29 ஏப்ரல் 2015

அரசு வேலை அவ்வளவு எளிதா?

கடந்த ஒரு சில நாட்களாக தமிழக கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்காக மாவட்டம் தோறும் 10வது படிச்சிருக்க பெரும்பாலானோர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிடப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி, சான்றிதழையெல்லாம் காட்டிவிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். முதலில் ஸ்கிரின் டெஸ்ட் அடுத்து நேர்காணல். எழுத்து தேர்வில் 5:1 என்ற விகிதச்சாரத்தில் ஆட்களை எடுக்க போவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நிலைமை என்னவென்றால் இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான் என்பதும் இங்குள்ள பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கிறது. இது தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுங்கட்சிக்கான வசூல் வேட்டைக்கான ஒரு யுக்தி என்பது பலருக்கும் தெரிந்து பின்பும், ஓர் அற்ப மகிழ்ச்சிக்காகவும், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியும் சென்னையில் பணிபுரிவர்களெல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு அப்ளை செய்து வருகின்றனர்.

ஒரு பதவிக்கு இத்தனை ரூபாய் பணம் என்பதை முன் கூட்டியே நிர்ணயித்து, அதை ஒன்றியம், நகரம், ஊராட்சி, மாவட்டமென பல நிலைகளில் ஆட்களை நியமித்து வசூலித்து பதவியை கொடுப்பது தான் அரசாங்கமென்றால், அது மக்களுக்கு எதற்கு? ஏழை ஏழையாக இருப்பதை பற்றி அவன் கவலை கொள்வதில்லை. பணக்காரன் இன்னும் பணக்காரனாக இருப்பதற்காக கவலை படாமல் பல வழிகளில் தன் ஆளுமையை பயன்படுத்தி கொள்கிறான். ஆனால் நடுத்துர வர்க்கமோ நாளுக்கு நாள், அந்த பக்கமும் போக முடியாமல், இந்த பக்கமும் போக முடியாமல் நசுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அளவில் பெரிய அரசாங்க பதவியில் இருக்கும் நபரே, தன் மகனுக்காக 6 லட்சத்தை, (மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அந்த நபரான) யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுத்து வைத்து காத்திருக்கிறார். எனக்கே இவ்வளவு சிரமம் இருக்கு. நீங்கயெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்குறீங்க?ன்னு கேட்கிறார். இது அனைவருக்கும் தெரிந்தும் கூட தட்டிகேட்க வக்கில்லாமல், வேடிக்கை பார்ப்பது தான் பல சாமானியர்களுக்கு சாலச்சிறந்தது. இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அரசு வேலையில் சேரும் ஒருவன், எப்படி சேவை மனப்பான்மையில் அரசுக்கு உண்மையாக பணியாற்றுவான்? கொடுத்த பணத்தை எவ்வகையில் சம்பாரிக்கலாமென்று தானே சிந்திப்பான். இது தான் இன்றைய அரசியலின் வளர்ச்சி. இந்த வளர்ச்சி தான் ஆண்ட - ஆளும் - ஆளப்போகின்ற அரசுக்கு பக்க துணை.

- இரா.ச.இமலாதித்தன்

18 ஏப்ரல் 2015

ஓ காதல் கண்மணி - ஓகே!

வழக்கம் போல ரயிலும், மழையும், சின்ன சின்ன வார்த்தைகளோடு வசனங்களும் வந்து போக, ”ஓ காதல் கண்மணி”யும் மணிரத்னத்தின் மற்றுமொரு சாயல் தான். ஆனால், மெளனராகம், அலை பாயுதே முதல் ஆய்த எழுத்து, கடலென அவர் சொன்ன காதலில் இது புதுசு. ஐடி துறையின் லிவிங் டுகதர் வாழ்க்கையை பதிய பரிமாணத்தில் பதிவு செய்து, பார்பன பிண்ணனியோடு கதையை நகர்த்தியிருப்பது அவரின் நேர்மையுடன் கூடிய நேர்த்தியை காட்டுகிறது. இப்போதுள்ள பெருநகரத்து தலைமுறையினருக்கு கல்யாணம் போன்ற சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் கசக்கிறது என்பதை படம் நெடுகிலும் சொல்லிருந்தாலும் கூட, மேற்கத்திய மேகத்தால் நம் தாயகத்தில் சில கலச்சார சீர்கேடு வந்தாலும் அதை நம் மூத்தோர் வாழ்வியலோடு ஒப்பிடும்போது, தவறென இளம் தலைமுறை புரிந்து கொண்டு நம் கலச்சார பாரம்பரிய வேர்களோடு விழுதாய் இணைவார்கள் என்பதை திரைக்கதையாக்கி இருக்கிறார் மணிரத்னம். படம் புதுமையா, இளமையா இருக்கு. ராவணன், கடல் என எதிர்பார்ப்பை நிறைவு செய்ய தவறியதற்கு பின்னால், நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்திற்கு ஓகே சொல்லிருக்கும் இந்த ஓ காதல் கண்மணி, நம் மண்ணின் முந்தைய, தற்போதைய கலச்சார இடைவெளியை வெளிச்சம் போட்டு திரையில் காட்டிருக்கிறது. ரஹ்மான், பிசி ஸ்ரீராம், வைரமுத்து என பெரிய ஜாம்பவான்களின் கூட்டணில் ஓ காதல் கண்மணி மணிரத்னத்தின் ஹிட் வரிசையில் சேரும் என நினைக்கிறேன். படம் எனக்கு பிடிச்சிருக்கு. (85/100) கண்டிப்பா, படத்தை தியேட்டர்ல போய் பார்க்கலாம்.

