பூஜை பண்ணினால் என்ன? என்று தானே கேட்கத்தோணும்.

- இரா.ச.இமலாதித்தன்

07 ஜனவரி 2014

ஜோதிடமும் - பணமும்!

ஜோதிடமும் - எதிர்காலமும்!

எல்லோருக்கும், 'ராசி' தெரியும்; 'நட்சத்திரம்' தெரியும்; சிலருக்கு, எத்தனையாவது 'பாதம்' என்பது கூட தெரியும்; ஆனால், வெகு சிலருக்கே, 'லக்னம்' என்ன என்பதே தெரியும்.

இங்கே ராசி என்பது உடல். ஆனால், லக்னம் என்பது உயிர். வெறும் உடலை வைத்து, அடையாளம் மட்டுமே காண முடியும். ஆனால், உயிர் இருந்தால்தான் இயங்க முடியும். எனவே, என்ன ராசி என்பதை விட, என்ன லக்னம் என்பதை தெரிந்து வைத்து கொண்டு, அதன் மூலம் ஜோதிடத்தை அணுகுவதுதான் சிறந்தது. ராசிக்கட்டத்தில் லக்னம் என்பது தான் முதலிடம். அதை தொடர்ந்துதான், மற்ற ராசிகளும் கடிகார சுழற்சி முறையில் அணிவகுத்து வரும். லக்னத்தை வைத்தே, எல்லா தோசங்களும் - யோகங்களும் அமைகின்றன.

அடியேன், விருச்சிக ராசி - கேட்டை நட்சத்திரம் - 4ம் பாதம் - விருச்சிக லக்னம்!

இந்த பதிவை படிக்கும் எத்தனை பேருக்கு, உங்களது ராசி - நட்சத்திரம் - பாதம் - லக்னம் உள்பட யெல்லாம் தெரியும்?

பணமும் - எதிர்காலமும்!


பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்!

ஏன் அப்போ மட்டும் கள்ள நோட்டு அடிக்க மாட்டாய்ங்களா என்ன? ரிசர்வ் வங்கி ஆயிரம் கட்டு அடிக்கிறதுக்குள்ள, அவிய்ங்க லட்சம் கட்டு அடிச்சிடுவாய்ங்க. இனி வரும்காலங்களில், பண புழக்கத்தை குறைக்க வேண்டுமானால் ஏதாவது வழிவகை செய்யலாம். என்னளவில், அந்தகாலம் மாதிரி பண்ட பரிமாற்று முறை கூட சிறப்பாகதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

ரூபாய் நோட்டு தாளில் இருப்பதால் டேமேஜ் ஆகலாம். ஆனால், அது இயற்கைக்கோ உடலுக்கோ பாதிப்பை தருவதில்லை. ஏனெனில் தாள், மரத்திலிருந்து உருவாக்கபடுகின்றன. ஓருவேளை, ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக்கில் புழக்கத்தில் விட்டால், உடலுக்கும் பாதிப்பு, இயற்கைக்கும் பாதிப்பு தானே?


- இரா.ச.இமலாதித்தன்

குறுக்கு வழியில் அரசியல்வாதியாக உருவெடுக்க சில வழிகள்


01. மனசுகுள்ள கருமைநிற இருளை வைத்துக்கொண்டாலும், வெளியில் வெள்ளை நிற வேட்டி - சட்டையோட பளிச்சுன்னு தெரியணும்.

02. சலவைக்கு போட்டு, அயர்ன் பண்ணின அந்த வெள்ளை சட்டையின் பாக்கெட்ல, முக்கியமான தலைவர் படத்தை வச்சிக்கணும்.

03. யார்கிட்ட பேசினாலும், வயதில் இளையவர் என்றால் தம்பின்னும், வயதில் மூத்தவரென்றால் அய்யான்னும், சமவயதினர் என்றால் அண்ணேன்னும் சொல்லிடணும்.

04. கூட்டநெரிசலில் பேசினாலும், தனியறையில் பேசினாலும், குரல் ஏற்ற இறக்கத்துடன்தான் பேசணும்.