- இரா.ச.இமலாதித்தன்

08 ஏப்ரல் 2015

செம்மர முதலாளிகளுக்கு தண்டனை என்ன?

செம்மரத்தை வெட்டுவது சரி தப்புன்னு விவாதிக்கிறதுக்கு முன்னாடி, அந்த மரத்தை வெட்ட சொல்றவன் யாரு? அதை வைத்து வியாபாரம் செய்து கோடிகளில் புரளுவது யாரு?ன்னு கேட்க நாதியில்ல. ஓர் உயிரை கொல்வதற்கான அதிகாரத்தை காக்கிச்சட்டைக்கு தந்தது யாரு? ஆந்திர என்கவுண்டர் புகைப்படங்களை பார்க்கும் போதும், ஈழம் தான் நினைவுக்கு வருது. எல்லா இடங்களிலும் தமிழனை அடிச்சிக்கிட்டு தான் கிடந்தாய்ங்க. இப்போ கொல்லவும் ஆரம்பிச்சிருக்காய்ங்க. உடனே, அவங்க பண்ணினது தப்பு தானே? அதுனால தான் சுட்டு கொன்னுருக்காய்ங்கன்னு யாராவது நினைச்சீங்கன்னா, நாட்டின் குடிமகனை மரம் வெட்டி பொழப்ப நடத்த வச்சிருக்க அரசாங்கத்தை நினைச்சு தான் முதலில் வருத்தப்படணும்.

03 ஏப்ரல் 2015

பங்குனி உத்திர திருநாள்!

பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்துடன் கூடிய இந்நாளில் தான், சிவபெருமான் - பார்வதி, ரங்கமன்னார் - ஆண்டாள், ராமன் - சீதை போன்றோர்களின் திருமணமும் நடந்தது என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக சூரபதமனை சம்ஹாரம் செய்த பிறகு, இந்த பங்குனி உத்திரத்தில் தான் முருகப்பெருமான், தெய்வானையை மணம்கொள்கிறார். மேலும் இன்றைய நாளில் தான் ஐயப்பன் பிறப்பதாகவும், மன்மதனை உயிர்ப்பிக்கும் நாளாகவும், மர்காண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த நாளாகவும், மேலும் இடும்பனால் காவடி தூக்கும் பழக்கமும் இன்றைய பங்குனி உத்திரத்தில் தான் தொடங்கியது என்பதும் ஐதீகம். இதுபோல இன்னும் பங்குனி உத்திர நாளுக்கு பல சிறப்புகள் இருந்தாலும், உண்மையில் சிவ-சக்தியின் ஐக்கியத்தை உணர்வதற்கான உன்னத நாளாகவே இந்நாள் விளங்கிறது என்பதே அடிப்படை. இங்கே ஆண் - பெண் இணைதல் என்பது வெறும் காமமாக காட்சிப்படுத்தப்பட்டாலும், அண்டத்திலுள்ள எல்லாமும் இந்த இரு தத்துவார்த்த ரீதியிலே பிரிந்து கிடக்கின்றது என்பதே நிதர்சனம். எனவே, அந்த இரு தன்மைகளும் ஒன்றாக இணையும் நாளாகவே இந்நாளை நாம் எடுத்து கொள்ளலாம். அந்த இரு துருவங்களின் இணைப்பின் உருவகமாகவே லிங்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, அறம் பொருள் இன்பத்தை குறளில் சொன்ன வள்ளுவரும் காமத்து பாலோடு நின்றுவிடவில்லை. அதற்கடுத்த, வீடுபேற்றை நாமே அனுபவித்து கொள்ளவே மறைபொருளாக நிறுத்திவிட்டார். அதை நாம் தான் உணர்தல் வேண்டும்.

நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பங்குனி உத்திர திருநாள் நல் வாழ்த்துகள்!

01 ஏப்ரல் 2015

கிருஷ்ணசாமி சொல்வது போல சண்டியரும், கொம்பனும் தேவர் சாதியின் அடையாளமா?



தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள், தங்களது அரசியலுக்காக ஒருபுறம் மன்னர் பரம்பரை என்று சொல்வதும், மறுபுறம் அரசியல் சமூக எதிரிகளை எதிர்க்க திராணியில்லாமல் PCR வழக்குகள் மூலம் தங்களை தலித் -தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதும் கடந்த சில வருடங்களாக அதிகமாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, பறையர்களை எங்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள் என்றும், எங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், நாங்கள் மன்னர் பரம்பரை என்றும் சொல்லிக்கொண்டு, செந்தில் மள்ளர் எழுதிய பள்ளர் வரலாற்று(?) நூலான மீண்டெழும் பாண்டியர் வரலாறில், பறையர் இன மக்களை மிகவும் கீழ்த்தரமாக பாலியல் தொழில் சார்ந்து விமர்சனம் வைத்து தங்களது கோர முகத்தை வெளியுலகுக்கு காட்டினர். இதுபோன்ற அவதூறுகளை உள்ளடக்கிய அந்த நூல், பல தரபட்ட மக்களின் எதிர்ப்பால் நீதிமன்றத்தின் வாயிலாகவே தடை செய்யப்பட்டது என்பது வேறொரு கதை. இங்கே சாதியை வைத்து இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல் செய்யும் கிருஷ்ணசாமி போன்றவர்கள், தமிழ்சாதிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பல சதி வேலைகளில் இறங்கி கொண்டே இருக்கின்றனர் என்பதையும் நடுநிலையாளர்கள் தொடர்ச்சியாக கவனித்து கொண்டே வருகின்றனர்.

”கொம்பன்” என்ற பெயருக்கு தேவர் என்று பெயர் என்பது போலவும், கொம்பன் வெளிவந்தால் தென் தமிழகத்தில் சாதி கலவரம் ஏற்படும் என்பது போலவும் அறிக்கை விட்டு இழிவானதொரு அரசியல் செய்யும் கிருஷ்ணசாமி, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான மீத்தேன், நியூட்ரினோ, கெயில், மேகதாது அணை போன்ற பலவித பிரச்சனைக்கெல்லாம் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர வக்கில்லாமல், சினிமாவுக்காக சட்டமன்றத்தில் ரகளை செய்ததை நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது. பதினோறு வருடங்களுக்கு முன்பாக ஏற்கனவே கமலின் ’சண்டியர்’ படத்தின் போது, சண்டியர் என்பது தேவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது என்றும் போராட்டம் செய்ததால், சினிமா தொழிலில் முதலீடு செய்தவர்களையும், அந்த தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் மனதிற்கொண்டு, கமல் அந்த படத்தின் டைட்டிலை 'விருமாண்டி'யாக மாற்றி வெளியிட்டார். மீண்டும் அதே பெயரில் 'சண்டியர்' என்ற படம் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அதுவும் தேவர் சாதி மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் படமாகவே உருவாகியிருந்தது. ஆனால், அதை எதிர்க்க இந்த சினிமா போராளி கிருஷ்ணசாமி வரவில்லை. ஏனென்றால், படத்தில் பணியாற்றிய அனைவரும் புதுமுகம். அதனால், அந்த படத்தை எதிர்த்து எந்தவித லாபமும் கிருஷ்ணசாமிக்கு வரபோவதில்லை. அதனால் அந்த 'சண்டியர்' திரைப்படமானது எவ்வித எதிர்ப்புமின்றி வந்தது. கடந்த வருடங்களில் குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், சண்டியர், மதயானை கூட்டம் என தொடர்ச்சியாக முக்குலத்து மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் வெளிவந்தன. அப்போது கிருஷ்ணசாமி போன்றோர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்புமில்லை. ஏனெனில் அப்போது சட்டமன்ற தேர்தலும் நெருங்கவில்லை. ஆனால், இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போது மக்கள் பிரச்சனைகளை இளைஞர்களே கையில் எடுத்து போராடி வருவதால், போரட்ட கவனமெல்லாம் அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கின்றது. அதனால் மீண்டும், ஒரு பிரபல ஹீரோவின் படத்தை எதிர்த்தால் தான் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் கூட்டணி பேரத்தில் ஓரிரு சீட்டுகள் கூடுதலாக வாங்க முடியும் என்பதால், கொம்பனை எதிர்க்கிறார் இந்த கிருஷ்ணசாமி.