05. கண்டிப்பா கையில ஒரு ஹேண்ட்பேக் வச்சிக்கணும். அப்போதான் ஒரு லுக் கிடைக்கும். அந்த பேக்குல டைரி - தண்ணீர் பாட்டில் - வெத்தலை பாக்கு - பீடி சிகரெட் - சரக்கு பாட்டில் - சைடிஸ்ன்னு எல்லாத்தையும் வச்சிக்கலாம். ஒருவேளை சால்வை போத்தினாலோ - நினைவு பரிசு கொடுத்தாலோ, அதை எடுத்துட்டு போக வசதியா இருக்கும்.

06. எனக்கு எல்லாமே தெரியும், அனைத்து அரசியல் நிகழ்வுகளும் எனக்கு அத்துப்படி, பல தலைவர்கள் எனக்கு தோழர்கள், இன்னும் சில இளைய தலைவர்களை உருவாக்கியதே நான்தான், இப்படியாக யார்கிட்ட பேசினாலும் அரைமணி நேரம் கேட்குறவன் கன்ஃபூஸ் ஆகுற அளவுக்கு அடிச்சு விடணும். அதுலயும் குறிப்பா 1976ல பிப்ரவரி மாசம் 30ம்தேதி, காலையில சரியா மணி 8.48க்கு என்ன நடந்துச்சு தெரியுமா?அப்படின்னு குத்துமதிப்பா தேதி கிழமையை சொல்லணும். அப்போதான் கேட்குறவன் உண்மையின்னு நம்புவான்.

07. முக்கியமா, உழைச்சு நேர்மையான முறையில் சம்பாரிக்கணும்ன்னு நினைச்சுக்கூட பார்க்க கூடாது. எவன் சம்பாரிச்ச பணத்தையாவது தன்னோட அக்கவுண்டல பணத்தை போட சொல்லிட்டு, அதுல சுகபோகமா வாழ தெரிஞ்சிருக்கணும்.

08. அதுக்கப்பறமா, நாலஞ்சு கத்துக்குட்டிங்கள கையில வச்சிக்கிட்டு, தன்னைத்தானே எப்படியெல்லாம் பில்டப் பண்ணலாம்ன்னு ஐடியாக்களை கொடுத்து, சிலபல டிப்ஸ்களையும் சொல்லி ட்ரைனிங் கொடுக்கணும். அதுலயும் குறிப்பா, வாழ்க! யென்ற கோஷமெல்லாம் முரட்டுத்தனமா இருக்கணும்.

இன்னும் இதுபோல பல வழிமுறைகள் இருக்கு; முதலில் இந்த நிலையை அடைஞ்சாலே, அதன்பிறகு தானாகவே பெரிய அரசியல்வாதியாக ஆய்டலாம். வருங்கால அரசியல்வாதிகள் அனைவருக்கும் அடியேனின் வாழ்த்துகள்.

- இரா.ச.இமலாதித்தன்.

06 ஜனவரி 2014

ஜோதிடமும் - நீயா? நானா? கருத்துகளமும்!

நேற்றைய நீயா? நானா?வில், 2014ம் ஆண்டின் 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்களை பற்றி விவாதம் செய்யப்பட்டது. அந்த விவாதத்தில், நம்ம ராசி விருச்சிகத்தை பற்றியும் நல்லாத்தான் சொன்னாய்ங்க. ஆனால், ஜோதிடர்களாக பங்கேற்ற ஒருதரப்பினர்களுக்கு இடையேயுள்ள கருத்து மோதல்கள், பலருக்கு குழப்பத்தைத்தான் ஏற்படுத்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒருராசிக்கு ஒருத்தர் இந்த வருசம் நல்லாருக்கும்ன்னு சொல்றதை, இன்னொருவர் அந்த ராசிக்கு இந்த வருசம் நல்லாவே இருக்காதுன்னு சொல்றாரு. இப்படி நேரெதிர் கணிப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும் சிலர், ஜோதிடர்கள் தொலைக்காட்சி / நாளிதழ் / மாத இதழ் / வார இதழ் போன்ற ஊடகங்களில் செய்யும் சிலவற்றை சுட்டிக்காட்டி அது தவறென்று மிக வெளிப்படையாக பதிவு செய்தனர்.

இந்த பொதுப்பலன்கள் என்பது எல்லா ராசிக்காரகளுக்கும் அப்படியே பொருந்துமா என்று கேட்டால், கண்டிப்பாக 90% பொருந்தப்போவதில்லை. வேண்டுமென்றால், நமக்கு விருப்பமான செய்திகளை மட்டும் நம்மோடு பொருத்தி, சந்தோசமும் - ஆறுதலும் அடையலாம். ஆனால், அது உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் ஏழரை கோடி மக்கள் தொகையில், ஏறத்தாழ ஒரே ராசிக்காரர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருக்க வாய்ப்புகளுண்டு. அப்படி அந்த ஐம்பது லட்சம் பேருக்கும் ஒரேவிதமான பலன்கள் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதானே எதார்த்தம். அதனால்தான் இந்த பொதுபலன்கள் எப்போதுமே, அனைத்து தரப்பினருக்கும் ஒத்துபோவதில்லை. குறிப்பாக, ஒரே வீட்டில் இரட்டையர்களாக பிறக்கும் இரு குழந்தைகளுக்கே, ஒரே மாதிரியான பலன்கள் அமைவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

ஜோதிடத்தின் மீதும் - ஜாதகத்தின் மீதும் பெரும்பாலோனோருக்கு விருப்பம் உண்டு. ஆனால் சிலர் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. எப்போதுமே, எதிர்காலத்தை தெரிஞ்சிக்கிறதுல எல்லோருக்கும் ஓர் ஆர்வம் இருக்கு. ஜாதகம் என்பதே நமக்கு சாதகமானவற்றை தெரிந்து கொள்ளத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், பரிகாரம் என்ற பெயரில் அதை ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள்.


பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கணிதம். மேலும் அது அற்புதமான கலையும் கூட. அந்த கலையை அரைகுறையாக கற்றுக்கொண்டவர்கள் தங்களை. மிக தேர்ந்த ஜோதிடர் போல விளம்பரப்படுத்தி கொண்டு, தவறான கணிப்புகளை சொல்லி வியாபார நோக்கில் கொண்டு சென்றதாலேயே, ஜோதிடம் என்பது கேலிப்பொருளாகவும் - கேளிக்கை பொருளாகவும் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை ஜோதிடம் என்பது உண்மையே. அதை தவறான பாதையில் பணம் சம்பாரிக்கும் நோக்கோடு செயல்படும் ஜோதிடர்கள் வேண்டுமென்றால் போலியாகவும் - பொய்யர்களாகவும் இருக்கலாம். ஒருபோதும் ஜோதிடம் பொய்யாக போவதில்லை. அதை வைத்து பரிகாரம் என்ற பெயரில் பிழைப்பு நடத்தி, வயிறு வளர்க்கும் சில கோமாளிகளால் தான், மிகச்சிறந்த கலையான ஜோதிடமும் இன்று விவாதப் பொருளாக்கப்பட்டு விட்டது என்பதை நினைக்கையில் கோபமும் - சிரிப்பும் கலந்தே வருகிறது.

ஆனிப்போய் ஆடி வந்தா டாப்பா வருவேன்னு பட்டிக்காட்டு ஜோசியரு யாரும் எனக்கு சொல்லல. ஆனால், சித்திரை மாசம் முதல் டாப்பா இருக்கும்ன்னு பட்டினத்து ஜோசியரு என்கிட்ட சொல்லிருக்காரு. ;)

- இரா.ச.இமலாதித்தன்

04 ஜனவரி 2014

அண்ணன் - தம்பி!

மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்; புறக்கணிக்கப்படும் அழகிரி. கருணாநிதியின் கண்ணுக்கு எதிராகவே, அண்ணன் - தம்பிக்கான பதவி போட்டி வெடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. விரைவில், 'கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம்' என்ற கட்சிக்கூட உருவாகலாம். மக்களாட்சி காலத்திலும் மன்னராட்சி போல, வாரிசு அரசியலை உருவாக்கினால், அதன் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்பதற்கான சான்று இது. இதே போல, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலிலும், அண்ணன் - தம்பி போட்டி உச்சத்தில் இருக்கிறது.