இங்கே குழப்பம் என்னவென்றால், தலித் சாதிக்கட்சி தலைவரான கிருஷ்ணசாமியால் இன்றைக்கு கடுமையாக எதிர்க்கப்படும் ’”கொம்பன்” திரைப்படத்தில் நடித்திருக்கும் கதைநாயகனான கார்த்தியின் நடிப்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ”மெட்ராஸ்” திரைப்படத்தை ஏன் எதிர்க்கவில்லை? இந்த கொம்பன், சண்டியர் என்ற பெயரெல்லாம் படத்திற்கு தலைப்பாக வைக்க கூடாது. அது தேவர் சாதியின் குறியீடுயென்று முறையிடுவது ஏனென்று தான் இன்னமும் புரியவில்லை. ஒரு பக்கம் மன்னர் பரம்பரைன்னு சொல்லிக்கொண்டே, மறுபக்கம் சாதி பெயரை சொல்லி திட்டிவிட்டதாக பிசிஆர் கேஸ்ல தலித்திய தாழ்த்தப்பட்டவர்களாக மாறிவிடுவது தான் ஆண்டபரம்பரைக்கான அடையாளங்களா? மாற்றம் என்பது மாறுதலுக்குரியது தான். முக்குலத்தோரும் மாற்றமடைந்து வருகிறார்கள். அவர்களிடம் மீண்டுமொரு முதுகளத்தூர் கலவரத்தை எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் இப்போது காமராஜரும் இல்லை; அவரின் காங்கிரஸ் ஆட்சி இங்கில்லை.

சென்ற வாரம் நியூஸ் 7 தமிழ் சேனலுக்கு நேயர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்த திருமாவளவன், நிகழ்ச்சியின் இறுதியில் என்னுடைய கேள்வியொன்றுக்கும் இப்படித்தான் பதிலளித்தார். அந்த கேள்வி என்னவென்றால், ”தென் தமிழகத்தில் பள்ளர் சாதியினர் தங்களை தேவேந்திர குலம் என சொல்லி கொள்வதையும், அவர்கள் தங்களை தலித் இல்லையென்று சொல்லிக்கொள்வதையும் எப்படி பார்க்கின்றீர்கள்?” என்பது தான். அந்த கேள்விக்கு, ”விளிம்பு நிலை சமூகம், மேலே வருவதற்காக எந்த மாதிரியான சொல்லாடல் பயன்படுத்தினாலும் அது தவறில்லை” என்று திருமாவளவன் பதிலளித்திருந்தார். இந்த நேர்மையை பாராட்டும் வேளையில் தான், ஒரு சந்தேகமும் எழுகிறது. விளிம்புநிலை சமூகம் என்பதாக பள்ளர்களை, பறையர்களோடு திருமாவளவன் ஒப்பிட்டு சொல்வதாக எடுத்துக்கொண்டால், பள்ளர்களோ நாங்கள் வேறு; பறையர் வேறு. நாங்கள் ஆண்டபரம்பரை, அவர்கள் அடிமை. என்று வெளிப்படையாக பல ஊர்களில் மேடை போட்டு பேசி வருகிறார்களே. அதையெல்லாம் இனியாவது புரிந்து கொண்டு இந்த தலித் நாடகங்களை நிறுத்திவிட்டு, தமிழ் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.

அது போக, பறையர் சாதி அரசியலுக்குள் நடக்கும் உண்மை நிலையை மெட்ராஸ் படத்தின் மூலமாக திரைக்குள் கொண்டு வந்த இயக்குனர் ரஞ்சித்தை விடவா, கொம்பன் இட இயக்குனரான முத்தையா தவறுதலாக சொல்லிவிட போகிறார்? மெட்ராஸ் படத்தில் வன்னியர்களை கொடியின் நிறத்தின் மூலமாக எத்தனை இடங்களில் மறைமுகமாக தாக்கியுள்ளனர் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா என்ன? நீல நிறத்தை மட்டுமே உயர்வாக தூக்கிபிடித்த மெட்ராஸ் கார்த்தி, இந்த படத்தில் கொம்பன் கார்த்தியாக மஞ்சள் பச்சையை தூக்கி பிடித்திருந்தாலும் அது தப்பில்லை என்பதும் இந்த திருமாவளவனுக்கு புரியாதா என்ன? முதலில் பள்ளர்கள் உங்கள் மீது அவதூறை பரப்பி வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்ய முயலுங்கள். அதை விட்டுவிட்டு சினிமாவில் கிருஷ்ணசாமியோடு தலித் கூட்டணியை உருவாக்க முயன்றால், அதை தங்களுக்கு சாதகமாக்கிவிட நினைக்க, முக்குலத்து சினிமா கலைஞர்கள் யாரும் கலைஞர் கருணாநிதி இல்லை என்பதையும் சினிமா போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும். திராணியிருந்தால், உங்கள் வாழ்வியலை பெருமையாக சொல்லி படமாக்குங்கள். அதை விட்டுவிட்டு இப்படி தரக்குறைவான அரசியலை சினிமாவுக்குள் திணிக்காதீர்கள். ஏனெனில் பல சாதி தொழிலாளர்கள் சினிமாவை நம்பி வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்பநாடு அரசநாடாகி போனாலும் 'கொம்பன்' மாபெரும் வெற்றியடைய போவது உறுதி. இவ்வேளையில் கொம்பன் கதைக்களத்தை உருவாக்கிய மருது மைந்தன் இயக்குனர் முத்தையாவிற்கு எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

மக்கள் முதல்வரால் மக்கள் தொலைக்காட்சி தடையா?

மக்கள் தொலைக்காட்சியை தமிழகமெங்கும் தடை செய்திருக்கும் சர்வாதிகார அதிமுக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும். இல்லையெனில், நாளை கேப்டன் டிவி முதல் கலைஞர் டிவி வரை ஏதோவொரு சந்தர்பத்தில் தடை செய்யப்படும் நிலை வந்தால், அதை தட்டிக்கேட்க நாதியற்று போய்விடும். 66ஏ சட்டத்தை இணையத்திற்கு மட்டும் கொண்டுவராமல், ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள தொலைக்காட்சி தொடர்பகங்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்பதை தான் இதுபோன்ற சம்பவங்கள நமக்கெல்லாம் நினைவூட்டுகின்றன. தமிழ் சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே தமிழரின் பண்பாட்டை வெளிக்காட்டும் ஒரே தொலைக்காட்சி. இங்கே, எந்த கவர்ச்சி ஆட்டத்திற்கும் கிழி கிழின்னு கண்டபடி எந்த நாலாந்தர நடிகையும் மார்க் போடவில்லை. பால் மணம் மாறாத பால்ய சிறார்களை, அரைகுறை ஆடை உடுத்தி காமரசம் சொட்ட பாடல் பாடச்சொல்லி கமகம், பொடி பொடி சங்கதி பற்றி அவா யாரும் பேசவில்லை. முக்கிய செய்திகள் என்பதை கூட முதன்மை செய்திகளென, வேட்டி, சட்டை, துண்டு, புடவையென தமிழர் உடையில் தமிழை தமிழாகவே செய்திகள் மூலம் வழங்கும் மக்கள் தொலைக்காட்சியை தடை செய்திருப்பதன் உள்நோக்கம் மிக கேவலமாக இருக்கின்றது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது போல, இதற்கான பின்விளைவுகளையும் மோசமாகவே இருக்க போகிறது என்பதையும் அதிமுக உணரத்தான் போகிறது.

சாதியை தூக்கி பிடிக்க வேண்டுமா?

சாதியை தூக்கி பிடிக்காமல் தமிழ் தேசியத்தில் கலக்கலாமென்று நினைத்தாலும் கூட, கிருஷ்ணசாமி & கோ போன்றவர்களால் பொதுவெளியில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தேவர் சாதி மீதான வன்மங்களை கண்டு மனம் கொதித்து, தடம் மாறுகிறது என்பது தான் எதார்த்தம். பல சாதிகளுக்கு பரம எதிரிகளாக முக்குலத்தோரை நினைக்க வைக்கும் முயற்சியில் பல அமைப்புகள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றன என்பதையும் பல தரவுகள் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. சாமானியனான என்னாலேயே, ஒருவாரம் காலமாகியும் கொம்பனை விட்டு வெளிவர முடியவில்லை. கொம்பன் என்பது சினிமாவுக்கான அரசியலல்ல. தனக்கான இருப்பை வெளிக்காட்டிகொள்ளும் ஒரு பூனையின் சீற்றம். இதையெல்லாம் உணராத புலியோ, பல காலங்களாய் பதுங்கியே கிடக்கின்றது.