விட்டுக்கொடுத்தலிலும் - விவேகத்திலும் - வீரத்திலும் - ஆளுமையிலும் - அரசாள்வதிலும், அண்ணன் - தம்பியாக வெற்றி வகை சூடியவர்கள், மாமன்னர் மருது பாண்டியர்கள் மட்டுமே!

01 ஜனவரி 2014

போலீஸ் விசாரணையில் ஆட்டோ டிரைவர் பலி


நாகப்பட்டினத்தில் புத்தாண்டு ஆரம்பத்திலேயே காவல்துறை தனது பணியை செவ்வனே செய்திருக்கிறது. குடிபோதையில் தகராறு என்று சொல்லி நேற்றிரவு (டிசம்பர் 31) விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்து, ஆட்டோ டிரைவரை அடித்தே கொலை செய்துவிட்டது காவல்துறை. ஓர் உயிரை கொல்லும் உரிமையை யார் தந்தது இவர்களுக்கு? மக்களை பாதுகாக்க தானே காவல்துறை? அப்பாவியை அடித்து துன்புறுத்தவும், பயமுறுத்தவும் தான் காவல்துறையா? ஒருவன் குற்றமே செய்தாலும் கூட, அந்த குற்றத்திற்கான தண்டனையை நீதிமன்றம் தானே வழங்கவேண்டும்? இப்படியான ஆதிக்க மனபோக்கை காவலர்களுக்கு தந்தது யார்? தமிழ்நாட்டின் காவல்துறையின் அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் தமிழக முதலவர் ஜெயலலிதா, இதற்கு என்ன சொல்ல போகிறார்? வழக்கம்போல லட்சம் ரூபாய் நிவாரணத்தை கொடுத்து சம்பந்தபட்டவர்களை வாயடைக்க போகிறாரா? காவல்துறையின் அராஜக போக்கை கண்டிக்க யாருமே இல்லையா? நாகை மருத்துவமனை வாசலில் இப்போது வரை ஆட்டோ தொழிற்சங்கத்தின் மூலமாகவும், நாகை வட்டார ஆட்டோ ஓட்டுனர்களாலும், காவல்துறையை கண்டித்து சாலை மறியல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரையிலும் எந்த (நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி) ஊடகமும் இந்த கொலை சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததாக தெரியவில்லை.

31 டிசம்பர் 2013

புது ஆண்டு புகுதல்

2013 ம் ஆண்டு எத்தனையோ சுக துக்கங்களை கலவையாக தந்தாலும், இயற்கை வேளாண் ஞானி தெய்வத்திரு. கோ. நம்மாழ்வார் அவர்களின் மரணம், கொஞ்சம் அதிகமான வலியையே தருகிறது.

எனக்கு ஏற்கனவே மது - புகை பழக்கம் இல்லாததால் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லை என்பதால், இணைய செயல்பாடுகளில் வருகின்ற ஆண்டும், வழக்கம் போல யாருக்காகவும் சுயத்தை இழக்காமல் இருப்பதே சரியானதென்று, புதுவருட கொள்கையாக முடிவெடுத்துள்ளேன். மேலும், வருகின்ற ஆண்டில் செய்ய வேண்டியவைகளென, இன்னும் பலவற்றை மனதிற்குள்ளாக பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன். அதை இப்போதே பொதுவில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். மற்றபடி ஜோதிட கணிப்பீடின் படி, வரும் ஆண்டு முதல் இன்னும் 15 ஆண்டுகள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த புத்தாண்டை மகிழ்வோடும் - எதிர்பார்ப்போடும் வரவேற்கிறேன்!


என்னதான் தமிழனாக இருந்தாலும், ஹிந்து கலாச்சார விழாக்களை தவிர்த்து, ஏனைய (குறிப்பாக, அரசாங்க பதிவேடுகள், சம்பளம், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட) பல செயல்பாடுகளுக்கு ஆங்கில தேதியைதான் நாம் பயன்படுத்துகிறோம். அதனாலேயே, அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!